

ஆழிசூழ் உலகினை வாசனைசூழ் உலகு என்றும் வர்ணிக்கத் தோன்றுகிறது. வாழ்வை இனிதாக்குவது வாசனைதான். தஞ்சையின் புகழ்பெற்ற ஊதுபத்தி தயாரிப்பாளர் அப்துல் கவுஸ் மழைக்குமுன் வீசும் மண்வாசனையை, மணக்கும் ஊதுபத்தியாக எப்படித் தயாரிப்பது என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
நூறு ஆண்டு பழமையான அரிதான அகர்பத்தி ஒன்று அவரிடம் இருக்கிறது. அதை அவர் ஒரு கண்ணாடிக் குழாயில் போட்டு வைத்திருக்கிறார்.
“இந்த வகை அகர்பத்திகளைத் தயாரிக்கும் கைவினைஞர்கள் இப்போது இல்லை. என் தந்தையார் காலத்திலிருந்து இது இந்தக் கடையில் உள்ளது. இதை ஏற்றி வைத்தால் தெருவே மணக்கும்”’ என்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் வாசனாதி திரவியங்களாலும் பூக்கடைகளாலும் திரும்பிய பக்கமெல்லாம் மணம் பரப்பிய அய்யங்கடைத் தெரு நினைவுக்குவந்தது.
“அந்தப் பழைய வாசனை எங்கே போய்விட்டது?” என்று அப்துல் கவுஸிடம் கேட்டேன்.
“காலத்தோடு வாசனையும் போச்சு” என்று சிரித்தார் கவுஸ்.
சிறு வயதிலிருந்தே வாசனை நம்மோடு வந்துகொண்டிருக்கிறது. நாம்தான் அவற்றின்மீது கவனம்கொள்வதில்லை.
முதுமையின் வாசனை: வயதானவர்களிடம் ஒரு வாசனை இருக்கிறது. நூறு வயதைத் தாண்டிய எங்கள் வீட்டுப் பாட்டி, என்னை வாரியணைத்து முத்தமிடும்போது அவரிடமிருந்து ஒரு வாசம் வரும். அவர் போடுகிற வெற்றிலை, பாக்கு வாசத்திலிருந்து அதைப் பிரித்து உணர்ந்திருக்கிறேன். கனிந்த பழத்தின் வாசனைபோல காலத்தால் கனிந்துவிட்ட வெள்ளந்தியான என் பாட்டியின் உடலிலிருந்து வீசும் வாசனை, முதுமையின் வாசனை.
கிராமத்தில் சாணம் மெழுகிய குடிசை வீடுகளில் வீசுகிற வாசனை அலாதியானது. சுத்தமாக நம்மை உணரச் செய்யும் சுகமான வாசனை அது.
புத்தகத்தின் வாசனை: எங்கள் வீட்டருகே ஒரு முதுபெரும் கிழவர் இருந்தார். அவர் தினம்தோறும் ஒரு பெரிய பழுப்புநிறப் புத்தகத்தை வாசித்தபடி இருப்பார். நான் ஒருநாள் அவரை நெருங்கிப் பேச்சுக் கொடுத்தபோது, ‘நாலாயிர திவ்ய பிரபந்தத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார். அவர் ராகத்தோடு பாசுரங்களை மெல்லிய குரலில் பாடுவது ஒரு வண்டின் ரீங்காரம்போல ஒலிக்கும்.
அந்தப் புத்தகத்தின் நடுவே ஒரு நீண்ட பழுப்பு இலை இருந்தது.
“இது என்ன இலை?”
“இது இலை இல்லை. தாழம்பூ மடல். இந்தப் புத்தகத்தில் பல வருஷங்களுக்கு முன்னால் வைத்தேன். பத்திரமாக இருக்கிறது”.
புத்தகத்தை என்னிடம் நீட்டினார். நான் அந்தப் பக்கத்தைக் பார்த்தபோது மெலிதான தாழம்பூ வாசனை புத்தகத்தின் மூச்சுபோல என்மீது மோதியது. தாழம்பூ வாசனை பாசுரங்களோடு வெளிப்படுவது பரவசம் தருவதாக இருந்தது.
ரோஜா வாசனை: எங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஓவிய ஆசிரியர் ஒருநாள் எங்களிடம் தான் வரைந்து, வண்ணம் தீட்டிய ரோஜா படத்தைக் காண்பித்தார். தாளில் தத்ரூபமாக ரோஜாப்பூ மலர்ந்திருந்தது. அதை முகர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
ரோஜாப்பூ வாசனை அடித்தது.
