

அண்மையில் பூச்சிகளின் அதிசய உலகில் நுழைந்து வந்த அனுபவம் மறக்க முடியாதது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ‘பூச்சிகள் அருங்காட்சியகம்’ இருக்கிறது. ‘வண்ணத்துப்பூச்சி’யிலிருந்து ‘கும்பிடு பூச்சி’ வரை இடம்பெற்றிருக்கும் தகவல் சுரங்கமாக இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது!
பொதுவாக அருங்காட்சியகங்களில் பெரிதினும் பெரிது கேள் என்கிறாற்போல் டைனசோர், காண்டாமிருகம், காட்டெருது போன்ற விலங்குகளின் பிரம்மாண்டமான சிற்பம் ஒன்று நம்மை வரவேற்கும். பூச்சிகள் உலகின் நுழைவாயிலில் வரவேற்பது ‘கும்பிடு பூச்சி'. எங்களின் வழிகாட்டியாக வந்த முனைவர் சித்ரா, பூச்சிகள் குறித்து சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“பூச்சிகளையும் விலங்குகள் என்றே சொல்ல வேண்டும். இரண்டு கிராம் எடை இருக்கும் தட்டான்பூச்சி நன்னீரில்தான் இனப்பெருக்கம் செய்யும். பார்க்கச் சிறிதாக இருந்தாலும் நீண்ட பயணம் செய்து, ஒரு பெருங்கடலைக் கடந்து, வேறொரு நிலப்பரப்பைச் சென்றடையும்! தட்டான்பூச்சியின் மூன்றாவது தலைமுறை பூச்சி மீண்டும் தனது தாத்தா, பாட்டி வாழ்ந்த இடத்தை வந்தடையும்!” என்று அவர் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.
தேனீக்களின் உலகம் இன்னும் நுட்பமானது. அங்கே வேலைப் பிரிவினை, தேன் உற்பத்தித் தொழிற்சாலையின் விதிமுறைகள், தலைமை அதிகாரியான ராணி தேனீயின் சட்டதிட்டங்கள் பற்றிய செய்திகள் மதுரமானவை. மலர்களில் இருந்து சேகரித்து வரும் மகரந்தத்தூளை வாய் வழியாகக் கடத்துவதும் பிறகு உள்ளிருந்து வேதிப்பொருள் கலந்து தேனை உருவாக்குவதும் அதைச் சேகரிக்கும் பெரும்பணியும் பிரமிப்பை ஏற்படுத்தின.
அந்தத் தேன்கூட்டுக்குள் அந்நியர் நுழைந்துவிடாதபடி வாயிற்காப்போர் உண்டு. அப்படியும் சில பூச்சிகள் உள்ளே நுழைந்து தேனைக் கவர்ந்து செல்ல முயலும். ஆனால், வாசனையை வைத்துக் கண்டுபிடித்து வாயிற்காப்பாளர்கள் விரட்டிவிடுவர்.
பாடம்செய்யப்பட்ட பூச்சிகளைப் பார்வைக்கு வைத்திருந்த விதவிதமான வடிவங்களில் ஒன்று, பால்வெளி மண்டலம். “பூச்சிகளே ஒரு பிரபஞ்சம்! சூழலியலில் அவற்றின் இருப்பையும் பொறுப்பையும் மதிக்கத்தக்கவர்களாக நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்” என்று சித்ரா சொன்னபோது, பூச்சிகளின் முக்கியத்துவம் புரிந்தது.