திண்ணைப் பேச்சு 21: அழகுக்கு அழகு சேர்த்த பகத்சிங்கின் கையெழுத்து!

திண்ணைப் பேச்சு 21: அழகுக்கு அழகு சேர்த்த பகத்சிங்கின் கையெழுத்து!
Updated on
2 min read

வான்பரப்பில் ஒரு
நாரைக்கூட்டம்
வரைந்து சென்றது
இயற்கையின் கையெழுத்தை!

பள்ளி மாணவர்களும் சரி, பெரிய வர்களும் சரி, கையெழுத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அழகான கையெழுத்தைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. முன்பெல்லாம் பள்ளி களில் அழகான கையெழுத்துக்குத் தனி மதிப்பெண் தரப்பட்டது.

கையெழுத்தின் இடத்தைக் கணினியின் தொடுதிரை பிடித்துக்கொண்டுவிட்டது. அழகான அச்செழுத்து வரைவுகளை இப்போது யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். தேவையே செயல்பாடு களைத் தீர்மானிக்கிறது. கையெழுத்தின் தேவை குறைந்துவிட்டது.

கையெழுத்து என்பது ஒருவகை மனப் பயிற்சி என்பார் என் தமிழாசிரியர். எண்ணத்தின் ஒழுங்கு எழுத்தில் புலப்படும் என்பார். மூளையின் நுண்ணிய செயற்பாடுகளைக் கையெழுத்தை வைத்து அறிய முடியும் என்கிறது அறிவியல். பர்கின்சன் மறதிநோய், பக்கவாதம் வரப்போவதை, கையெழுத்து காட்டிக் கொடுத்துவிடுகிறது. இத்தகைய நோய்கள் வரும் முன்னர் கையெழுத்து நேராக வராமல் கோணலுடன் போகும்.

மகாத்மா காந்தி தன் கையெழுத்து கிறுக்க லாக இருப்பதைப் பற்றிக் கவலைப்பட்டார். கையெழுத்தைச் சீராக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால், அந்தக் கிறுக்கல் கையெழுத்துதான் பிரிட்டிஷ் அரசை மண்டியிட வைத்தது. நாட்டின் தலையெழுத்தை மாற்றியது.

பகத்சிங்கின் கையெழுத்து வெகு அழகாக இருக்குமாம். அவரைப் பற்றிய நூலின் பல பக்கங்கள் அவர் கையெழுத்தி லேயே அச்சாகியிருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் அவர் தன் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது.

‘அப்பா, நீங்கள் ஒருபோதும் என் மரண தண்டனையை விலக்கும்படி ஆங்கிலேய அரசைக் கெஞ்சவே கூடாது!’

ஏற்கெனவே அழகான பகத்சிங்கின் கையெழுத்தை இந்த வரி மேலும் அழகாக்குகிறது!

எழுத்துக்குப் பொட்டு: ‘எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்’ என்று பாரதி பாடிய காரணம் பாரதியின் கையெழுத்தைப் பார்த்தால் புரியும். புதுவை பாரதி நினைவகத்தில் அவர் கையெழுத்துப் பிரதியைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

புள்ளி வைக்க வேண்டிய எழுத்துகளின்மீது அவர் வைத்திருப்பது புள்ளி அல்ல பொட்டு. நேரில் பார்த்தால் அடடே ஆமாம் என்பீர்கள். எழுத்தைத் தெய்வமாகக் கொண்டாடுகிற பாரதி அதற்குப் பொட்டு வைத்து வணங்குவது பொருத்தம்தானே?

எழுத்தாளர் சுஜாதா பல ஆண்டுகளுக்கு முன்னரே கையால் எழுதுவதைக் கைவிட்டுவிட்டார். எல்லாமே கணினிதான். புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் கணினியில் லகுவாக எழுதித் தள்ளுகிறார்கள். எங்களைப் போன்ற பழைய தலைமுறை ஆசாமிகளைப் பார்த்து இன்னமும் கையால்தான் எழுதுகிறீர்களா என்று பரிதாபமாகப் பார்த்தபடி கேட்கிறார்கள்.

காகிதமில்லா அலுவலகங்கள் வந்துவிட்டன. அங்கெல்லாம் கையால் எழுதும் தேவை குறைந்துவிட்டது. முன்பெல்லாம் நீதிமன்ற வளாகங்களில் பத்திர எழுத்தர்கள் இருப்பார்கள். முத்திரைத் தாள்களில் அவர்களின் கையெழுத்தில் அதற்கென்றே உரிய நடையில் எழுதப்படும் பத்திரங்கள் மதிப்பு வாய்ந்தவையாகக் கருதப்பட்டன. பத்திர எழுத்தராகவே வேலை பார்த்துக் குடும்பம் நடத்தியவர்கள் உண்டு. இப்போது பழைய பத்திர எழுத்தர்களை மறைந்துவிட்ட ஜீவராசிகளின் பட்டியலில்தான் சேர்க்க வேண்டும்.