எனக்கு மட்டுமல்ல. வகுப்பில் அதை முகர்ந்து பார்த்த எல்லாருமே ரோஜா வாசனை வீசுவதாகச் சொன்னார்கள்.
“வாசனை உங்கள் மனதில் இருக்கிறது. படத்தைப் பார்த்ததும் அந்தக் கற்பனைக்கு உயிர் வந்துவிட்டது!” என்றார்.
வாசனை ஏற்கெனவே நமக்குள் இருக்கிறது. முதல் தடவையே நமது மூளை அதைப் பதிவு செய்துவைத்து விடுகிறது. பிறகு அந்தத் தோற்றம் அல்லது பொருளை நேராகப் பார்க்கும்போது உடனடியாக வாசனை நமக்குள் தோன்றச் செய்கிறது. மூளையின் நியூரான்கள் என்பது அறிவியல் உண்மை.
மனோரஞ்சிதம் மரம் எங்கள் வீட்டில் உள்ளது. அதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் தடிமனான இதழ்களுடன் இருக்கும். அந்தப் பூவை நுகரும்போது எந்தப் பழத்தின் வாசனையை நினைத்துக் கொள்கிறீர்களோ அந்தப் பழவாசனை மனோரஞ்சிதத்திலிருந்து வெளிப்படும் என்று சொல்வதுண்டு. நான் அதைச் சோதித்துப் பார்த்தேன். மனோரஞ்சித மலரே ஒரு பழவாசனையுடன்தான் இருந்தது. நான் நினைத்த பழவாசனை எனக்கு பிரமையை ஏற்படுத்தியது. வாசனை குறித்த அறிவியல் உண்மையை இது உறுதிப்படுத்துகிறது.
மனதை மயக்கும் மிளகாய்: அரைப்பதற்கு தானியங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் மாவு மெஷின் கடையில் சற்று நேரம் போய் உட்கார்வது உண்டு. அங்கு அரைக்கப்படும் மிளகாய் வாசனை மனதை மயக்கும்.
உச்சி முகர்தல்: பிறந்த குழந்தையின் உச்சந்தலை வாசனைக்கு ஈடு இணை உண்டா? குழந்தையின் உச்சி முகர்ந்து ஆசீர்வாதம் செய்வது இதனால்தான்!
கோரையில் நெய்த புதுப்பாய்க்கென்று ஒரு வாசனை உண்டு. பச்சைக் கோரையின் பளீர் வாசனை, படுத்தால் ஆனந்தமாகத் தூக்கம் வரும்.
கைராட்டை வாசனை: அப்பாவிடம் ஒரு கைராட்டை இருந்தது. ராட்டை சுற்றும்போது அதிலிருந்து தேங்காய் எண்ணெயும் பஞ்சும் கலந்த ஒரு பரிசுத்த வாசனை வெளிப்படும். காந்தி படத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் வாசனையுடன் ஒரு கைராட்டை சுழலும்.
தஞ்சாவூர் ரசனையில் காப்பி வாசனைக்கும் தாம்பூல வாசனைக்கும் தனி இடம் உண்டு.
எழுத்தாளர் சாவி தமக்குப் பிடித்தமான வாசனை என்பது அவரது காரில் பெட்ரோல் நிரப்பப்படும்போது வருகிற வாசனைதான் என்பார். புது பெயிண்ட், வார்னிஷ் வாசனையும் வாசனைப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியவைதான்.
திருவண்ணாமலையில் கிரிவலப் பாதை முடிவில் கோயிலுக்கு எதிரே திகுதிகுவென எரியும் கற்பூர மேடை வாசனையும் இணக்கமான சூடும் கலந்து விபூதி வாசத்துடன் பக்தியின் வீறுமிக்க பரிமாணம் வெளிப்படும்.
கடைகள்தோறும் சாம்பிராணி வாசனையை விசிறியபடி செல்லும் இஸ்லாமிய அடியார்கள் ஒரு பெரும் புகைமண்டலத்தையே தந்துவிட்டு, சிறுதொகை மட்டும் பெற்றுச் செல்வார்கள்.
வாசனையை அவதானிக்கக் கற்றுக்கொண்டால் போதும். வாழ்வு இனிதாகும்!
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com