திண்ணைப் பேச்சு 25: கலைஞரின் கதை நேரம்

திண்ணைப் பேச்சு 25: கலைஞரின் கதை நேரம்
Updated on
3 min read

எழுத்தாளரும் குறும்பட இயக்குநருமான எஸ்.ராஜகுமாரன் ஒரு நாள் என்னை அழைத்தார்.

“கலைஞரின் சிறுகதைகளைத் தொலைக் காட்சித் தொடராக எடுக்கிறோம். முதல் எபிசோட் எழுத்தாளர் ஏகலைவன். நீங்கள் எழுத்தாளர் ஏகலைவனாக நடிக்க முடியுமா?”

“நானே எழுத்தாளர்தானே, இதில் எழுத்தாளராக நடிப்பதாவது?”

“அதைத்தான் நானும் சொல்கிறேன். நீங்கள் சும்மா வந்து போங்கள் போதும். கலைஞரின் சிறுகதையில் நடிப்பது எவ்வளவு பெருமை! நாளைக்கு எங்கள் வீட்டில் வைத்து ஒரு டிஸ்கஷன் இருக்கு. காஸ்ட்யூம் நீங்களே கொண்டு வந்துடுங்க. இரண்டு ஜிப்பா, துண்டு, பனியன் வேஷ்டி போதும்!”

காதி பவனுக்குப் போய் ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று ஜிப்பாக்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்.

படப்பிடிப்பு நாள்.

முதல் காட்சி. எழுத்தாளர் காலை எழுந்து சோம்பல் முறித்து தன் மனைவி லீலாவிடம் ஒரு காபி கிடைக்குமா என்று கேட்க வேண்டும். அவ்வளவுதான்.

‘லீலா காபி கிடைக்குமா?' என்று பலமுறை கேட்டும் இயக்குநர் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை.

“உங்க வீட்ல இப்படித்தான் காபி கேப்பீங் களா?” என்றார் கேமராமேன் எரிச்சலுடன்.

“ஸாரி. இப்ப ட்ரை பண்றேன்” என்று மறுபடி ஆரம்பித்தேன்.

“லீலா, காபி கிடைக்குமா?''

“என்னங்க கெஞ்சறீங்க? நல்லா கம்பீரமா கேளுங்க... சின்னதா ஒரு தோரணை வரணும் குரல்ல...”

மறுபடியும் ‘காபி கிடைக்குமா?’

மறுடியும் தோல்வி.

அனிமேஷன் படிக்கும் இயக்குநரின் மகள், என்னைப் பார்த்துச் சிரித்தார்

“அப்பா, நீங்க ஒருதடவை பேசிக் காட்டிடுங்களேன்.”

நண்பர் பேசிக் காட்டினார்.

“லீலா, காபி கிடைக்குமா?”

எனக்கு அவரைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது. நல்ல உயிரோட்டமான நடிப்பு .

அடுக்களையிலிருந்து ஒரு பெரிய ட்ரேயில் காபி டம்ளருடன் அவர் மனைவி வெளிப்பட்டார்.

“நான் காபி கேட்கலையே” என்றார் இயக்குநர்.

“இப்ப சத்தமா கேட்டீங்களே!”

“உன் பெயர் லீலாவா? நாங்கள் டயலாக் பேசறோம்.”

“சரி, சரி.”

“சரி, ஆரம்பிப்போம்... எங்கே சொல்லுங்க லீலா காபி கிடைக்குமா?”

நான் காபி டம்ளரை ஏக்கத்துடன் பார்த்தபடி லீலா காபி கிடைக்குமா என்றேன்.

“ஐயோ, பாவம்... சார், காபி சாப்பிடட்டும்! என்றார் நண்பரின் மனைவி.

நான் காபி குடித்தேன்.

கேமராமேன் வெற்றி, “டயலாக்கை மாத்திடுங்க” என்றார்.

நான் பொறுமை இழந்து பேசாமல் என்னை மாத்திடுங்க என்றேன்.

“தேவையில்லை, இன்னும் ஒரு வாரம் இருக்கு. வீட்டில் ட்ரை பண்ணுங்க. இப்போ அடுத்த காட்சிக்குப் போகலாம்.”

நான் மாடியிலிருந்து கீழே இறங்கினேன்.

வெற்றி டைரக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

“அண்ணே, இவர் சரிப்பட மாட்டார். கோடம்பாக்கத்தில் ஒரு ஆள் இருக்கிறார், எழுத்தாளர் வேஷத்திற்கு ஏற்றவர். டயலாக் இத்தனை டேக் வாங்காது. இவர் வீட்டில் உட்கார்ந்து காபி கேட்கிற சீனையே சொதப்புறாரு.”

