இசை உலகைக் கலக்கும் பெண்கள் குழு!

இசை உலகைக் கலக்கும் பெண்கள் குழு!
Updated on
3 min read

இளையராஜா பாட்டுகள் வேண் டுமா? பாட்டுகள் உண்டு. பல குரல்களில் பேசி அசத்தும் மிமிக்ரி வேண்டுமா? மிமிக்ரியும் இருக்கிறது. அன்றாட அலுவல்களின் அலுப்பிலிருந்து விடுதலை பெற்று, துள்ளல் நடனம் ஆட டிஜே இசை வேண்டுமா? அதுவும் இருக்கிறது. மொத்தத்தில் இசை மழையில் நனை வதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது ‘ராக்கிங் லேடிஸ் பேண்ட்.’ இசைக் குழுவில் உள்ள அனைத்துக் கலைஞர்களும் பெண்கள் என்பதைக் குழுவின் பெயரே சொல்லிவிடுகிறது.

பெண்களை மட்டுமே வைத்து ஓர் இசைக் குழுவை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட காலமாகவே தனக்கு இருந்துவந்ததால், ‘ராக்கிங் லேடிஸ் பேண்ட்’ என்கிற இசைக் குழுவை ஆரம்பித்ததாகச் சொல்கிறார் நிறுவனர் ரஞ்சிதா தேவி. மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட ரஞ்சிதா, ‘விருட்சா’ அறக்கட்டளையின் பொறுப்பாளராக உள்ளார். வணிக நோக்கு மட்டுமன்றி, இந்த இசைக் குழுவின் மூலம் சமூகத்துக்குப் பயனளிக்கக்கூடிய சேவைகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைக்கு வயதில்லை! - ராக்கிங் லேடிஸ் பேண்டின் ஆஸ்தானப் பாடகரான பவித்ரா, “முதலில் இசைக் குழுவில் இருப்பவர்கள் எல்லாம் பெண்கள் என்று சொன்னதும் என் உற்சாகத்துக்கு அளவே இல்லை. இசைக் குழுவில் முழுக்க முழுக்கப் பெண்களே இருக்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காகவே இந்தக் குழுவில் இணைந்தேன். குழுவில் உள்ள அனைவரும் என்னைவிட இளையவர்கள். பெரும்பாலான வர்கள் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எங்கள் முதல் நிகழ்ச்சியில் சிறு பதற்றத்தைக்கூட நான் அவர்களிடம் பார்க்கவில்லை. எல்லாரிடத்திலும் அவ்வளவு தன்னம்பிக்கை நிரம்பியிருந்தது. இசைக்கு வயது முக்கியமல்ல, திறமையே முக்கியம் என்கிற என்னுடைய நம்பிக்கை இங்கே வலுவாகியிருக்கிறது.

பிற இசைக் குழுக்களை எடுத்துக் கொண் டால் பெரும்பாலானவர்களுக்குப் பணமும் புகழும்தான் இலக்காக இருக்கும். ஆனால், நாங்கள் இதில் சற்று வேறுபடுகிறோம். எதிர் காலத்தில் இந்த இசைக் குழுவின் மூலம் நாங்கள் ஈட்டும் வருமானத்தில் 10 சதவீதத்தை முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதுவே ’ராக்கிங் லேடிஸ் பேண்டி’ல் நானும் ஒரு அங்கமாகக் காரணமானது. இந்த இசைக் குழுவின் மூலம் என் திறமையை நிரூபித்து, அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிச் செல்ல விரும்புகிறேன்” என்று சொல்லும் இவரின் விருப்பத்துக்குரிய பாடகர்கள் சித்ரா, ஷ்ரேயா கோஷல்.

தீவிரத் தேடல்: ராக்கிங் லேடிஸ் பேண்டின் நிறுவனரான ரஞ்சிதா தேவி, “இசை நிகழ்ச்சிகளில் இசைக் கருவிகளை இசைப்பதில் தொடங்கி, மேடையில் பெரும்பாலும் ஆண்களே நிறைந்திருப்பார்கள். பாடுவதற்கு மட்டுமே பெண்கள் இருப்பார்கள். இந்தப் பாகுபாடு என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. கரோனா காலத்தில் அந்த எண்ணம் தீவிரமானது. பெண்களை மட்டும் வைத்து இசைக் குழுவை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். இது தொடர்பாகக் கடந்த மூன்று வருடங்களாகத் தீவிரத் தேடலில் இறங்கினேன். அதன் பலனாக முதலில் கிடைத்தவர் டிஜே தீபிகா. அடுத்து பல குரல் வித்தகி நெல்லை மதி அறிமுகமானார்.

