

ரயில் நிலையங்களில் குறிப்பாக சென்னையின் புறநகர் ரயில் நிலையங்களில் போடப்பட்டிருக்கும் ரயில் பெஞ்சுகளில் மாலை வேளையில் நரைத்த தலையும் தளர்ந்த உடலுமாக உட்கார்ந்திருக்கும் நான்கைந்து முதியவர்களை நீங்கள் கவனித்திருக்கலாம்.
முதுமைக் காலத்தின் புறக்கணிப்பையும் தனிமையையும் போக்கிக்கொள்ள மூத்த குடிமக்களின் கடைசிப் புகலிடங்களில் பூங்காக்கள், கோயில்களின் வரிசையில் ரயில் பெஞ்சும் ஒன்று.
தங்களைக் கடந்துபோகும் ரயில்களைப் போலவே அவர்களும் வாழ்வில் எத்தனையோ காட்சிகளைக் கண்டும் கடந்தும் வந்துவிட்டவர்கள். பல்வேறு ஊர்களில், பல்வேறு பணிகளில் அவர்கள் வீற்றிருந்த பதவி நாற்காலிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, காலம் கடைசியாக இந்த ரயில் பெஞ்சில் கொண்டுவந்து உட்கார வைத்துவிட்டது. அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் மனசு ஏனோ கனத்துப் போகிறது.
எங்கள் ஊர் ரயில் நிலையத்தில் ரயில் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் நண்பர்களை நான் அறிவேன். ரயில் பெஞ்சில் கோபால்ராவ் வந்து உட்காரும்போது நீங்கள் உங்கள் கடிகாரமுள்ளை மாலை 5 மணிக்குத் திருப்பி வைத்துக்கொள்ளலாம். நகராட்சி ஆணையர் பதவியில் அவர் கடைப்பிடித்த நேர ஒழுங்கு அவரைவிட்டு நீங்க மறுத்தது. அவர் ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ரயில் பெஞ்சுக்குச் சில வருடங் களுக்கு முன்தான் சுப்பையா வந்து சேர்ந்தார். இவர் கோபால்ராவிடம் தபேதாராக வேலை பார்த்தவர். அதனால், உட்காராமல் நின்றுகொண்டிருப்பார். கோபால்ராவ்தான் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைப்பார்.
கோபால்ராவுக்கு விஷய ஞானம் அதிகம். பிரபலமான ஆங்கில நாளிதழை பூதக்கண்ணாடி வைத்து தினமும் வாசிப்பார். அவருக்குச் சாப்பாடே வேண்டாம். அந்த ஆங்கில நாளிதழ் போதும்.
“பென்ஷன் என்பது அரசாங்கம் நமக்குக் காட்டுகிற கருணை என்று நினைக்காதீர்கள்! Pension is not a Charity. It is deferred wages என்று சுப்ரீம் கோர்ட்டிலேயே சொல்லிவிட்டார்கள்! நமது ஊதியத்தில் பின்னாளில் ஓய்வூதியமாக வழங்க அரசாங்கம் பிடித்தம் செய்த தொகை அது! நான் சொல்வது அர்த்தமாகிறதா?” என்று ஆக்ரோஷமாகக் கேட்பார். எல்லாரும் தலையாட்டுவார்கள்.
கோபால்ராவும் சுப்பையாவும் ஒண்டிக்கட்டைகள். கோபால்ராவின் மகன், மகள்கள், மருமகள்கள் எல்லாரும் பக்கத்து ஊரில்தான் வசிக்கிறார்கள். கோபால்ராவ் தன் கிராஜுவிட்டி பணத்தில் கட்டிய வீட்டில் தனியாகத்தான் வசித்தார்.
“ஏன் தனியாக இருந்துகொண்டு கஷ்டப்படுகிறீர்கள்?” என்று யாராவது கேட்டால், “இங்கே என் வீட்டில் நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் வீட்டில் நான் மற்றொரு நாற்காலியாக இருக்க வேண்டி வரும்… அங்கே ஏற்கெனவே போதுமான மரச்சாமான்கள் இருக்கின்றன” என்று ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளுவார் கோபால்ராவ்.
