பயணம்: ஜொலிக்கும் போரா குகை!

பயணம்: ஜொலிக்கும் போரா குகை!
Updated on
2 min read

இயற்கையாக உருவாகிய வீடுகள்தாம் குகைகள். தம்மை நாடிவருவது மனிதனா, விலங்கா, பறவையா என்றெல்லாம் அவை பார்ப்பதில்லை. வெயிலிலிருந்தும் குளிரிலிருந்தும் மழையிலிருந்தும் அனைவருக்கும் அடைக்கலம் அளித்து, உயிர்களைக் காப்பாற்றியிருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு குகையைக் காண்பதற்குதான் விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிஸா செல்லும் ரயிலில் அமர்ந்திருந்தோம். போரா குகையைப் போலவே அந்த ரயில் பயணமும் சுவாரசியமாக இருக்கும் என்பது, அரை மணிநேரப் பயணத்துக்குப் பிறகே தெரிந்தது.

ரயில் மெதுவாக மலையில் ஊர்ந்து சென்றது. திடீர் திடீரென்று சிறுசிறு அருவிகள், ஓடைகள், சுரங்கங்கள், பாலங்கள் தோன்றி, மறைந்துகொண்டே இருந்தன. ஜன்னல்களை விட்டுக் கண்கள் அகலவே இல்லை. ஒவ்வொரு சுரங்கத்தைக் கடக்கும்போதும் குழந்தைகளும் பெரியவர்களும் உற்சாகமாகக் குரல் கொடுத்தார்கள். யாரும் இறங்கும் இடம் எப்போது வரும் என்று கேட்கவே இல்லை, அவ்வளவு சுவாரசியமாகக் காட்சி விருந்தைப் படைத்திருந்தது பயணம்!

அரக்கு பள்ளத்தாக்கில் இதமான குளிரிலும் ஊசித் தூறலிலும் சுற்றித் திரிவதே அலாதியான அனுபவமாக இருந்தது. ஆந்திரப் பிரதேச சுற்றுலாக் கழகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பான மதிய உணவுக்குப் பிறகு போரா குகையை அடைந்தோம்.

அனந்தகிரி மலையில் 15 கோடி ஆண்டு களுக்கு முன்பு உருவாகியவை இந்தப் போரா குகைகள். சுண்ணாம்புப் பாறைகளை கோஸ்தானி நதியின் நீர் தொடர்ச்சியாக ஊடுருவி, பிளந்தது. நீரில் உள்ள ஹுமிக் அமிலம், கனிமங்கள் எல்லாம் சேர்ந்து சுண்ணாம்புப் பாறைகளைக் கரைத்தன.

அதனால்தான் குகைக் கூரைகளில் வடிந்த நிலையில் சுண்ணாம்புப் பொருள்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. 100 மீட்டர் அகலமும் 80 மீட்டர் உயரமும் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய குகைகளில் இதுவும் ஒன்று. பொ.ஆ. (கி.பி.)1807ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த நிலவியலாளர் வில்லியம் கிங் ஜார்ஜ், போரா குகைகளைக் கண்டறிந்தார்.

பத்துமலை குகையைக் காண பல நூறு படிகள் ஏறிச் சென்ற எங்களுக்கு நிலத்துக்குக் கீழே சில நூறு படிகள் இறங்கிச் செல்லும் விதத்தில் இருந்த போரா குகை ஆச்சரியத்தை அளித்தது. மொத்தம் 700 படிகள் ஏறி இறங்க வேண்டும் என்பதால் வயதானவர்கள், சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் குகைக் குள் செல்ல வேண்டாம் என்றார்கள்.

போரா குகையின் வாயிலில் இருந்து பார்த்தால் கீழே மென்மையாக ஓடிக்கொண்டிருக்கிறது கோஸ்தானி நதி. ஒரு காலத்தில் பாறைகளையே உடைத்துச் செல்லும் ஆற்றல் கொண்ட கோஸ்தானி, இன்று நீரும் குறைந்து, அகலமும் குறைந்து ஓடை போலக் காட்சி தந்தது வருத்தமாக இருந்தது. ஆனாலும் மரங்களுக்கு இடையே தெரிந்த நதியின் அழகு எல்லாரையும் நிற்க வைத்துவிடுகிறது!

படிகளில் நின்றுகொண்டு கீழே பார்த்தால் மிகப் பெரிய குகையின் வாயில் பிரமிப்பூட்டியது. வெளிச்சம் இல்லை என்றால் குகையின் அழகை ரசிக்க முடியாது. நிலப் பகுதியில் அரை இருள். கூரையில் ஆங்காங்கு வண்ண விளக்குகள். பாறைக் குழம்புகள் வடிந்த நிலையில் தொங்கிக்கொண்டிருந்த காட்சி அத்தனை அற்புதம்!

பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவான குகையில் நின்றுகொண்டிருக் கிறோம் என்பதே பரவசமாக இருந்தது. குகையின் மேற்பகுதியைப் பார்ப்பதற்குப் படிகளில் ஏற வேண்டும். கீழ்ப் பகுதியைப் பார்ப்பதற்கு படிகளில் இறங்க வேண்டும். குகைக்குள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று சில இடங்களில் ஆகாயமும் ஒன்றிரண்டு மரங்களும் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன! ஆங்காங்கு நின்று குகையின் அழகைப் பார்த்தபடி மெதுவாகப் படியேறினோம். குகையின் உச்சியில் ஒரு லிங்கம் இருந்தது.

கீழ்க் குகை இன்னும் சுவாரசியம் கூட்டியது. சுவர்களிலும் பாறை இடுக்குகளிலும் இருந்து நீர் கசிந்து கொண்டிந்தது. இரண்டு பாறை களுக்கு இடையே குனிந்து, ஒடுங்கிச் சென்றது, சாகச உணர்வைத் தந்தது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வடிவத்தில் காணப்பட்டது. கூரையின் மேற்பகுதியில் சிவன், பார்வதி, தாய், குழந்தை, மனித மூளை, முதலை, தாடியுடன் கூடிய துறவிகளின் உருவங்கள் தெரிவதாகக் காட்டினார்கள்.

ஒருசில இடங்களில் அவர்கள் சொன்ன உருவங்கள் ஓரளவு தெரிந்தன. இவை அன்றி வேறு சில உருவங்களையும் நினைத்துக் கொண்டு, உற்றுப் பார்த்தால் அவையும் தெரிந்தன! இதற்கெல்லாம் கோஸ்தானி நதிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்!

மஞ்சள், நீலம், பச்சை, சிவப்பு, மெஜந்தா வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் குகையின் அழகைக் கூடுதலாகக் காட்டின! நேரம் கரைந்ததே தெரியவில்லை. வேறு வழியின்றி குகையை விட்டு வெளியே வந்தோம். குகை தரிசனம் வாழ்நாள் அனுபவம் என்பதால், குகைக்குள் செல்ல இயலாதவர்கள்கூட முழுவதுமாகச் சுற்றிப் பார்க்காவிட்டாலும் வாயில் வரையாவது சென்று, அவசியம் பார்த்துவிட வேண்டும். தற்போது விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்குச் செல்ல கண்ணாடியிலான (விஸ்டாடோம்) ரயில் பெட்டிகள் உள்ளன. கூடுதல் வசதியுடன் காட்சிகளைக் காண முடியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in