கல்வி எனும் ஆயுதம்: படிச்சு என்ன ஆகப்போகுது?

கல்வி எனும் ஆயுதம்: படிச்சு என்ன ஆகப்போகுது?
Updated on
2 min read

பள்ளிக் கால நண்பர்களில் மறக்கவே முடியாதவன் செந்தில். நண்பர் கூடுகைகளில் அவன் இருந்தால், ‘சரஸ்வதி சபதம்’ படத்தில் இடம்பெற்ற, ‘கல்வியா, செல்வமா, வீரமா…’ பாடல் அவ்வப்போது பாடப்படும்.

‘வீரமா’ எனும் வார்த்தையில் மட்டும், ஒரு ‘ம்’ சேர்த்துக் கூடுதல் அழுத்தத்துடன் குறிப்புணர்த்துவார்கள் நண்பர்கள். அவன் மனதுக்குப் பிடித்த தோழி வீரம்மா, அந்த இடத்தைக் கடந்துசெல்கிறாள் என்பதுதான் அந்தச் சங்கீதம் உணர்த்தும் சங்கேதம். ஒரு வகையில், அந்த மூன்று வார்த்தைகளும் செந்திலுடன் நேரடித் தொடர்புகொண்டவை.

நாங்கள் வசித்த ஹவுசிங் போர்டு குடியிருப்பு வளாகத்துக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்தவன் செந்தில். அவனுடைய அப்பத்தாதான் அவனை வளர்த்தார். ஏழைப் பையன். வீரன். எங்கள் பகுதியில் கிணற்றில் கிரிக்கெட் பந்து விழுந்துவிட்டால் அச்சப்படாமல் படிகளில் இறங்கிப் பந்தை எடுத்துவருபவன். நல்ல பெளலர்.

ஓரளவு படிக்கக்கூடியவன். ஆனால், அவன் தொடர்ந்து கல்வியில் சோபிக்க முடியவில்லை. பாதி நாள்கள் பள்ளிக்கே வர மாட்டான். அவனை எப்படியாவது படிக்க வைக்குமாறு கண்ணீர் மல்க ஆசிரியர்களின் காலில் அவன் அப்பத்தா விழுவதைப் பார்த்திருக்கிறேன். ஏனோ, ஆசிரியர்களுக்கு அந்தக் கஷ்டத்தைக் கொடுக்க செந்தில் விரும்பியதே இல்லை. பள்ளி இருக்கும் பகுதியில் தன் நிழலே விழாமல் பார்த்துக்கொள்வான். வறுமையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

பத்தாம் வகுப்பை அவன் முடிக்கவே இல்லை. பின்னாள்களில் தக்காளி மண்டி வைத்து, கவுன்சிலராகி, ஊருக்குள் ஒரு பிரமுகராக வளர்ந்துவிட்டான். இரண்டு பையன்களையும் நல்ல பள்ளி, கல்லூரிகளில் படிக்கவைத்துவிட்டான். ஒருமுறை அவனைச் சந்தித்தபோது சொன்னான்: “இனி என் ரெண்டு பசங்களும் ஆளாகிடுவானுங்கங்கிற நம்பிக்கை வந்துடுச்சு நண்பா. அதுக்கான எல்லா ஏற்பாட்டையும் செஞ்சுட்டேன்.

நான் பட்ட கஷ்டம் என் புள்ளைகளுக்கு வந்துடக் கூடாதுல்ல.” அதைச் சொன்னபோது அவன் கம்பீரக் குரலில் பிசிறு ஏதும் தட்டவில்லைதான். ஆனால், அவன் கண்கள் ஓரிரு நொடிகள் மூடி, பின் மெல்லத் திறந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.

‘ஸ்கூல் டிராப்-அவுட்’ எனும் அடைமொழியுடன், வாழ்க்கையில் அவன் எதிர்கொண்ட உடலுழைப்பும் சிந்திய வியர்வையும் அந்த ஓரிரு நொடிகளில் அவனது நினைவடுக்குகளில் உதிரமாக வழிந்திருக்கும். அவனைப் போலவே படிப்புக்கு முழுக்குப் போட்ட இன்னும் சில நண்பர்கள் ஊருக்குள் கூலி வேலைதான் பார்க்கிறார்கள். செந்தில் அடைந்த வெற்றியின் பின்னணியில் எத்தனையோ திருப்பங்களும் நல்வாய்ப்புகளும் இருந்தன. அவை மற்ற நண்பர்களுக்கு வாய்க்கவில்லை.

இப்படி எல்லாருடைய வாழ்விலும் இருந்து எடுத்துக்காட்டுகளை அடுக்க முடியும். கல்வியின் வலிமை அறிந்தவர்கள் இதன் தாத்பரியத்தைப் புரிந்துகொள்வார்கள். ஆனால், பாருங்கள்! கல்லூரி மேடைகளில் ஏறி, “படிச்சு என்ன பிரயோஜனம்? மாடு மேய்க்கலாம். சாணி அள்ளி சம்பாதிக்கலாம்” என்று அரசியல் கட்சித் தலைவர்கள் மாணவர்களுக்கு ‘அறிவுரை’ சொல்கிறார்கள்.

“ஆடு, மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன்” என்று முழங்குகிறார்கள். “எல்லாரும் படிக்கணுமா?” என்று பிரபலங்களின் வாரிசுகள் ரியாலிட்டி ஷோக்களில் சீறுகிறார்கள். வாசிப்பின்வழி வந்ததாகச் சொல்லிக்கொள்பவர்கள் அதை லஜ்ஜையின்றி ஆமோதிக்கிறார்கள்.

காமராஜர் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னர் ஆறாயிரம் பள்ளிகள் மூடப்பட்டன. அவர் அந்தப் பதவிக்கு வந்த சிறிது காலத்திலேயே அந்தப் பள்ளிகள் திறக்கப்பட்டதுடன் மேலும் 36 ஆயிரம் பள்ளிகளும் முளைத்தன. கட்டணக் கல்விக்கு முற்றுப்புள்ளி, மூன்று மைல்களுக்கு ஒரு தொடக்கப்பள்ளி, மதிய உணவு, இலவசப் பாடப் புத்தகங்கள் என்று காமராஜர் தொடங்கிவைத்த கல்வி வேள்வியைத் திமுக, அதிமுக அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு முன்னெடுத்ததன் பலனைத்தான் இன்று தமிழ்நாடு அனுபவிக்கிறது.

- chandramohan.v@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in