

தீபாவளியை ஒட்டி சென்னை தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. பட்டணம் கிராமங்களுக்குப் போய்விட்டது. தஞ்சாவூரில் படித்து புதுவைக்குச் சென்றுவிட்ட எழுத்தாளர் பிரபஞ்சன், அடிக்கடி தஞ்சை வந்து ப்ரகாஷ் நடத்திய யுவர் மெஸ்சில் தங்கிச் செல்வது வழக்கம். “சட்டை உரித்துப் போவதற்காகத் தஞ்சாவூருக்கு வந்திருக்கிறேன்!” என்பார் மெல்லியச் சிரிப்புடன் பிரபஞ்சன். நான் சென்னை வந்து 30 ஆண்டுகளுக்கு மேலான போதிலும் ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறையாவது தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்று ‘சட்டை உரித்துக் கொண்டு’ வருவது வழக்கம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டபோது என் நண்பரும் என்னுடன் வந்தார. ஒரத்தநாடு போகிற வழியில் அந்தக் குக்கிராமம், நகரத்தின் ஒப்பனைகள் இன்றி இருந்தது. நான் படித்த பள்ளி. மூங்கில் பிளாச்சு வகுப்பறை. தெருக்கோடியில் நாங்கள் குடியிருந்த வீடு. நால்ரோடு என்று அழைக்கப்படும் கடைத்தெரு. தேநீர்க் கடைகள். கண்ணாடிப் பெட்டிக்குள் கார சேவு, பஜ்ஜி, போண்டா வகையறாக்கள்.
ஒரு மளிகைக் கடை, பெட்டிக்கடை, புராதனக் காலத்து முடி திருத்தகம். நீண்டு செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் தோப்பும் துரவுமாகப் பேருந்தின் சன்னல்வழி என் பால்யத்தின் பத்தாண்டுகளைச் சட்டென்று கடந்துவிடலாம். என்னோடு ஆரம்பப் பள்ளியில் ஒன்றாகப் படித்த பரஞ்சோதி பக்கத்து ஊரில் வேலை செய்துகொண்டு, கிராமத்தில் நிலபுலன்களைக் கவனித்துக்கொண்டிருந்தான். நாங்கள் போனபோது அவன் மட்டும்தான் இருந்தான். அவன் மனைவியையும் குழந் தைகளையும் காணவில்லை. மாட்டுத் தொழுவத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்தான். உடம்பெல்லாம் வைக்கோலும் தூசியும்.
பசுஞ்சாணமிட்டு மெழுகிய பெரிய திண்ணை. நாழி ஓடுகள் வேய்ந்த வீடு. “பரஞ்சோதி எப்படி இருக்கே?” “ஆச்சரியமா இருக்கே! என்ன திடீர்னு…? பங்குனி உத்தரம்கூட அடுத்த மாசம்தானே வருது?” “ஏதோ போகவேண்டுமென்று தோன்றியது வந்தோம். அது சரி, வீட்டில் நீ மட்டும் தனியாக எப்படி இருக்கே?” “தனியாகவா? கிராமத்துல யாரும் தனியா இருக்க முடியாது. ஒருத்தரும் இல்லேன்னாலும் உழவு மாடுகிட்ட பேசிக்கிட்டு இருப்போம்!” “என்ன அருமையாகச் சொல்லிவிட்டாய் பரஞ்சோதி!” “அட, போடா! உனக்கு எல்லாமே இங்க அதிசயம்தான்! கொஞ்சம் இரு வரேன்!”
ஒரு பெரிய தொரட்டுக் கம்புடன் வெளியே போனான். திரும்பி வரும்போது ஒரு செய்தித்தாளில் கருநீலத்தில் பளபளவென்று நாவல் பழங்கள்! கொல்லைப்புறம் நடந்தோம். தென்னை மரங்களில் இளநீர் குலைகுலையாகக் காய்த்துத் தள்ளியிருந்தது! கொய்யாவும் மாவும் கைக்கெட்டும் தூரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. பரஞ்சோதி இளநீர்க் காய்களைச் சீவித்தள்ளிக் கொண்டிருந்தான். குளிர்ச்சியும் சுவையும் மிகுந்த இளநீர்! நண்பருக்கு நான் என் பால்ய காலத்தின் மாயாலோகக் கதவுகளைத் திறந்துவிட்டேன். வாய்க்காலில் ஒரு பக்கம் புகுந்து மறுபக்கம் வருவது, வயல்வெளியில் பசங்களுடன் அடித்த கொட்டம், குளத்தில் இறங்கி மீன்பிடித்தது, வரப்போரம் சூரியகாந்திப் பூக்களின் வரிசை.
