

தில்லியில் பள்ளிகளுக்கு லீவு விட்டு விட்டார்கள். காற்றுமாசு நுரையீரலை மட்டும் பாதிக்க வில்லை, கல்வியையும் பாதித்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் புகைமூட்டம். தலைநகருக்கே இந்த நிலை! காற்று மாசு சென்னையையும் விட்டுவைக்க வில்லை. தேவை உடனடித் தீர்வு! ‘வீட்டுக்கொரு மரம் வளர்ப் போம்' என்கிற கோஷம் புகை கக்கியபடி செல்லும் வாகனங்களின் பின்புறம் எழுதப்பட்டிருக்கிறது. சீனாவில் பெய்ஜிங் போன்ற பெருநகரங்களில் எப்போதோ சைக்கிளுக்கு மாறிவிட்டார்கள். அது மட்டுமல்ல, சீனாவில் பொதுப் போக்குவரத்து அதிகப்படுத்தப்பட்டு, தனியார் வாகன நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் முன் எப்போதைவிடவும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிகரித்திருப்ப தாகப் புள்ளி விவரம் கூறுகிறது. ‘வீட்டுக்கொரு சைக்கிள் வாங்குவோம்’ என்கிற புதிய கோஷம்தான் புகை மூட்டத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி.
அது ஒரு சைக்கிள் காலம்: சைக்கிள் ஒரு சாதுவான வாகனம். புகை கக்காது. இரைச்சல் எழுப்பாது. பால்காரர், பேப்பர்காரர், தபால்காரர் என்று தெருவின் அழைப்பு மணிகளாக அவை இருந்தன. அவசரமில்லாத, அழகிய உலகத்தின் அடையாள வாகனமாக சைக்கிள் இருந்தது. ‘என் தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது’ என்கிற வைக்கம் முகமது பஷீரின் நாவலைப் போல், என் தாத்தாவிடம் ஒரு சைக்கிள் இருந்தது என்று சொல்லிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. எல்லார் வீட்டிலும் ஒரு பழைய துருப்பிடித்த சைக்கிள் இருக்கிறது. பள்ளிக் குழந்தைகள் சைக்கிளில் போவதைத் திண்ணையில் உட்கார்ந்தபடி பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. மனசுக்குள் ஒரு சைக்கிள், அதன் சக்கரங்கள் பின்னோக்கிச் சுழல்கின்றன.
சைக்கிள் சாகசம்: எங்கள் ஊரில் ஒரு மைதானம் இருந்தது. அதில் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடக்கும். ஒரு நபர் சைக்கிளில் உட்கார்ந்தபடியே குளிப்பார், சாப்பிடுவார், குட்டிக்கரணம் போடுவார். ஏகப்பட்ட கோமாளித்தனங்கள் செய்வார். தரையில்கூடச் செய்துகாட்ட முடியாத சாகசங்களை சைக்கிளில் உட்கார்ந்தபடி செய்துகொண்டே மைதானத்தைச் சுற்றி வருவார். மைதானத்தின் நடுவில் உள்ள கம்பத்தில் ஸ்பீக்கரில் பிரபலமான சினிமா பாட்டுகள் உச்சஸ்தாயியில் ஒலிக்கும். சில நேரம் சைக்கிளிலேயே படுத்துத் தூங்குவார். பல நாள்கள் விடிய விடிய சைக்கிள் ஓட்டும் அவர், இரவில் எல்லாரும் போன பிறகு சைக்கிளை விட்டு இறங்குவாரா என்று ஒளிந்திருந்து பார்ப்போம்.
- thanjavurkavirayar@gmail.com
பாவம் சுற்றிக்கொண்டேதான் இருப்பார். கடைசி நாளில் ஊர்ப் பெரிய மனிதர் அவருக்கு மரியாதை செய்வார். எண்பதுகளில் வீடுகள் தோறும் சைக்கிள்கள் இருந்தன. ராலி, ஹெர்குலிஸ், அட்லஸ், ஹீரோ போன்ற சைக்கிள்களில் ராலி வைத்திருந்தால் தனி ‘கெத்து’, அதிக சுமை ஏற்ற ஹெர்குலிஸ் தான் சரி. ஹீரோ, அட்லஸ் எல்லாம் ஏழைகளின் சைக்கிள். வாடகை சைக்கிள் கடையை மறக்க முடியுமா? சிறுவர் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு தெருக்களில் சுற்றிய நினைவுகள்… தாம் சைக்கிள் கற்றுக்கொண்டதைப் பற்றி சுஜாதா ஒரு நகைச்சுவைக் கதையை அமர்க்களமாக எழுதியிருக்கிறார். அப்போதெல்லாம் சைக்கிள்களுக்கு லைசென்ஸ் வாங்க வேண்டும்.