தொடர்ந்து இசைக் குழுவுக்கு பவித்ரா, மெட்லின், ஸ்வாதி, பிரியதர்ஷினி, மைதிலி, ஸ்வேதா ஸ்ரீ, திஷாதனா ஆகியோர் வந்துசேர்ந்தனர். இறுதியாக, புகழ்பெற்ற பாடகரான ‘குக் வித் கோமாளி’ புகழ் ஆண்ட்ரினா வந்துசேர, ‘ராக்கிங் லேடிஸ் பேண்ட்’ உருவாகிவிட்டது. தமிழ்நாடு திரைப்படப் பத்திரிகையாளர் சங்கத்துக்காக நடத்திய நிகழ்ச்சிதான் ராக்கிங் லேடிஸ் பேண்ட் நடத்திய முதல் நிகழ்ச்சி” என்கிறார். ‘ராக்கிங் லேடிஸ் பேண்ட்’ திறமையை நேரில் கண்டவர்கள் மூலமே இந்தக் குழு பிரபலமாகி வருகிறது. ஒருபுறம் வணிகரீதியில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தாலும் இன்னொருபுறம் முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் சேவை அடிப்படையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகச் சொல்கிறார் ரஞ்சிதா.

ரஞ்சிதா தேவி
ரஞ்சிதா தேவி

இளைஞர்களுக்குப் பொறுப்பு அதிகம்: ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால், நிறைய இல்லங்களுக்குச் சென்று இசையின் மூலம் அவர்களை மகிழ்விக்க முடியும் என்று சொல்லும் ரஞ்சிதா, தீபாவளிக்கு மதுரையில் உள்ள குருவித்துறை, வாடிப்பட்டி போன்ற இடங்களில் விவசாயிகளுக்காக இசை நிகழ்ச்சி நடத்தி, பரிசுகளையும் கொடுத்ததில் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலாது என்கிறார்.

இந்தத் தலைமுறை இளைஞர்கள் பொறுப்பாக இருப்பதில்லை, நிதானமாக நடந்துகொள்வதில்லை என்று சொல் வதை மறுக்கிறார் ரஞ்சிதா. “நான் பார்க்கும் இளைஞர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகவும் பொறுப்பாகவும் செயல்படுவதைக் கண்டு ஆச்சரியமடைந்திருக் கிறேன். தாங்கள் செய்யும் வேலை மீது மிகுந்த மரியாதையும் நேசமும் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பல செயல் களைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

முழுக்க முழுக்கப் பெண்களை வைத்து இசைக் குழுவை உருவாக்கப்போகிறோம் என்று நான் கூறியபோது, ‘இலவசப் பேருந்து, உரிமைத் தொகைன்னு எல்லாமே உங்களுக்குக் கிடைத்தாலும் இசைக்குழுவிலும் பெண்கள் குழுன்னு வந்துட்டீங்களா? ஆனா, பெண்கள் இசைக் குழுவெல்லாம் நீண்ட காலம் நிலைக்காது. காணாமல் போயிரும்’ என்று எங்களை விமர்சித்தவர்கள்தாம் அதிகம். அவர்கள் அப்படிச் சொல்லிவிட்டார்களே என்று நாங்கள் சிறிதும் வருத்தப்படவில்லை. பெண்களுக்கு அங்கீகாரம் எளிதில் கிடைத்து விடாது என்பதை நாங்கள் அறிந்தே இருந்தோம். அவர்களுக்கு எங்கள் வளர்ச்சி மூலம் பதில் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதைச் செய்துகாட்டிக் கொண்டும் இருக்கிறோம்” என்று சொல்லும் ரஞ்சிதா, உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று இந்தப் பெண்கள் குழு நிகழ்ச்சி நடத்த வேண் டும் என்பதே லட்சியம் என்கிறார்.

- indumathy.g@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in