

வீடென்று எதனைச் சொல்வீர்
அது இல்லை எனது வீடு
ஜன்னல்போல் வாசல் ஒன்று
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை ஒன்று
புணர்வது மற்றுமொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலைமீது கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
என்றும்
கவியெழுதி விட்டுச் செல்ல
கனவுகள் மடித்து வைக்க
வாய்பிளந்து வயிற்றை எக்கி
கால்சரிந்த பீரோ உண்டு
வீடென்று எதனைச் சொல்வீர்
அது இல்லை எனது வீடு - மாலன்
வேலை தேடி சென்னை வந்து வீடின்றி தவித்த தமிழ் எழுத்தாளர்கள் மேன்ஷனில் தங்கி வாழ்க்கையைக் கழித்திருக்கிறார்கள். அதே போல மேன்ஷனில் தங்கியிருந்த எழுத்தாளர் சி. மோகன் தன் கவிதைத் தொகுப்புக்கு வைத்த தலைப்பு, ‘எனக்கு வீடு. நண்பர்களுக்கு அறை.’
புதுமைப்பித்தன் சென்னையில் தான் வாழ்ந்த ஒண்டுக்குடித்தன அனுபவத்தை, ‘ஒருநாள் கழிந்தது’ என்கிற சிறுகதையில் வர்ணிப்பதைப் படிக்க வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
“சென்னையில் ஒண்டுக் குடித்தனம் என்பது ரசமான விஷயம். குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் திருக்கழுக்குன்றத்துக் கழுகு என்று வீட்டுச் சொந்தக்காரன் நினைத்துக் கொள்வானோ என்னமோ?… உள்ளே வீட்டின் பாகவசதிதான் விசித்திரமாக இருந்தது. முன் பக்கம் ஒற்றைச் சன்னல் படைத்த ஒரு சிற்றறை. அகற்கப்புறம் எங்கேயோ பல கட்டுகள் தாண்டி மற்றோர் அறை. அதுதான் சமையல் வகையறாவுக்கு.
முதல் அறை படிக்க, படுக்க, நாலுபேர் வந்தால் பேச. இவை எல்லாவற்றிற்கும் பொது இடம். முதலில் முருகதாசர் பொருளாதாரச் சலுகையை உத்தேசித்தே அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால் தமக்கும் தம் சகதர்மிணிக்கும் இப்படி நிரந்தரமான பிளவு இருக்கும் என்று சிறிதும் எட்டி யோசிக்கவில்லை. மேலும் அவர் யோசிக்கக்கூடியவரும் அல்லர்.
பக்கத்தில் இருந்த அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு சமையல் பகுதியை நோக்கிப் பிரயாணமானார். இடைவழியில் குழாயடியில் உள்ள வழுக்குப் பிரதேசம், அடுத்த பகுதிக்காரர் விறகுக் கொட்டில் முதலிய விபத்துகள் உள்ள ‘பிராட்வே’யை எல்லாம் பொருள்படுத்தாமல் ஒருவாறு வந்து சேர்ந்தார்.”
புதுமைப்பித்தன் போன்றவர்கள் தங்களின் வறுமையை இலக்கியமாக்கியபோது, ஆஹா என்று அதைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள்! வாழ்ந்து பார்த்தால்தான் கஷ்டம் புரியும்.
‘ஒண்டுக் குடித்தன கூட்டுக்குடும்பி கண்டுபிடித்தது ரப்பர் வளையல்’ என்கிறார் கவிஞர் நீலமணி. சிருங்கார ரஸ சாயல்கொண்ட இந்தப் புதுக்கவிதையில் ஒளிந்திருப்பது ஆற்றாமையா, ஆத்திரமா? இரண்டும்தாம்.
சென்னையில் ஒண்டுக்குடித்தன வீடு ஒன்றில் வசித்தவர்தான் ஜெயகாந்தன். அவ ருடைய கதை மாந்தர்கள் பலரும் இங்கேதான் உலவினார்கள்.
‘ஒரு கலைஞனை வீடுதான் முதலில் கொல்கிறது’ என்பார் மறைந்த எழுத்தாளர் அஃக் பரந்தாமன். வெ.சாமிநாத சர்மா தொடங்கி எத்தனையோ ஏழை எழுத்தாளர்கள் வீடின்றி அலைந்தது தமிழ்நாட்டில் அரங்கேறிய சோக நாடகம்.
ஒரு பழைய படம். சி.சு.செல்லப்பாவும் அவர் மனைவியும் வீட்டுத் திண்ணை ஒன்றில் உட்கார்ந்திருப்பார்கள். இளைத்துத் துரும்பாகிக் கண்களில் ஏக்கம் தவிர ஏதுமின்றிக் காட்சியளிப்பார் செல்லப்பா. பரிதாபமாக இருக்கும். வீட்டுக்கு உள்ளே அவர் அச்சிட்டு விற்காத புத்தகங்கள் அடைத்துக் கொண்டு, அவர்கள் இருவரையும் திண்ணைக்கு அனுப்பிவிட்டதுபோல் தோன்றும்.
