

தமிழ்நாட்டில் பல்வேறு பள்ளி, கல்லுாரிகளில் நாடகக் கலைஞர்கள் மாணவர்களுக்கு நாடகப் பயிற்சிகளைக் அளித்துவருகிறார்கள். பயிற்சியின் முடிவில் ஒரு நாடகத்தையும் அரங்கேற்றுகிறார்கள். பொதுவெளியி்ல் நாடகத்தை நிகழ்த்துவதற்குத் தேவையான பொருளாதார உதவி கிடைப்பதில்லை என்பதால் ஒரு சின்ன வட்டத்திற்குள்ளேயே நாடகங்கள் இயங்கிவருகின்றன.
இந்தச் சூழலில் பாளையங்கோட்டை சேவியர் கல்வியியல் கல்லுாரி நவீன நாடகத்திற்கான சான்றிதழ் படிப்பை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடத்திவருகிறது. இந்தப் படிப்புக்கு வயது தடையில்லை. இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் நாடக இயக்குநருமான நமசிவாயம் பயிற்சி அளித்திருக்கிறார். இவர் திருநெல்வேலியில் ‘ஓங்கல்’ நாடகப் பட்டறையை நடத்திவருபவர்.
பயிற்சி மாணவா்களால் ‘விரிசுடர் செம்மல்’ என்கிற (வ.உ.சி.யின் போராட்டமும் அவரது வாழ்க்கையும்) நாடகத்தை முதலில் சேவியர் கல்லுாரியில் அரங்கேற்றம் செய்தனர். 16 காட்சிகளுடன் 70 நிமிடங்கள் நடைபெற்றது.
வ.உ.சி.யின் இரண்டாண்டு காலப் போராட்ட வாழ்க்கை (1906 – 1908), ராஜதுரோகக் குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனை, அதன் பிறகான அவரது குடும்ப வாழ்வு, மனைவி மீனாட்சி சமூகத்திடம் முறையிடும் கேள்விகளோடு காட்சிகள் நிறைவு பெறுகின்றன. இதில் நீளமான காட்சி மீனாட்சிக்குத்தான். பன்னிரண்டு நிமிடங்கள் நிகழ்கிறது. அந்தக் காட்சி மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அரங்கத்தை அதிரச் செய்தது.
வ.உ.சி.யைத் தெரிந்த அளவுக்கு மீனாட்சியை யாருக்கும் தெரியாது. ஆனால், மீனாட்சியை மையமாக வைத்து எப்படி இந்த நாடகத்தை உருவாக்கினீர்கள் என்று நமசிவாயத்திடம் கேட்டபோது, “2013இல் இந்த நாடகத்திற்கான திரைக்கதையை எழுதிவிட்டேன். கோவில்பட்டி விஸ்வகர்மா பள்ளியில் சிறார்களுக்கான நாடகமாக நிகழ்த்தினேன். 2022இல் நாடகப் பயிற்சி ஆரம்பித்தபோது, மீண்டும் வ.உ.சி. திரைக்கதைக்கு மாணவர்களின் ஒத்துழைப்போடு மறு உருவாக்கம் செய்து, புதிய வடிவத்தில் அரங்கேற்றினேன்.
இந்த நாடக உருவாக்கத்திற்கு வரலாற்று ஆய்வாளர்கள் ஆ.சிவசுப்பிரமணியன், ஆ.இரா.வேங்கடாசலபதி, செ.திவான் போன்றவர்களின் நுால்கள் எனக்கு உறுதுணையாக இருந்தன. மீனாட்சியின் கதாபாத்திரத்தைக் கற்பனையில் உருவாக்கி, சில கருத்துகளைச் சொன்னேன்” என்கிறார்.
“குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஆள்கள் வேண்டுமா? விடுமுறையே இல்லாமல் வேலை செய்ய தொழிலாளர்கள் வேண்டுமா?” என்று ஆங்கிலேயர் ஒருவர் குரல் எழுப்புகிறார். இதைக் கேள்விப்பட்டு, வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுகிறார்கள். கோரல் ஆலை போராட்டம் வெடிக்கிறது. அதன் பிறகு கலெக்டர் வின்ச்சோடு வாக்குவாதம், சுதேசிக் கப்பல் நிறுவுவதற்கான ஏற்பாடு, திருநெல்வேலி எழுச்சி, வ.உ.சி. கைது எனக் காட்சிகள் வேகமாக நகர்ந்தன. முப்பது நிமிடங்களுக்குள் வ.உ.சி.யின் அரசியல் வாழ்க்கையைச் சொல்லிவிடுகிறார் நமசிவாயம்.
அடுத்து மீனாட்சியின் வருகை. வ.உ.சி. விடுதலையாகி வீட்டில் மீனாட்சியோடு இருக்கும்போது, போராட்டங்களுக்கு அழைக்கிறார்கள். ஆனால், அவரின் மனதில் குடும்பப் போராட்டம்தான் நிழலாடுகிறது. அந்த மனப்போராட்டங்களைக் காட்சிகளாக விளக்காமல், நவீன நாடக வடிவில் சித்தரித்த விதம் பார்வையாளர்களை உணர்வுவயப்பட வைத்தது.
வ.உ.சி. உயிலின் சாராம்சத்தை ஒருவர் வாசிக்க, மீனாட்சியும் நண்பர்களும் வ.உ.சியைச் சுற்றி நிற்கின்றனர். “வந்தே மாதரம்” என்று ஓங்கிக் குரல் எழுப்பியபடியே அவரது உயிர் பிரிகிறது. மீனாட்சி வ.உ.சி.யின் தலைப்பாகையை அணிந்து கொண்டு ஆக்ரோஷமாக, “என் பர்த்தா (கணவன்) போன பின்னர், எனக்கு இந்தத் தட்டும் தலைப்பாகையும்தான் மிஞ்சின.
இது என் வாழ்வுக்குப் போதுமா? என் கணவர் இழந்ததும் பெற்றதும் என்ன? நாட்டிற்காகப் பாடுபட்ட என் கணவரை இவ்வுலகம் என்னவென்று சொல்கிறது? வடக்கே உள்ளவன் வியாபாரி என்கிறான். தெற்கே உள்ளவன் தன் சாதிக்காரன் என்கிறான். என் பர்த்தா பெயரைக்கூட உங்களால் சரியாகச் சொல்ல முடிந்ததா? இந்த மீனாட்சியை உங்களில் யாருக்காவது தெரியுமா?” எனப் பார்வையாளர்களைப் பார்த்து கேட்டுக்கொண்டே இருக்கிறார். அரங்கம் செய்வதறியாது அமைதியாக இருக்கிறது.
“எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?” என்று ஒரு பெண் தொழிலாளரின் கேள்வியோடுதான் நாடகம் ஆரம்பிக்கிறது. “என் கேள்விகளுக்கு என்ன பதில்?” என்று கேள்வி களோடு நாடகத்தை முடிக்கிறார் மீனாட்சி. மீனாட்சிகள் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கான பதில்கள் எப்போது கிடைக்கும்?