

நான் சிறுவனாக இருந்தபோது என் கிராமம் கண்கொடுத்த வனிதம், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தது. என் கிராமத்தில் இருந்துதான் இந்தப் பேருலகத்திற்கான பாதையே தொடங்குகிறது!
முதல் சினிமாவை எந்த வயதில் பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால், பக்கத்து ஊருக்கு அம்மாவுடன் கூண்டுவண்டியில் அமர்ந்து சென்றது, தூசுபடர்ந்த படத்தைப் போல தெளிவற்ற நிலையில் நினைவுக்கு வருகிறது. கொரடாச்சேரி ஒளவையார் தியேட்டர், கூத்தாநல்லூர் ஜப்பார் தியேட்டரில்தான் நானும் எங்கள் கிராமமும் அதிகமாகப் படங்கள் பார்த்திருப்போம். அம்மையப்பன் அருகில் இருந்தாலும் அங்குள்ள அம்மையப்பா தியேட்டருக்கு யாரும் போகமாட்டோம். அது எங்களுக்கு எட்டாது.
மூன்று தியேட்டர்களில் அடுத்து என்ன படம் என்பதை போஸ்டர் ஒட்ட வருகிறவர்கள் சொல்வார்கள். பசை வாளியுடன் சைக்கிள் கேரியரில் போஸ்டர்களைக் கட்டிக்கொண்டு வருவார்கள். ‘இன்று முதல்’ என்று அந்த போஸ்டரில் பெரிய எழுத்துகளில் இருக்கும். இரண்டு, மூன்று நாள்களிலேயே ஒரு படத்தைத் தூக்கிவிடுவார்கள். அதற்குள் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும். சண்முகம் சைக்கிள் கம்பெனியில் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு டபுள்ஸ் போவார்கள்.
நாங்கள் வெள்ளையாற்றங்கரை வழியாக லெட்சுமாங்குடி செல்வியில் படம் பார்க்க நடந்தே போவோம். ‘எப்படா தியேட்டர் வரும்’ என்று மனம் தவிக்கும். என் பாட்டி சொல்வார், ‘கண்ணோட வருது காட்சி.’ அப்படித்தான் இருக்கும். சினிமா பார்ப்பது உலகத்தையே பார்ப்பது போன்ற மகிழ்ச்சி. வீட்டுக்குத் திரும்பும்போது பார்த்த படம் பற்றிய பேச்சோடு நடையைக் கட்டுவோம்.
முக்கூட்டு கடைத்தெருதான் ஊருக்கு ரெங்கநாதன் தெரு. அதிகம் டீக்கடைகள், மளிகைக் கடைகள், சலூன், காய்கறிக்கடை எல்லாம் இருக்கும். கடைக்குப் பின்புறமாக வயல்கள். விவசாயக் காலத்தில் நெற்பயிர் செழித்திருக்கும். கோடைக்காலத்தில் அந்த வயல்களில்தாம் நாடகம், பொம்மலாட்டம் நடக்கும். சினிமாவுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவை இவைதான்.
ராதா கடைக்குப் பக்கத்தில் சுந்தரத் தெலுங்கினில் பேசிக்கொண்டு தட்டுமுட்டுச் சாமான் களோடும் குழந்தை குட்டிகளோடும் ஒரு குடும்பம் வந்திறங்கியது. தமிழ், ஆங்கில நாளிதழ்கள் ஒட்டப்பட்ட கூண்டுவண்டி. அவர்கள் வருவது எளிதாகத் தெரிந்துவிடும். அது ஓர் ஒத்தை மாட்டுவண்டி. பொருள்களும் குழந்தைகளும் வண்டியில் இருப்பார்கள். குடும்பத் தலைவர் வண்டிக்குப் பின்னால் நடந்து வந்துகொண்டிருப்பார். ஊருக்குள் வண்டி வரும்போது அதன் பின்னாலேயே ஓடுவோம்.
அன்று மாலையே பொம்மலாட்டம் நடந்தது. நாங்களும் அன்றே ஆஜராகிவிட்டோம். ஐம்பது காசு டிக்கெட். எப்படியோ காசைப் புரட்டிக்கொண்டு நடையைக் கட்டினோம். அவர்கள் பத்து நாள்கள் தங்கியிருப்பார்கள். சரியான வசூல் கிடைக்கவில்லை என்றால் பக்கத்து ஊர்களுக்கு வண்டியைக் கட்டிவிடுவார்கள். நல்ல வருமானம் கிடைத்தால் ஒரு மாதம்கூடத் தங்குவார்கள். அங்கேயே சமைத்துச் சாப்பிட்டுக்கொள்வார்கள்.
