

15 வயதுக்கு உள்பட்டோருக்கான தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியில் விளை யாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் கோவில்பட்டியைச் சேர்ந்த வி.வி.தர்ஷினி.
“ஆறாம் வகுப்பிலிருந்து கிரிக்கெட்டில் ஆர்வம் வந்து, விளையாட ஆரம்பித்தேன். ராணுவ வீரரான என் அப்பா, என் விருப்பத்தைப் புரிந்துகொண்டார். கிரிக்கெட் கிளப்பில் சேர்த்துவிட்டார். ஃபீல்டிங், பேட்டிங், பவுலிங் என ஆல் ரவுண்டராக வலம் வந்தேன். கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு எதிர்காலம் இருக்கிறது என்று என் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். அதனால் சென்னையில் உள்ள எஸ்.டி.ஜி. அகாடமியில் பயிற்சிக்குச் சேர்த்துவிட்டார் அப்பா.
பயிற்சியாளர் ஆர்த்தி கொடுத்த பயிற்சியால் சிறந்த வீராங்கனை என்கிற பெயர் கிடைத்தது. சிறந்த ஃபீல்டர் விருதும் பெற்றேன். அயர்ன் லேடி கோப்பைக்கான போட்டிகளில் சிறந்த வீராங்கனை விருதும் பெற்றேன்” என்கிறார் பத்தாம் வகுப்பு படிக்கும் தர்ஷினி.
15 வயதுக்கு உள்பட்டோருக்கான தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வில் கலந்துகொண்டு, 30 பேரில் ஒருவராகத் தேர்வுபெற்றார். தற்போது தமிழ்நாடு அணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட 16 பேரில் ஒருவராகத் திகழும் தர்ஷினி, “இந்திய அணிக்காக விளையாட வேண்டும். அதுவே என் பெற்றோருக்கும் என் பயிற்சியாளர்களுக்கும் நான் கொடுக்கும் மரியாதை” என்கிறார்.