கிராமத்து நினைவுகள்: செண்பகவல்லியின் தாவணியும் பிலோமினாவின் சுடிதாரும்!

கிராமத்து நினைவுகள்: செண்பகவல்லியின் தாவணியும் பிலோமினாவின் சுடிதாரும்!
Updated on
3 min read

ஊரில் விதவிதமான தாவணிகள் அணிந்து, அண்ணன்களைக் கிறங்க வைக்கிற வேலையைக் கடமையாகவே செய்துவந்தாள், செண்பகவல்லி அக்கா. அவள், இருபத்தைந்து கி.மீ. தூரத்தில் இருக்கும் பசுமையான கல்லூரியில் சேர்ந்திருந்தாள். இதற்காக அவள் காலையில் பேருந்து நிறுத்தத்துக்கு ஸ்டைலாக நடந்து (அவள் நடையே அப்படித்தான் என்பான் சுடலை அண்ணன்) வரும் அழகைப் பார்க்க, கொம்பையா டீக் கடையில் பெருங்கூட்டம் தயாராக இருக்கும்.

பெருங்கூட்டம் என்பது ஆழ்வை, அம்பை, பாபநாசம் கல்லூரிகளில் படித்த அண்ணன்கள் அவளுக்காக எட்டு மணிக்கே பேருந்து நிறுத்தத்துக்கு வந்து நிற்பார்கள். இவர்கள் ஒன்பது முப்பதுக்கு வந்தால்கூடப் பத்து மணிக்குக் கல்லூரி சென்றுவிடலாம். ஆனால், காலையிலேயே காத்துக் கிடப்பது சுக தவம். அவர்கள் வீட்டில் இதற்காகச் சொல்லும் காரணம், கொம்பையா டீக் கடை பாடல்களைக் கேட்க என்பது.

அவன் அங்கு போடுகிற காதல் பாடல்களின் தாக்கம் தாளாமல், முகத்தை ஏக்கமாக வைத்துக்கொண்டு, அண்ணன்கள் எதிரில் நிற்கிற செண்பகவல்லியைப் பார்க்கும் பார்வையில் எல்லாமே புரிந்துவிடும். அவளும் இவர்களைப் பார்க்காதது போலவே, அருகில் நிற்கும் பிள்ளைகளிடம் பேசிக்கொண்டோ ஒன்றுமில்லாத விஷயத்துக்குச் சத்தமாகச் சிரித்துக்கொண்டோ தன் இருப்பை இன்னும் ரசிக்க வைப்பாள். அந்தப் பார்வை மட்டும்தான். அதைத் தாண்டி எல்லையை மீற யாருக்கும் தைரியம் கிடையாது.

மாலையில் கல்லூரி முடிந்து பேருந்தைவிட்டு இறங்கி வீட்டுக்கு அவள் செல்லும்போதும் அண்ணன்கள் அதே இடத்தில் நின்றிருப்பார்கள். அந்தச் சிறு கிராமத்தில் தன்னுடைய இந்த அலாதியான ரசிகர்கள் பற்றி அவளுக்கும் தெரியும். தாங்கள் பார்ப்பதை அவள் ரசிக்கிறாள் என்று ஒருநாள் அடித்துச் சொன்னான் கருப்பசாமி அண்ணன்.

இந்தக் காலை, மாலை பேருந்து ஏற்ற இறக்க நிகழ்வுகளில், ஸ்டெப் கட்டிங் அண்ணன்களில் யாராவது ஒருவனைச் சும்மா பார்த்துவிட்டு, ‘இந்தா வச்சுக்கோ’ எனப் போவாள் செண்பகவல்லி. இந்தப் பார்வை அவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பசலை நோயைப் பாசமாகக் கொடுத்திருக்கும் என்பதை அறியாதவளல்ல அவள்.

இந்த அண்ணன்கள் கூட்டத்தின் பேச்சில், அவளுடைய தாவணி முக்கியமானதாக இருக்கும். “இவளுக்கு மட்டும் எப்படில சட்டையும் தாவணியும் அவ்வளவு அம்சமா இருக்கு?” என்று மொத்த ஆச்சரியத்தையும் கந்தையா விதைப்பான். வட மாநிலம் ஒன்றில் பணியாற்றும் அவளுடைய மூத்த அண்ணன் அவளுக்காகவே அங்கிருந்து வண்ணத் தாவணிகளை வாங்கி அனுப்புவதாகப் பேசிக் கொண்டார்கள்.

“ஊர்ல எல்லாருந்தாம் தாவணி உடுத்துதாவோ, இவாட்ட அப்டி என்னல இருக்கு?’’ என்பான் கோமதியண்ணன். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லைதான். “இந்த வயசுல பன்னிக்குட்டிகூடப் பளபளன்னுதாம் இருக்கும்” என்று கொம்பையா கடையில் பீடி குடித்தபடி பேச்சி தாத்தா சொல்லும் வார்த்தை, எல்லார் மனசுக்குள்ளும் வந்து போகும்.

கல்லூரியில் படித்துக்கொண்டே கடிகார ரிப்பேர் செய்யும் பரமசிவம் அண்ணன் ஒரு நாள், “இன்னைக்கு அவா அந்த மஞ்சக் கலரு தாவணிதாம்ல போட்டுட்டு வருவா” என்றான். “பாத்துருமால?” என்று எல்லாரும் காத்திருக்க, அவன் சொன்னது போலவே அவள் அதே தாவணியைதான் அணிந்துவந்தாள். “நீ வீட்டுல அவா நிக்கும்போது பாத்திருப்பே” என்று மற்ற அண்ணன்கள் அவனிடம் சொன்னபோது, பரமசிவம் அடித்துச் சொன்னான்: “சரில. இப்பமே, அவா நாளைக்கு என்ன கலர் தாவணி போட்டுட்டு வருவான்னு சொல்லட்டா?” என்றான்.

“சரி” என்றார்கள். அவன் நோட்டை எடுத்தான். அதில் என்னமோ கணக்கு போல மேலும் கீழுமாகக் கிறுக்கினான். பிறகு சொன்னான்: “நாளைக்குப் பட்டுப் பாவாடை, தீப்பெட்டி கலரு தாவணி!” ஆச்சரியமாகப் பார்த்தார்கள் அவனை. மறுநாள் அவன் சொன்னது போலவே அவள் வந்தாள்! பிறகு அங்கிருந்தவர்களே, அவன் அவளைக் காதலிப்பதாகவும் அவன் சொல்லிதான் அவள் அப்படி வருவதாகவும் பேசிக்கொண்டார்கள். இப்படியாக, அண்ணன்கள் தாவணிகள் பற்றிய தாகத்தில் இருந்த நேரத்தில்தான், கோடை விடுமுறைக்காக பெங்களூருவிலிருந்து டீச்சர் வீட்டுக்கு வந்திருந்தாள் சுடிதார் அணியும் பிலோமினா.

பிலோமினாவின் வருகைக்குப் பிறகு அண்ணன்களில் சிலர், இவளுக்காகவும் செண்பகவல்லிக்காகவும் பிரிந்து இரண்டு அணிகளாயினர். ஊரில் சுடிதார் பற்றிய அறிமுகமே இல்லாத காலத்தில் அவள் அப்படி அணிந்து வந்ததை அண்ணன்களோடு சேர்ந்து ஊரே ஆச்சரியமாகப் பார்த்தது.

டீச்சர் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் இருக்கிற சடங்கான பிள்ளைகள், அவள் அணிகிற சுடிதாரால் கொஞ்சம் பொறாமை கொண்டலைந்தார்கள். “ஒங்கூர்ல அப்படிச் சுடிதாரைப் போட்டுட்டு அலைஞ்சுக்கோ. நம்மூருக்குத் தாவணிதாம்டீ நல்லாருக்கும். அதை உடுத்து” என்று அவர்கள் சொன்னதற்கான அக்கறை அந்தப் பொறாமைதான் என்பது அவள் அறியாதது.

தாவணிக்கு மாறிய பிலோமினா, கொம்பையா டீ கடைக்கு எதிரில் இருக்கிற வளவு வீட்டின் முதல் திண்ணையில் அமர்ந்து பீடி சுற்றும் பெண்களுடன் சேர்ந்து கொள்வாள். திரைப்படக் கதைகளைத் திரைக்கதை, வசனத்தோடு அவள் அவர்களிடம் சொல்லும் சத்தம், கடை வரை கேட்கும். பிலோமினாவின் விதவிதமான சுடிதார்களில் கிறங்கிப் போன அண்ணன்கள், திடீரென அவள் தாவணிக்கு மாறியதை வியப்புடன் பேசிக்கொண்டார்கள்.

எல்லாப் பெண்களுக்கும் தாவணிதான் அழகான உடை என்றான் சுடலை அண்ணன் மீண்டும். சென்னையில் வேலை பார்க்கும் சுடலை அண்ணனின் சீனியரான ‘பெண்ட்’ சேகர், அதை ‘ஹாஃப் சேரி’ என்கிற பெயரில் அழைத்தபோது, அவனை வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

“அதென்ன ஹாஃப் ஸாரி, சேலையில பாதியால இது?’’
“சென்னைல அப்டித்தான் சொல்லுதாவோ.’’
“அவனுவோ சொல்லலாம். நீ சொல்லலாமா?’’
“சேலையோட சின்ன வடிவம்ங்கறதுக்காக அப்படிச் சொல்லுதாவோ’’ என்றான் சேகர்.

ஞாயிற்றுக் கிழமைகளில் செண்பகவல்லியின் தாவணி, மீன் பிடிக்கும் வலையாகி இருக்கும். அவளும் அவளின் மேலத்தெரு தோழி புவனாவும் தாவணியை வலையாக்கி, ஆற்றில் மீன் பிடிப்பார்கள். அதில் சிறு சிறு பண்ணா மீன்கள் ஒரு பக்கம் சிக்கித் துள்ளினாலும் அதில் சிக்கிவிடத் துடிக்கிற அண்ணன்கள், கீழ்பக்க ஆற்று மணலில் கதை பேசிக்கொண்டிருப்பார்கள்.

இதற்கிடையே திருமணமாகி சேலைக்கு புரமோஷனாகிவிட்ட அக்காள்கள், வீட்டில் ஆண்கள் யாருமற்ற வேளையில் பழைய பாசத்தில் தாவணி அணிந்து வீட்டுக்குள் வலம்வருவதும் உண்டு. வருடங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் கோயில் கொடையில் சுடலை அண்ணனைச் சந்தித்தபோது சொன்னான், “செம்பவல்லி சென்னைல கடை வச்சிருக் காளாம்லா” என்று.

தாவணி அணிந்த அவள் முகமும் கண்முன் வந்து போனது. முகவரி வாங்கிக்கொண்டு ஆசையாகப் பார்க்கப் போனேன். கடைக்குள் நுழைந்ததுமே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சுடிதார்களின் ரேக்குக்குப் பின்னே, உதட்டுச் சாயத்துடன் ஜீன்ஸில் அமர்ந்திருந்தாள் செண்பகவல்லி அக்கா!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in