இறந்துபோன என் தம்பி, அடையாளம் இழந்துபோனவர்கள், வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துகொண்டவர்கள், காதலில் தோற்று தற்கொலை செய்துகொண்டவர்கள், ராணுவச் சேவைக்கு ஊரைவிட்டுப் போனவர்கள், இரவில் குதிரையில் ஊரைச் சுற்றிவரும் அய்யனார், ஆடு வெட்டும் திருவிழா, பள்ளி வாழ்க்கைக் கதாநாயகிகள் பற்றியெல்லாம் கொட்டகையில் குந்தியிருந்து நான் பேசுவதை, பசு ஒன்று கழுத்து மணியை அசைத்தபடி ஆமோதித்துக் கொண்டிருந்தது.
வயல்காட்டில் வேப்பமரக் குச்சியை ஒடித்துக் கடித்தபடி பல் தேய்த்தோம். தபதபவென விழுந்து கொண்டிருந்த பம்புசெட் தண்ணீர்த் தொட்டிக்குள் மூழ்கினோம். யார் வீட்டிலிருந்தோ சாப்பாடு வந்திருந்தது. சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித் தூக்கம். “இன்னிக்கு ராத்திரி மாந்தோப்பில் தூங்குவோம். அங்கே பெஞ்சு போடச் சொல்லி இருக்கேன்.” நாங்கள் மாந்தோப்புக்குப் போகும் முன்னதாகவே டார்ச் லைட், போர்வை, தலையணை, குடிநீர், வெற்றிலை, ஊதுவத்தி சகிதம் எங்களை வரவேற்றது மாந்தோப்பு. சிள்வண்டுகளின் ரீங்காரம். மாந்தோப்பு வாசனை. மெல்லிய தென்றல். பழந்தின்னி வெளவால்கள் மாம்பழங்களைக் கடித்துக் கடித்து எங்கள் மீது போட்டுக் கொண்டிருந்தன.
கண்ணுக்கெட்டிய தொலைவில் மெல்லிய சிம்னி வெளிச்சம். காற்றில் மிதந்துவரும் ஆடுகளின் தோல் மணம். நடுநடுவே அவற்றின் ‘மே மே’ என்கிற குரல்கள். “அங்கே கீதாரிகள் கிடை போட்டிருக்கி றார்கள்!” என்று சொன்னான் பரஞ்சோதி. புலர்காலைப் பொழுதில் நாங்கள் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். “எலேய் ராமு” என்று ஒருவர் குரல்கொடுக்க, கூட்டத்திலிருந்து ஒரு பெரிய ஆடு ஓடிவந்து பணிவோடு நின்றது. “இது கோயிலுக்கு நேர்ந்த கிடாங்க” என்றார் கரகரத்த குரலில்.
“எல்லா ஆடுகளுக்கும் பெயர் உண்டா?” “உண்டுங்க. கந்தர்வக்கோட்டையிலிருந்து கால்நடையாகவே கூட்டி வாரோம். வெள்ளாமைக்குப் பிந்தி இந்த மாதிரி வயல் களில் கிடை போடுவோம்.” அவற்றின் தீனி, மருந்துகள் பற்றி எல்லாம் விளக்க மாகச் சொல்லி வந்தவர், கோயிலுக்காகவோ கறிக்காகவோ அவற்றைப் பிரிய நேர்கையில் கண்ணீர் விடுவதையும் சொன்னபோது, போர்த்துக்கீசிய எழுத்தாளர் பாவ்லோ கொய்லோவின் ‘தி அல்கெமிஸ்ட்’ நாவலில் சாண்டியாகோ என்கிற மேய்ப்பன் கதாபாத்திரத்தை நேரில் காண்பதுபோல இருந்தது.
‘ஆளுக்கொரு கிடையை மேய்த்துக்கொண்டு நாமும் கிளம்பிவிடலாம்போல் இருக்கு’ என்றார் நண்பர். அந்த மனிதர்களுக்கோ ஆடுகளுக்கோ கொடுப்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை. கோயிலுக்கு நேர்ந்துவிட்ட ராமுவின் தலையில் முத்தமிட்டேன். சென்னை மீண்ட பிறகும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் “மறுபடி கிராமத்துக்குப் போகணும்” என்பார் நண்பர். நான் போக விரும்பவில்லை. இப்பவும் கிராமத்து வாய்க்கால் மதகுகளில் தண்ணீர் பாய்ந்து கொண்டுதான் இருக்கிறது. மாமரங்கள் பூவும் பிஞ்சுமாகக் காய்த்துக் குலுங்கியபடிதான் நிற்கின்றன. சூரியகாந்திப் பூக்களும் வரப்போரம் மலர்ந்து வளர்ந்து சிரிக்கின்றன.
பரஞ்சோதிதான் இல்லை.
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com