அனுபவம்: அரக்குச் சட்டையும் வேல்ஸ் டெய்லரும்

அனுபவம்: அரக்குச் சட்டையும் வேல்ஸ் டெய்லரும்

Published on

தீபாவளிக்குக் கோடி (புதுத் துணி) எடுப்பதென்பதும் தீபாவளியைப் போன்ற ஒரு வைபவம்தான். சுற்றியுள்ள பட்டிக்காட்டுச் சனமெல்லாம் எங்கள் பட்டணக்கரைக்கு ஏறிவருவார்கள். சித்திரைத் திருவிழா மாதிரி கூட்டம், துணி எடுத்துத் திரும்பும்போது குடும்பமும் குட்டியுமாகப் பனையோலைக் கொட்டானில் முட்டாயும் சேவும் வாங்கி வண்டி ஏறிப் போவார்கள். ஊரே கொண்டாடும் இந்தத் துணி எடுக்கும் வைபவம் எங்கள் வீட்டைப் பொறுத்தவரை ஒருவருக்கானதுதான். என் அப்பாதான் அவர்.

என் அப்பா, கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். ஆனால், திராவிடக் கருத்துகள் பேசுவார். உள்ளூர் முத்தமிழ் மன்றச் செயலாளராக என்னைக் கம்பராமாயணச் சொற்பொழிவுக்கு அழைத்துச் செல்வார். அப்பாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் ரசிகமணி டிகேசியின் ‘வட்டத்தொட்டி’யில் இருந்தார். எனக்குச் சிறுவயதிலேயே அரசியல் ஈடுபாடு வந்ததற்கும் ஒரு கட்சியில் உறுப்பினரானதற்கும் அப்பாதான் காரணம். என்றாலும் அவரது நிலைப்பாடு எனக்கு விளங்காததுதான்.

வெளியில் எப்படியிருந்தாலும் வீட்டில் அவரது அரசியல், நாசிசம்தான். அவர்தான் எல்லாவற்றிலும் முடிவெடுப்பார். எங்கள் விருப்பங்களையும் அவர்தான் தீர்மானிப்பார். கிளிமூக்கு மாம்பழம்தான் எங்களுக்குப் பிடிக்கும் என்பதை எங்களுக்கு விவரம் தட்டுபட்ட வயதிலேயே அவர் முடிவெடுத்துவிட்டார்.

அந்த மாம்பழத்தின் தோலை, மாலையம்மாளுக்குச் செப்புச் சாமான் சார்த்தும் சடங்கைப் போல் குத்த வைத்துச் செய்வார். ஆனால், எனக்கு ஒரு நாட்டு மாம்பழத்தையாவது வாயொழுகத் தின்ன ஆசை. அதெல்லாம் நாகரிகமற்றது என்பது அவர் அபிப்ராயம்.

புழுதிப் புரள விளையாடக் கூடாது; அடுத்த வீட்டில் கை நனைக்கக் கூடாது. இப்படிப் பல கூடாதுகள். பள்ளிப் பிராயத்திலேயே என்னை ‘ஒழுக்கசீலனா’க ஆக்கியதில் காந்தியின் ‘சத்திய சோதனை’க்கும் என் அப்பாவின் இந்தக் கூடாதுகளுக்கும் பெரும் பங்குண்டு. விடுமுறைக்குச் செல்லும் கிராமம்தான் இதிலிருந்து எனக்குச் சற்று ஆசுவாசம்.

பச்சை பூத்துக் கிடக்கும் ஐப்பசி மாதக் கரிசல் காட்டில் என் அப்பாவுக்குச் சொந்தமான நஞ்சைகளிலும் புஞ்சைகளிலும் பயல்களுடன் ஆட்டுக் குட்டியைப் போல் ஆடியோடி கண்ட காய்களையும் பூக்களையும் தின்று, காட்டு விலங்கைப் போல் கண்மாயில் நீர் குடித்துத் திரும்பியிருக்கிறேன்.

அந்தத் தீபாவளி சமயத்தில் என் உறவுக்காரப் பெண்ணும் முதுநிலைப் பொறியியல் படிக்கும் வரை என்னை சிநேகித்துவந்தவளுமான சுந்தரவடிவு என்கிற அனிதா, “கொமரகுருபரா, நீ தீவாளிக்கு அரக்குச் சட்டை எடுலே. நானு அரக்குத் தாவணி எடுத்திருக்கேன்” என்றாள். அப்போது அந்த அளவுக்குச் சிநேகத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் அரக்குச் சட்டை எடுக்க தீர்மானித்துவிட்டேன். ஆனால், அப்பா அதைப் பொருள்படுத்தியதாகத் தெரியவில்லை. என் சிநேகம் எனக்குத்தானே?

