

வெப்பக் காற்று பலூனில் பறந்த கதைகளையும் கட்டுரைகளையும் படிக்கும்போது, நமக்கும் இப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தது உண்டு. ஆனால், அதற்கான வாய்ப்பு நமக்கு எங்கே கிடைக்கப் போகிறது என்கிற எண்ணத்தில், அந்த ஆசையை மறந்தே விட்டேன். சில மாதங்களுக்கு முன்னால் தோழிகளுடன் மூணாறுக்குச் சென்றிருந்தேன். நகரைவிட்டுச் சற்றுத் தொலைவில் நாங்கள் தங்கியிருந்தோம். மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோதுதான் அந்தக் காட்சியைக் கண்டேன். உயரமான மரங்களுக்கு மேலே சிவப்பும் நீலமும் மஞ்சளும் கலந்த ஒரு வெப்பக் காற்று பலூன் மிதந்துகொண்டிருந்தது! என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அடுத்த இருபதாவது நிமிடத்தில் அந்த இடத்தை அடைந்தோம். ‘நாளை காலை அல்லது மாலை பலூனில் செல்வதற்கு இப்போதே பணத்தைச் செலுத்திவிட்டுச் செல்லலாம்’ என்றார்கள். மங்கிய ஒளியில் இருபதுக்கும் மேற்பட்டோர் பலூனில் ஏறுவதற்காகக் காத்திருந்தனர். பணத்தைச் செலுத்திவிட்டு, காலை வருவதாகச் சொல்லிவிட்டு வந்தோம். ‘ஒருவருக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாய்’ என்பது அதிகமாகத் தோன்றினாலும் வாழ்நாள் அனுபவத்துக்குக் கொடுக்கலாம் என்று எல்லாரையும் சமாதானம் செய்தேன். பலூனில் பறந்துகொண்டிருந்தபோது கயிறு அறுந்து கீழே விழுவது போன்று கனவு வந்து கொஞ்சம் பயத்தைக் கொடுத்துவிட்டது. ஆனாலும் நான் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
காலை அவர்கள் சொன்ன நேரத்தில் ஆஜரானோம். ஒரு கூடையில் பலூனைச் செலுத்தும் பைலட், கேஸ் சிலிண்டர், ஒரு ஸ்டூல் ஆகியவற்றோடு இரண்டு பேரை ஏற்றிக்கொள்கிறார்கள். சதுர வடிவக் கூடையின் நான்கு பக்கங்களிலும் தடிமனான கயிற்றைக் கட்டியிருக்கிறார்கள். கூடைக்கு மேலே பலூன். சிலிண்டரிலிருந்து வெப்பம் வேகமாகச் செலுத்தப்படும்போது, சூடான காற்று பலூனை மேலே தூக்குகிறது. பலூன் மேலே மெதுவாகப் பறக்க ஆரம்பிக்கிறது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வெப்பத்தைக் குறைக்க, காற்று குறைந்து பலூன் கீழே இறங்குகிறது. நானும் தோழியும் கூடைக்குள் இறங்கினோம்.
எங்கள் தலைகளில் ஆளுக்கு ஒரு தொப்பி அணிவித்தார் பைலட். சட்டென்று வெப்பம் அதிகமாக, பலூன் மெதுவாக மேலே சென்றது. கீழே நின்றிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருவம் சிறுத்துப் போனார்கள். உயரத்திலிருந்து மலையையும் மரங்களையும் இளஞ்சூரியனையும் பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பத்திரமாகத் தரைக்கு வந்துசேர்ந்தோம். அப்போதுதான் கவனித்தேன், இரண்டு அல்லது மூன்று டிரிப்புக்கு ஒரு முறை சிலிண்டரை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது கட்டணம் அதிகம் என்று தோன்றவில்லை. பாதுகாப்பான அந்த பலூன் பயணத்தை நினைத்தாலே இனிக்கிறது! - விஜயா