எழுத்தாளர்களுக்குச் சில நேரம் WRITERS CRAMP என்று சொல்லப்படும் எழுத்து முடக்கம் ஏற்பட்டுவிடும். அவ்வாறு ஏற்பட்டபோதும் எம்.வி.வி. அஞ்சல் அட்டைகளில் அரும்பாடுபட்டு கடிதங்களை எழுதிக்கொண்டே இருந்தார்.

ஜப்பானில் ‘காலிகிராபி’ கையெழுத்துக் கலை என்றே சித்திரக் கையெழுத்துமுறை இருக்கிறது. தனி எழுத்துகளால் ஒரு விஷயத்தைக் குறிப்பிடாமல் அதை அப்படியே சித்திரமாக வரைந்துவிடுவது. அளவு கடந்த கலை உணர்வு மனதில் ததும்பிக்கொண்டிருந்தால்தான் இது சாத்தியம்.

சீனரிடம் கற்ற தமிழ் எழுத்து: நான் பணிபுரிந்த தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு 1990வாக்கில் தமிழ் கற்பதற்காக சீனாவிலிருந்து வாங் பெள செள வந்திருந்தார். இவரது தமிழ்க் கையெழுத்து அழகும் ஒழுங்கும் சேர்ந்து நெஞ்சை அள்ளும். தமிழ்நாட்டில்கூட அப்படி யாராவது எழுதுவார்களா என்பது சந்தேகம்தான்.

அவர்தான் எனக்கு நேர்த்தியாகத் தமிழ் எழுதச் சொல்லிக் கொடுத்தார். எல்லாத் தமிழ் எழுத்துகளும் ஒரு வட்டத்திலிருந்து உருவாகின்றன. வட்டத்தின் ஓரக்கோடுகளை நீக்கிவிட்டால் அழகான கையெழுத்து கிடைத்துவிடும். உங்கள் கையெழுத்து முத்துமாலை ஆகும் வித்தை இது.

எழுத்துக்காரத் தெரு: சரபோஜி மன்னர் காலத்தில் சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஓலைச் சுவடிகளில் எழுத்தாணியால் எழுதப்பட்ட தெலுங்கு நூல்களைத் தமிழில் படியெடுத்து, காகிதத்தில் எழுத நியமிக்கப்பட்டவர்கள் எமது முன்னோர்கள். இவ்வாறு எழுதியதற்கு தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் சிற்றூரில் ஒரு தெரு சர்வமானியமாக வழங்கப்பட்டது. அந்தத் தெருவின் பெயரே எழுத்துக்காரத் தெரு. தெரு இன்றும் அதே பெயரில் இருக்கிறது, எழுத்துக்காரர்கள்தாம் இல்லை.

துணைவேந்தர் தொடங்கிய இயக்கம்: எண்பதுகளிலேயே தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் தஞ்சை சுற்றுவட்டாரக் கிராமங்களில் எழுதப் படிக்கத் தெரியாத கிராமவாசிகளுக்கு எழுத்தறிவு இயக்கம் தொடங்கினார்.

முன்னிரவுகளில் பள்ளித் தாழ்வாரங்களில் அவர்களுக்குக் கையெழுத்து போடக் கற்றுக் கொடுத்து, கைநாட்டு வைக்கும் பழக்கத்தை ஒழித்தார். அவர்கள் கற்பதற்கான சிறிய பாடநூல்களை, துணைப் பதிவாளராக இருந்த இரா. சுப்பராயலு உருவாக்கினார்.

என்னைப் பற்றி ஓர் ஐ.ஏ.எஸ். அலுவலர் அவரிடம் “சுருக்கெழுத்து தெரியாத இவரை உங்கள் செயலராக வைத்திருப்பது கஷ்டமாக இல்லையா?” என்று கேட்டார்.

“அவருக்குச் சுருக்கெழுத்து தெரியாதுதான். ஆனால், என் கையெழுத்தை நன்றாகப் படிக்கக்கூடியவர் இங்கே அவர் ஒருவர்தான்!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் வ.அய்.சு.

(பேச்சு தொடரும்)

- thanjavurkavirayar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in