நல்லதங்காள் கதை. பொம்மைகள் வந்து பேசிக்கொண்டிருந்தன. ஒரு வெள்ளைத் திரையில் அழுவதும் சிரிப்பதும் கையை நீட்டிப் பேசுவதுமாகப் பொம்மைகள் செய்த பாவனைகள் அற்புதமாக இருந்தன. திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை அறிவதிலேயே எங்களுக்குக் கவனம் இருந்தது. நல்லதங்காள் குழந்தைகளை இழந்த பிறகு அழும் காட்சியில் பொம்மைகள் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அழுத காட்சி கண்ணீரை வரவழைத்துவிட்டது. அடுத்து பாண்டவர் கதை. அந்த வயதில் எதைப் பார்த்தாலும் அதிசய மாகத்தான் இருந்தது. அதற்குப் பிறகு ஊர்ப்பக்கம் பொம்மலாட்டத்தைப் பார்க்க முடியவில்லை.
யூரியா கம்பெனிகள் விவசாயம் தொடர்பான டாகுமென்டரி படங்களைக் கடைத்தெருவில் வேனை நிறுத்தித் திரையிடுவார்கள். எந்த பூச்சிக் கொல்லி சிறந்தது, நடவு நட்ட எத்தனை நாள்களில் உரம் அடிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல தகவல்களை வேளாண் வல்லுநர்கள் அந்தப் படத்தில் பேசுவார்கள். விவசாயிகளுக்கான விவரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் கொடுப்பார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை யாக இருந்த திட்டாணிமுட்டம் கிராமத்தில் சீர்திருத்த கம்யூனிச சிந்தனையுள்ள நாடகங்களை அரங்கேற்றம் செய்வார்கள். அதை ஆற்றுமணலில் அமர்ந்து பார்ப்போம். அந்த நாடகங்களில் நிலச்சுவான்தார்களின் அடக்குமுறையும் காதல் கலப்பு மணங்கள் பற்றியும் கதை அமைந்திருக்கும்.
நாடகம் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும். கோயில் திருவிழா என்றாலே நாடகம்தான் அப்போது. காரக்கோட்டை சத்தியமூர்த்தி, அரிச்சந்திரன் வேடத்தில் நடிப்பார். ராம, லவகுசா, அரிச்சந்திர மயான காண்டம் நாடகங்கள் மாறாதவை. நாடகம் பற்றிய தகவலைக் கூண்டுவண்டியில் மைக் செட் கட்டி ஊர் ஊராகச் சொல்லிக்கொண்டு போவார்கள். நோட்டீஸ்களைத் தெருக்களில் பறக்கவிடுவார்கள். வீட்டுச் சுவர்களிலும் ஒட்டுவார்கள்.
சரியாக நள்ளிரவு 12 மணிக்கு நாடகம் தொடங்கும். நாங்கள் தனபாக்கியம் பாட்டியுடன் பத்து மணிக்கே போய்விடுவோம். நிலக்கடலையும் ஐஸும் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்போம். நல்ல தூக்கம் வரும்போது திரைமறைவில், ‘ராமா.... ராமா....’ என்று கத்துவார்கள். அடுத்து பபூன் வந்து சிரிப்புமூட்டுவார். தூக்கம் கலைந்து உட்கார்வோம். ஆற்று மணலாக இருப்பதால் சுகமான தூக்கம். மெல்லியப் பூங்காற்றும் மிகத் தாராளமான இடமும் எல்லாரையும் சாய்த்துவிடும்.
நாடகத்தின் மீதான ஆசைகள் மறைந்து கொண்டிருந்தன. கோயில் திருவிழாக்களில் வீடியோ எட்டிப் பார்த்தது. டவுனிலிருந்து வீடியோ டெக்கை எடுத்துவந்து மூன்று, நான்கு படங்களைத் திரையிடு வார்கள். டெக் என்பது விசிஆர். அதற்காகப் பல நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தி, எந்தப் படத்தைத் திரையிடுவது என முடிவு செய்வார்கள். முதல் இரண்டு படங்கள் சாமிப் படங்களாக இருக்கும். அடுத்தடுத்த படங்கள் சாதாரண படங்கள். தெருமுனையில் வைத்து வீடியோ திரையிடுவார்கள். உடனே ஒரு சிறு கடைத்தெருவே அங்கே உருவாகிவிடும். இரவு முழுவதும் படத்தைப் பார்த்துவிட்டு, பகலில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தூங்கிக்கொண்டிருப்பார்கள்!
கோடை விடுமுறை. அம்மாவுடன் தஞ்சாவூர் போயிருந்தேன். மோத்திரப்பாச் சாவடியிலிருந்து நடக்கும் தூரத்தில், ஆற்றின் கரையைக் கடந்தால் வந்துவிடும் அருள் தியேட்டர். அந்த தியேட்டரில் முதல் காட்சி ‘திரிசூலம்’ படம் பார்த்தேன். ஜீப்பில் போய்க்கொண்டே சிவாஜி பாடிச் செல்லும் காட்சி இப்போதும் மனத்திரையில் ஓடுகிறது.
இப்படிக் கடைசி வரை சினிமா எங்கள் ஊருக்கு வரவேயில்லை. நாங்கள்தாம் சினிமாவைத் தேடி ஓடினோம்!