நானும் விடவில்லை. எனக்குத் தெரிந்த வடிவங்களி லெல்லாம் போராடினேன். பிரிட்டிஷ் இந்திய ஆட்சிபோல் அப்பா சில உடன்படிக்கைகளுக்குச் சம்மதித்தார். அதாவது சட்டையை வழக்கம்போல் அவரே எடுப்பார். எனக்கு விருப்பமான ‘வேல்ஸ் டெய்லர்’ஸில் தைக்கக் கொடுப்பார்.

கிட்ணசாமி டெய்லரின் மகன் வேல்முருகனின் கடைதான் ‘வேல்ஸ்’. ஒரு சொல்லுக்குப் பின் ‘ஸ்’ சேர்ப்பது அந்தக் காலத்தில் நவீனத்தின் அடையாள மாகப் பார்க்கப்பட்டது. சட்டைத் தைப்பில் அவ்வப்போது அறிமுகமாகும் புதிய டிரெண்டை உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடியவர் இந்த வேல்ஸ். துணியை வெட்டித் தருவது மட்டும்தான் வேல்ஸ்.

தைப்பதற்குத் தனியே நாலைந்து தையல் மிஷின்களில் அண்ணன்மார் இருப்பார்கள். தீபாவளி காலத்தில் லட்சுமி மில், லாயல் மில் மாதிரி ஷிப்ட் வைத்துத் தைப்பார்களாம். என் வயதுப் பையன்கள் வேல்ஸைக் காணும்போது பள்ளிக்கூட வாத்தியரைக் கண்டதுபோல் கை உயர்த்திப் பவ்யமாக வணக்கம் வைப்பார்கள்.

வேல்ஸ் என்பது எங்களைப் பொறுத்தவரை கெளரவத்தின் அடையாளம். காலரில் ‘வேல்ஸ்’ என்று தைக்கப்பட்டிருக்கும் அந்தப் பெயர் தெரிய வேண்டும் என்பதற்காகவே ஐப்பசி மாதத்திலும் பயல்கள் “வேக்காடா இருக்கு” என்று சொல்லி பட்டனைக் கழற்றி காலரை ஏற்றிவிடுவார்கள். அந்தக் கடை இருக்கும் இடமே எங்களுக்கு ஓர் அடையாளம்தான். “வேல்ஸ் தாண்டி...”, “வேல்ஸுக்குக் கொஞ்சம் முன்னால...” என வேல்ஸை வைத்தே பயல்கள் வழி சொல்வார்கள்.

இப்பேர்ப்பட்ட வேல்ஸில் சட்டை தைக்கும் கெளரவம் எனக்கும் கிடைக்கப் போகிறது என்பதே சந்தோஷத்தைத் தந்தது. நல்லபடியாகச் சட்டையும் தைத்துத் தீபாவளி முதல்நாள் இரவில் வாங்கி வந்துவிட்டேன். தைப்பும் எடுப்பாகத்தான் இருந்தது. ஆனால், அந்தச் சட்டைக்குப் பொருத்தமானவனாக நான் இல்லை. அந்தத் தொள தொள சட்டையைப் போட்டுக்கொண்டுதான் வேட்டுகளைப் போட்டுத் தீர்த்தேன்.

தீபாவளி மறுநாள் பள்ளிக்குப் புதுத் துணியைப் போட்டுவருவது வழக்கம். நான் சீருடையில்தான் போனேன். அனிதா சடைத்துக் கொண்டாள். வேல்ஸ் சட்டை எனக்கு மட்டும் ஏன் பொருத்தமாக இல்லை என வருத்தமாக இருந்தது. அதன் காரணம் பின்னால்தான் என் மண்டைக்கு உரைத்தது.

அ.முத்துலிங்கம் கதையில் வருவதுபோல் என் அப்பா, ரெண்டு மூணு வருஷத்துக்குப் பிறகு நான் எப்படி இருப்பேன் என்பதை உத்தேசித்துள்ளார்; தொலைநோக்குப் பார்வையில் அதற்குத் தகுந்ததுபோல் தைக்கச் சொல்லி வேல்ஸிடம் சொல்லியிருக்கிறார்!

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in