

மிசோரம் மாநிலத்தின் சிறிய மலைக் கிராமம் ‘பக்தாங்’ உலக அளவில் புகழ்பெற்றது. காரணம், அந்தக் கிராமத்தில் வசித்த ஜியோனோ சானாவும் அவரது மிகப் பெரிய குடும்பமும்தான்! சில ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பெரிய குடும்பம் என்று உலகம் முழுவதும் ஜியானோவின் குடும்பம் பிரபலமானது. ஜியோனோவின் குடும்பத்தில் மொத்தம் 181 உறுப்பினர்கள் இருந்தனர். 4 மாடிகளில் 100 அறைகளில் இந்தக் குடும்பத்தினர் வசித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 76 வயதில் ஜியோனோ மறைந்துவிட்டார். பல தலைமுறைகளைக் கொண்ட அந்தக் குடும்பம், தற்போதைய சூழலில் தனித்தனி குடும்பங்களாகப் பிரிந்து சென்றிருக்கும் என்று எல்லாரும் நினைத்தனர்.
ஆனால், 199 உறுப்பினர்களுடன் இன்றும் அந்தக் குடும்பம் ஒற்றுமையாக, ஒரே குடியிருப்பில் வசித்து வருகிறது என்பது எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தினமும் இருவேளை உணவை ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒரே அறையில் அமர்ந்துதான் சாப்பிடுகிறார்கள். விவசாயம், கால்நடை வளர்ப்பு இந்தக் குடும்பத்தினரின் முக்கியத் தொழில்கள். இந்தக் குடும்பத்தின் இன்றைய தலைமுறையினர் படிப்பதிலும் வேலைக்குச் செல்வதிலும் அக்கறை காட்டினாலும் ஒரே இடத்தில் வசிப்பதையே விரும்புகின்றனர். மிகப் பெரிய ஜியோனோவின் குடும்பத்தை நேரில் சந்திப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் இருக்கின்றனர். எனவே பக்தாங் கிராமம் இப்போது மிசோரம் மாநிலத்தின் முக்கியச் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது!