

மறைந்த எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் பல வருடங்களுக்கு முன்னால் எனக்கு எழுதிய கடிதம் இப்படித் தொடங்குகிறது. ‘இன்று காலை பொன்போல் விடிந்தது. நானும் வீரனும் திண்ணையில் உட்கார்ந்து வெயில் காய்ந்தபடி தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.’ வீரன் என்பது அவர் வளர்த்த நாய். வீரனை அவர் ஒருபோதும் நாயாக நடத்தியதில்லை. வீரன் அவர் தோழன்.
சென்னைப் புறநகரில் வசித்த என் வீட்டைத் தேடி வந்து, இரவு தங்கிவிட்டு காலையில் புறப்பட்டார் ப்ரகாஷ். தெருவில் கொஞ்ச தூரம்தான் நடந்திருப்பார். தெருநாய்கள் அவரைச் சூழ்ந்துகொண்டன. நான் பயந்துவிட்டேன். “ஏய் செல்லங்களா இருங்கடா! இருங்கடா! ஏண்டா இப்படிப் பண்றீங்க?” ப்ரகாஷ் நாய்களிடம் பேசியபடியே பூட்டியிருந்த ஒரு வீட்டின் படிக்கட்டில் உட்கார்ந்தார். அவ்வளவுதான். அவர் மடிமீது தாவிப் படுத்துக்கொண்டன சில நாய்கள்.
“ப்ரகாஷ்! இது என்ன அதிசயம்! இந்த நாய்கள் உங்களைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை. என்னவோ பல வருஷம் பாதுகாத்த எஜமானர் ஊரிலிருந்து திரும்பும்போது பார்ப்பதுபோல் தாவுவது அதிசயமாக இருக்கிறதே!” “அது அப்படித்தான்! பூர்வஜென்ம வாசனை போலும்.
போன ஜென்மத்தில் நானே ஒரு நாயோ என்னவோ?” என்று சொல்லிச் சிரித்தார். ரயில் நிலையம்வரை வந்து அவரை வழியனுப்பி விட்டுத்தான் நாய்கள் திரும்பிச் சென்றன. அவற்றின் மீது நாம் அன்பு கொண்டிருக் கிறோம் என்பதை அந்த உயிரினங்களின் உள் ளுணர்வு அவற்றுக்குப் புரியவைத்து விடுகிறது.
பூனையின் முகச் சாயல்: உறவினர் ஒருவரின் வீட்டில் பூனை வளர்த்தார்கள். ஒன்று, இரண்டு அல்ல. திரும்பிய பக்கமெல்லாம் பூனைகள். அவை ஒவ்வொன்றுக்கும் செல்லப் பெயர்கள். அந்த வீட்டம்மாள் எங்களை வரவேற்க வந்தால், அவர் கால்களை ஈஷிக்கொண்டு ஒரு பூனை வரவேற்கும்.
குடும்பத் தலைவர் முதல் குழந்தைகள்வரை பூனை களை அப்படி நேசித்தார்கள். அவர்கள் எல்லார் முகத்திலும் பூனையின் சாயல் இருந்தது. அவர்களிடமிருந்து ஓர் அழகான பூனைக்குட்டியை அப்பாவிடம் சொல்லி, கெஞ்சிக் கூத்தாடி வீட்டுக்கு வாங்கி வந்துவிட்டேன்.
இரண்டே நாளில் காணாமல் போய்விட்டது. அப்பா அந்த உறவினரைக் கடைத் தெருவில் சந்தித்தபோது, பூனைக்குட்டி காணாமல் போன விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். “அது இரண்டே நாள்களில் திரும்பி வந்துவிட்டதே” என்றாராம் அந்த உறவினர். அவர்கள் வீடு பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. எப்படிப் பத்திரமாகச் சென்றதோ என்று ஆச்சரியப்பட்டோம். கையில் முகவரியை வைத்துக்கொண்டு அலைகிற மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்தப் பூனைக்குட்டி ஞாபகம் வந்துவிடுகிறது.
காந்தியும் பூனையும்: காந்தி இங்கிலாந்து சென்றபோது ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த அயல்நாட்டு அன்பர் கூறிய செய்தி ஒன்றினை மனுபென் தன் நாள் குறிப்பில் எழுதியிருக்கிறார். ‘காந்திஜி மூன்று நாள்கள் எங்கள் வீட்டில் தங்கினார். உணவு மேசையில் அவர் சாப்பிட உட்காரும்போதெல்லாம் எங்கிருந்தோ ஒரு பூனை ஓடிவந்து அவர் மடியில் உட்கார்ந்துகொள்ளும். காந்திஜி விடைபெற்றுச் சென்ற பிறகு அந்தப் பூனை வருவதே இல்லை.’
காக்கையும் பெரியவரும்
பக்கத்து வீட்டில் 98 வயது முதியவர் இருந்தார். தினசரி அதிகாலை அவர்கள் வீட்டு மதில்சுவரில் ஒரு கைப்பிடி மிக்சர் வைப்பார். காக்கைகள் காச்சுமூச்சென்று கத்திக்கொண்டு சிறகடித்தபடி மிக்சரைச் சாப்பிடும். ‘அமாவாசை யன்று நான் உணவுக் கவளத்தை வைத்தும் வராமல் அடம்பிடிக்கும் காக்கைகள், உங்கள் வீட்டுக்கு வருவது எப்படி?’ என்று கேட்டேன்.
‘அவை எல்லாம் எங்கள் முன்னோர்கள். நான் வைத்தால் சாப்பிடும். உங்களுக்குத்தான் இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாதே! நம்பாவிட்டால் வராது’ என்றார். அவர் காலமாகிவிட்டார். அவர் விட்டுச் சென்ற காக்கைக்கு மிக்சர் வைக்கும் வழக்கத்தை அவர் மனைவி (வயது 85) தொடர்ந்தார்.
பூச்சி உருண்டை: சிறுவயதில் மின்வசதி இல்லாத கிராமத்தில் வசித்தோம். இரவில் மரங்களில் கூட்டம் கூட்டமாக மின்மினிப் பூச்சிகள் சின்னஞ்சிறு பல்புகளைக் கட்டிவிட்டது போல் தெரியும். பூச்சிகளின் அதிசய உலகத்தை எங்கள் அறிவியல் ஆசிரியர் அறிமுகம் செய்து வைத்தார். இலைப்பூச்சி, குச்சிப் பூச்சி, தட்டாரப் பூச்சி, சிவப்பு வெல்வெட் பூச்சி என்று பார்த்து மகிழ்ந்த என் பால்யகாலம் இன்றைய நகர்ப்புறக் குழந்தைகளுக்கு வாய்க்கவில்லையே என்று ஏங்கினேன்.
இந்த ஏக்கத்தைப் போக்கும்விதமாக அடுக்குமாடி கான்கிரீட் கட்டிடங்களுக்கு வருகைதரும் பூச்சிகள் பற்றி ஒரு புத்தகமே எழுதிவிட்டார் எழுத்தாளர் ஆதிவள்ளியப்பன். பூச்சிகளைக் கண்டு பயப்படாமல் அவற்றை ரசிக்கவும் பூச்சிகளைப் பொருட்படுத்தவும் ‘எனைத் தேடி வந்த பூச்சிகள்’ புத்தகம் கற்றுக் கொடுக்கிறது. அமெரிக்கா சென்று வந்த உறவினர் அங்கெல்லாம் வீடுகளில் பூச்சிகளையே பார்க்க முடியாது என்று கூறியபோது, பூச்சி இல்லா வீட்டுக்குப் போக வேண்டாம் என்று பாடினார் அப்பா.
ஒருநாள் வாக்வம் கிளீனர் என்கிற மின் துடைப்பானை விற்க வந்த இளைஞர், அது எப்படி வேலை செய்கிறது என்று காண்பித்தார். விர்ரென்ற ரீங்காரத்துடன் வீடு முழுவதும் மூலை முடுக்கெல்லாம் துழாவி பூச்சிகளையும் பல்லிகளையும் கபளீகரம் செய்தது அந்த ஒற்றைக்கை இயந்திரப்பூச்சி. பிறகு அதன் உள்ளிருந்து உருண்டையாகப் பந்து போன்ற ஒன்றினை எடுத்துக் காண்பித்தார்.
‘நீங்க இனிமே நிம்மதியா தூங்கலாம்! இது வீட்டிலிருந்த பூச்சியெல்லாம் உறிஞ்சி எடுத்த உருண்டை!’ என்றார். அப்பா பதறிவிட்டார். ‘இந்த மெஷின் வேண்டாம். அவரைப் போகச் சொல்லு’ என்று சொல்லிவிட்டார். அவர் செய்த வேலையால் வீடு அழகால் நிரம்பியது. அப்பாவின் மனம் அழுகையால் நிரம்பியது.
‘பெயர் பெற்ற’ பூச்சிகள்: சில பூச்சிகளுக்குத்தான் எவ்வளவு விநோதமான, நயமான காரணப் பெயர்கள்!. இரண்டு முன் கால்களை எழுந்து நின்று கோத்து கும்பிட்டபடி நிற்கும் பூச்சியின் பெயர் ‘கும்பிடு பூச்சி’. புத்தகங்களை ஓட்டை போட்டு அரித்துவிடும் வெள்ளிபோல் மினுங்கும் பூச்சி ராமபாணப் பூச்சி. சாமர்த்தியமாகப் பேசத் தெரியாதவரை வாயில்லாப் பூச்சி என்கிறோம். பாரதி மனிதர்களை. கலகமானிடப் பூச்சிகள் என்று சாடுகிறார். ஏற்கெனவே 10 லட்சம் வகையான பூச்சிகள் உலகில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் கலகமானிடப் பூச்சி களையும் அவற்றோடு சேர்ப்பதா, வேண்டாமா?
பிரெஞ்சு எழுத்தாளர் காஃப்கா ஒரு மனிதன் திடீரென்று பெரிய கரப்பான் பூச்சியாக மாறிவிட்டால் என்ன நடக்கும் என்பதை வளர்சிதை மாற்றம் (Metamorphosis) என்கிற நாவலில் மிக நேர்த்தியாக விவரித்திருப்பார்.
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com