அந்த லைசென்ஸ் வட்டத் தகரத்தை சைக்கிள் முன்புறம் ஹாண்டில் பாரில் இணைத்திருப்பார்கள். அது இல்லாவிட்டால் அபராதம் கட்ட நேரிடும். சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவில் டைனமோ இல்லாமல் சென்றால் காவல் துறையினர் ‘பிடித்து’ விடுவார்கள். சைக்கிளில் ஒருவர் மட்டுமே செல்லலாம். இருவர் சென்றால் அபராதம் கட்ட நேரிடும். சிறுவர்கள் குரங்குப் பெடல் போட்டபடி சைக்கிள் ஓட்டுவோம். பெண்கள் சைக்கிள் ஓட்டுவதை வேடிக்கை பார்ப்பார்கள். கவிஞர்கள் பெண்கள் சைக்கிள் ஓட்டுவதைப் பற்றி கவிதைகள் எழுதினார்கள். ஞானக்கூத்தனின் சைக்கிள் கமலம் கவிதை பிரபலம்.
சைக்கிள் கமலம்:
...மைதானத்தைச் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர்க்கமலம்
சைக்கிள் பழகினாள்
தம்பியைக் கொண்டுபோய்ப்
பள்ளியில் சேர்ப்பாள்
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்
கடுகுக்காக ஒரு தரம்
மிளகுக்காக ஒரு தரம்
கூடுதல் விலைக்குச் சண்டைபிடிக்க
மீண்டும் ஒரு தரம்
காற்றாய்ப் பறப்பாள்.
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் விடுகிறாள்
என்மேல் ஒருமுறை விட்டாள்...
மற்றபடிக்குத் தெருவில் விட்டாள்!
சின்ன வயதில் பாக்கியம் ராமசாமி எழுதிய அப்புசாமியும் சீதாப்பாட்டியும் தொடரில் அப்புசாமி சீதாப்பாட்டிக்கு சைக்கிள் கற்றுக் கொடுத்ததைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரிப்போம். நகரங்களிலும் சிற்றூர்களிலும் தெருக்களில் எத்தனையோ பேர் சைக்கிளில் போனாலும் புதுவையில் அந்த நகருக்கு உரிய பிரெஞ்சுப் பெயர் தாங்கிய சுத்தமான அழகிய வீதிகளில் சைக்கிளில் செல்லும் ஆசிரமவாசிகளைப் பார்க்க ரம்மியமாக இருக்கும். காந்திஜி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு நேரமாகிவிட்டது என்பதால் நண்பரின் சைக்கிளில் சென்று, சரியான நேரத்தில் கலந்துகொண்டது பற்றி 3ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் படித்தது நினைவிற்கு வருகிறது.
சைக்கிளும் வேலையும்: படித்துவிட்டு வேலை இல்லாத இளைஞனாக ஊர்சுற்றிய காலத்தில் அப்பாவின் நண்பர் சிபாரிசில் உள்ளூரில் ஒரு வேலை கிடைத்தது. பட்டப்படிப்பில் நான் படித்த கணக்கியல் தொடர்பான கேள்விகளை எதிர்பார்த்துச் சென்ற என்னிடம், அந்த நிறுவன உரிமையாளர் ஒரே கேள்விதான் கேட்டார்.
“சைக்கிள் ஓட்டத் தெரியுமா? வங்கிக்குச் சென்று பணம் செலுத்தி வருவதுதான் உங்கள் வேலை.”
“தெரியாது சார்.”
“போய்வா, தம்பி.”
நான் வெளியே வந்தேன்.
என்னோடு படித்து பத்தாவதோடு படிப்பைக் கைவிட்ட நண்பன் குமரேசன் சைக்கிளில் வந்து இறங்கினான்.
“என்ன இவ்வளவு தூரம் குமரேசா?”
“இந்த கம்பெனியில் வேலை காலி இருப்பதாகச் சொன்னார்கள்.”
அவனுக்கு வேலை கிடைத்துவிடும்.
நான் நடந்தே கருந்தட்டான்குடி வந்தேன். அப்பாவுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. அவர் என்னை எதுவுமே கேட்கவில்லை. பள்ளி ஆசிரிய ரான அவருக்கும் சைக்கிள் ஓட்டத் தெரியாது!
(பேச்சு தொடரும்)