கனவு இல்லம்: தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள எழுத்தாளர்களுக்கான ‘கனவு இல்லம்’ திட்டம் பாராட்டுக்குரியது. எழுத்தாளர்களின் கனவை அறிந்து, தகுதி அறிந்து எழுத்தாளர்களின் குறைந்தபட்ச தேவையைக் கணக்கில் கொண்டு கனவு இல்லம் கட்டிக்கொடுத்தால் போதும். சொல்லேர் உழவர்களின் நெஞ்சம் குளிரும். அறிஞர் உலகம் வாழ்த்தும்.
என் தந்தை ஓர் ஏழை ஆசிரியர். சொற்ப வாடகை. மிகவும் வசதிகுறைவான வீடுகளில் தாம் வசித்தோம். ஆனாலும் குதூகலத்துக்கும் கொண்டாட்டத்திற்கும் குறைச்சல் இல்லை.
‘கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்கிற ஒளவையின் பாடல்வரிகள் பெரியவர் களுக்கானதே ஒழிய, குழந்தைகளுக்கானது அல்ல. குழந்தைகளுக்கு வறுமையின் வலி புரிபடாது. மழைக்காலத்தில் வீடு ஒழுகுவது பற்றிய கவலையின்றி, ஒழுகும் இடங்களில் எல்லாம் ஓடி ஓடி பாத்திரங்களை வைப்பது எங்களுக்குப் பிடித்த விளையாட்டு.
தெருக்களில் மனிதர்கள் வசிப்பதாகத் தோன்றுகிறதே ஒழிய உண்மையில் வீடுகள்தாம் வசிக்கின்றன. ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி தமது ‘வெண்ணிற இரவுகள்’ கதையில் வீடுகள் பேசுவதாக எழுதியிருப்பார். வேடிக்கையாக எழுதப்பட்டதல்ல. உண்மையில் வீடுகள் பேசுகின்றன.
அவர் எழுதுகிறார், ‘வீடுகளும்கூட என் நண்பர்கள்தாம். தெருவில் நான் போகும்போது அவை யாவும் என்னை நோக்கி முன்னால் ஓர் அடி எடுத்து வைப்பது போலிருக்கும். சன்னல்கள் யாவற்றிலும் என்னை உற்று நோக்கியவாறு அவை வாய்திறந்து என்னுடன் பேசுவது போலவே தோன்றும்.’
தஞ்சை ப்ரகாஷ் தனது ‘கரமுண்டார் வூடு’ நாவலில் தஞ்சை மாவட்டத்தில் உஞ்சினி என்கிற கிராமத்தில் ஆற்றோரம் இருந்த அவரது பூர்விகமான கரமுண்டார் வூடு பற்றிய வர்ணனை வாசகனை மிரளவைக்கும்.
“எட்டுக்கட்டு வூடு. ஆத்துக்குள்ளார பாதி வூடு நிக்கும். ஆத்துக்குள்ள வூட்டுப் பின்கட்டு முழுதும் நிக்குது. பின்னால தொழுவத்துல நூறு மாடு கட்டிக் கிடந்த இடம். அதுக்குப் பின்னால காவிரி இப்பமும் நுங்கும் நுரையுமாக வீட்டை இன்னும் நனைக்குது. மோதிப் பாஞ்சு ஓடுது. வெறும் காரைக்கட்டுதான் நூறு வருஷ வூடு. முட்டையும் கடுக்காவும் கருப்பட்டியும் அரைச்சுக் கட்டுன வூடு. வூட்டுச் செவுரு எல்லாம் ஆத்துக்குள்ள. எப்பமும் முங்கி முங்கிப் பாசி ஏறி கறுப்படிச்சி மறுபடி பாசி ஏறி கரமுண்டார் வூட்டுச் செவுரு மேல வீசுற தண்ணிச் சத்தம். வீட்டுக்குள்ற சளப்பு சளப்புன்னு கேட்கும். வூட்டுக்குள்ள நாலு முற்றம். முற்றத்தின் மேல் காத்துப்பந்தல். பத்து ஜன்னல் பெரிசு பெரிசா. அடுக்கடுக்கா பத்தாயம்...”
கிராமத்தில் இன்னும்கூட பழைய நினைவு களைத் தாங்க முடியாமல் தள்ளாடி நிற்கும் வீடுகளைப் பார்க்கலாம். கம்பி வைத்த நீண்ட முற்றங்கள் வழியாக வானம் வீட்டுக்குள் வந்திருக்கும். கம்பி வழியே விரலை நீட்டி ராத்திரியில் நட்சத்திரங்களைப் பறித்துவிடலாம் போலத் தோன்றும்.
வீடு பற்றி கவிஞர் ரவி சுப்பிரமணியன் எழுதி அவரே மெட்டமைத்த புதுக்கவிதையை இலக்கியக் கூட்டங்களில் ஒரு யுகாந்தர ஏக்கத்துடன் பாடுவார்.
அந்தி மறைந்த நேரம்
நீயும் இல்லை
வாசலிலேயே காத்திருந்தேன்
நெடுநேரம்
என்ன செய்வது எனத் தெரியாமல்
அந்தப் புராதன விளக்குப் பிறையில்
ஒரு சுடரை மட்டும்
பொருத்திவிட்டுத் திரும்பினேன்!
சிதிலமடைந்த பின்னரும் புராதன விளக்குப் பிறைகளில் பொருத்தப்பட்ட சுடரின் புகைபடிந்த கருமையே சுடராக உறைந்து பொலிகிறது, தயிர்க்காரம்மாளின் கோடுகளுடன்!
(பேச்சு தொடரும்)