

நடராஜனைக் காண்பதற்கு எப்போதும் மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களில் 20 வயது மாணவர்களில் இருந்து 70 வயது முதியவர்கள் வரை இருக்கிறார்கள். சிலருக்குக் கல்விக்கு வழிகாட்டுகிறார். சிலருக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.
55 ஆண்டுகளாகப் பிறருக்கு வழிகாட்டுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் நடராஜன், ஹைதரபாத்தில் வசித்து வருகிறார். இயற்பியல், உயிரியல், தத்துவம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார். 85 வயதிலும் அவருடைய தேடலும் வழிகாட்டலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
“பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்தேன். அப்பா பேராசிரியர். ஓரளவு வசதியான குடும்பம். திடீரென்று ஏற்பட்ட அப்பாவின் மரணம், என்னைத் துயரத்தில் தள்ளியது. அப்பவுக்குப் பிறகு யார் பிடியிலும் அகப்படக் கூடாது என்றும் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தேன். அப்போது போட்டித் தேர்வுக்குத் தயாராகிற சிலர் எங்கள் வீட்டில் தங்கிப் படித்தனர். அவர்களைப் பார்த்து எனக்கும் புத்தகங்கள் மீது ஆர்வம் வந்தது.
12 வயதில் ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா’ முழுவதையும் படித்துவிட வேண்டும் என்று தோன்றியது. நாளடைவில் புத்தகங்களைத் தேடிச் செல்வதும் ஆராய்ச்சிகளைச் செய்வதுமாக என் வாழ்க்கை மாறிவிட்டது. இதில் ராமகிருஷ்ணா மடத்தின் பங்கு முக்கியமானது. அது அறிவை விசாலமாக்கி, புதிய கதவுகளைத் திறந்துவிட்டது” என்கிறார் நடராஜன்.
கல்லூரி மாணவர்கள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை இவரைச் சந்திக்கிறார்கள். மணிக்கணக்காகப் பேசுகிறார்கள். இறுதியில் தங்களுக்கான அறிவுப்பசி தீர்ந்த மகிழ்ச்சியில் செல்கிறார்கள்.
மனிதர்கள் ஏன் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று தத்துவார்த்தரீதியில் ஆராய்ச்சி செய்ததில், அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சம்தான் காரணம் என்பதைக் கண்டறிந்ததாகச் சொல்கிறார் நடராஜன். இவருக்கு அத்தகைய பயம் இல்லை என்பதால், திருமணம் செய்துகொள்ளவில்லை என்கிறார்.
“நான் சமூகத்துக்குச் செய்யும் கடமையாகவும் நான் அறிந்தவற்றைப் பகிர்ந்துகொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பாகவும் கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது. என்னை நாடி வருபவர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்றும் நான் தேடலை நிறுத்தவில்லை. என்னை நாடி வருவதையும் மக்கள் நிறுத்தவில்லை” என்கிறார் நடராஜன். தன்னுடைய ஆராய்ச்சிகளைப் புத்தகங்களாகக் கொண்டுவரும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறார் நடராஜன்.