“சும்மா இருங்க, அவர் நிஜமான எழுத்தாளர் தெரியுமா?”

“அவர் நிஜமான எழுத்தாளராக இருக்கலாம். ஆனால், எழுத்தாளராக நடிக்கத் தெரியலையே!”

“அவர் காதுபட பேசிடாதீங்க. எல்லாம் டப்பிங்ல சரி பண்ணிடலாம். அவர் சும்மா வந்துட்டுப் போனா போதும்.”

தொடர்ந்து படப்பிடிப்பு குறித்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். எதுவும் என் காதில் விழவில்லை. மனசுக்குள் ‘லீலா காபி கிடைக்குமா’ என்கிற வாக்கியம் ஓடிக்கொண்டிருந்தது.

வீடு வந்து சேர்ந்தேன்.

“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றார் என் மனைவி.

“தலை வலிக்குது, காபி கிடைக்குமா?”

“கிடைக்குமான்னு என்ன கேள்வி? காபி கொடுன்னு சொல்ல வேண்டியதுதானே? வரவர உங்க பேச்சே சரியில்லை.”

இந்தத் தடவை காபி கிடைக்குமா என்கிற வசனத்தை மிகச் சரியாகச் சொல்லிவிட்டதாகத் தோன்றியது.

‘அடடா, கேமராமேன் வெற்றி இல்லையே...’ உற்சாகமாக காபி கிடைக்குமா என்று சொல்லிப் பார்த்தேன்.

என் மனைவி ஓடிவந்து, “இப்பதானே காபி குடிச்சீங்க, என்ன மறுபடியும் காபி கிடைக்குமா? என்ன ஆச்சு உங்களுக்கு?”

“நான் நடிக்கிற காட்சியில் இப்படி ஒரு வசனம்.”

“இதெல்லாம் ஒரு வசனம்! இதை மனப்பாடம் வேற பண்றீங்களா? போன வாரம் டிவில வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி வசனத்தை நாலு வயசு குழந்தை கடகடன்னு ஒப்பிக்குது. கஷ்ட காலம்.”

மறுநாள் படப்பிடிப்புக்காக ஒரு வீட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். கதைப்படி காலை படுக்கையில் இருந்து எழுந்த எழுத்தாளர் மனைவியுடன் உரையாடுகிறார். காபி கேட்கிறார். காபி குடித்த பிறகு கதை தேடி கடற்கரைக்குப் போகிறார்.

“காபி குடிக்கிற சீன் கடைசியில் வைக்கலாம். இப்போ கடற்கரை காட்சிகளை முடித்து விடலாம்” என்றார் வெற்றி.

முதல் காட்சி நான் கடற்கரையில் நடந்து வர வேண்டும்.

“சார், எழுத்தாளர் மாதிரி கம்பீரமாக நடந்து வாங்க” என்று கத்தினார் ராஜகுமாரன். கடற்கரை மணலில் நடப்பதே கஷ்டம். நல்ல வெயில். இதில் கம்பீரமாக நடப்பதாவது. இனிமேல் எழுத்தாளர்கள் எப்படி நடந்து போகிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.

“சார், அந்த போட்ல உக்காந்து சிந்திக்கிற மாதிரி போஸ் குடுங்க.”

சிந்திக்கிற மாதிரி போஸா, என்ன சிந்திப்பது?

என் எதிரே கடல் ஆர்ப்பரித்தது.

“சார், குடும்பஸ்தர் மாதிரி போஸ் கொடுக்காதீங்க, எழுத்தாளர் மாதிரி போஸ் கொடுங்க… கலைஞர் கதை சார்… உங்க முன்னால் தெரிவது கடல் அல்ல. தமிழகம்” என்று ராஜகுமாரன் காதருகே கிசுகிசுத்தார்.

ஒரு வழியாகக் கடற்கரை காட்சிகளும் காபி குடிக்கிற காட்சிகளும் ‘ஓகே’ ஆகின. நான் அவசரமாக செட்டுக்குள் நுழைந்து காபி டம்ளரைத் தேடினேன். அது காலியாக இருந்தது.

என் மனைவியாக நடித்த கலைஞர், “நான் குடிச்சிட்டேன் சார். ரொம்ப டயர்ட் ஆக இருந்தது” என்றார்.

இவ்வளவு கஷ்டப்பட்டும் அந்தக் ‘கலைஞரின் கதை நேரம்’ என்னும் குறுந்தொடர் வெளிவரவில்லை.

(பேச்சு தொடரும்)

- tavenkateswaran@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in