ரயில் பெஞ்சுக்குப் புதிதாக ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் ரகுராம். வயது எண்பதுக்கு மேல் இருக்கும். கேரளத்தில் வசித்ததால் பேச்சில் மலையாளச் சாயல் இருந்தது.
அவருக்கு மூன்று மகன்கள். இரண்டு மகன்கள் வெளிநாடுகளில் நல்ல வேலையில் இருந்தார்கள். கடைசி மகன் மட்டும்தான் இவருடன் வசித்தான். அவன் ஒரு சிறப்புக் குழந்தை. எப்போது பார்த்தாலும் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு மாடியில் வெயிலில் உட்கார்ந்திருப்பான்.
மனசுக்குள் இப்படி ஒரு பாரத்தைச் சுமந்துகொண்டு இருந்தாலும் ரகுராம் உற்சாகமாகவே இருந்தார். பழைய தமிழ் சினிமாப் பாடல்களைப் பாசத்தோடு பாடுவார். எல்லாம் காதல் கீதங்கள். ‘சிட்டுக்குருவி பாடுது… தன் பெட்டைத் துணையைத் தேடுது...’ என்று பாடும்போது கிட்டத்தட்ட அழுகிற குரலில் கேட்கும்.
ரகுராம் ஒருநாள் பாத்ரூமில் விழுந்து பின் மண்டையில் பலமான அடிபட்டு விட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். ரகுராமுக்கு நினைவு திரும்புவது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள்.
அவர் மகன்தான் எங்கும் நகராமல் அப்படிக் கவனித்துக் கொண்டான். வெளிநாட்டில் இருந்த இரண்டு பிள்ளைகளும் வந்தார்கள். மருத்துவ மனையில் ஒரு பெரும் தொகையைக் கொடுத்து, அப்பாவைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
ரகுராமுக்கு நினைவு திரும்பிவிட்டது. உடல்நிலை சீராகிவிட்டது. அவருக்குப் பக்கத்துப் படுக்கைக்காரர்கள் அவருடைய மகன் செய்த பணிவிடைகளைப் பற்றி அவரிடம் சொன்னார்கள். ரகுராம் அவன் கையைப் பிடித்துக்கொண்டார். ரயில் பெஞ்சுக்கு வர ஆரம்பித்துவிட்டார்.
அன்றைக்கு ரயில் பெஞ்சில் ரகுராமன் சன்னமான குரலில் ஏதோ பாடிக்கொண்டு இருந்தார். குரலில் ஏக்கம் இழைந்தது.
கோபால்ராவ் ரகுராமைப் பார்த்து “அடடே, கண்ணெல்லாம் கலங்கி இருக்கே! என்ன விஷயம்?” என்றார்.
“திடீரென்று அவள் ஞாபகம் வந்துட்டுது”
“உங்கள் மனைவி ஞாபகமா?”
“இல்லை… இல்லை... அவளுக்கு முன்னால் ரொம்ப சின்ன வயசில் நான் நேசித்த பெண்... வள்ளி...”
“இப்ப என்ன திடீர்னு அவள் ஞாபகம்?”
“அப்போது நான் கேரளாவில் மூணாறில் டீ எஸ்டேட்ல மேனேஜரா இருந்தேன். முதலாளி வாங்கிக் கொடுத்த பைக்கில் எஸ்டேட் முழுவதும் சுற்றி வருவேன். அப்போதுதான் அந்த ஏழை தமிழ்க் குடும்பத்தோடு பரிச்சயம். வள்ளி சின்ன மான்குட்டி. நிர்தாட்சன்யமாக விட்டு ஓடி வந்துவிட்டேன் தமிழ்நாட்டுக்கு. அந்தப் பாவம்தான் என் மகனுக்கு இப்படி ஆயிட்டுதோ என்னமோ” என்றார் கரகரத்த குரலில்.
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com