

மழைநாள் ஒன்றில் தெருவில்
குடையும் மழைக்கோட்டும்
பேசியபடி
நடந்துபோயின.
- ஜப்பானியக் கவிதை
வாழ்க்கையின் இனிய தருணங்களை மழைக்காலம் கொண்டு வருகிறது. அப்படியான ஒரு தருணம் அண்மையில் எனக்கு வாய்த்தது. அது ஒரு பேருந்துப் பயணம்.
காஞ்சிபுரத்தில் பேருந்தில் ஏறும்போதே இருட்டிக் கொண்டுவந்தது. கருமேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்.
இருக்கையில் ஜன்னலோரமாக என் பக்கத்தில் ஒரு பெண். கல்லூரி மாணவி என்று பார்த்தாலே தெரிந்தது. மழை பெய்கிறதா என்று பார்ப்பதுபோல் கையை வெளியே நீட்டி, பிறகு இழுத்துக்கொண்டார். கை நீட்டுகிற தினுசே ஒரு குழந்தை மாதிரி இருந்தது. உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.
ஆண்களைக் காட்டிலும் பெண்களிடம் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது. பெரிய மனுஷி தோரணை பெண் குழந்தைகளுக்குச் சீக்கிரமாக வந்துவிட்டாலும், எல்லாப் பெண்களுமே உண்மையில் பெரிய குழந்தைகள்தாம். இப்போது என் பக்கத்து இருக்கை பெண்ணின் முகத்தில் கவலையின் சாயல். மழைக்குமுன் வீடு போய்ச்சேர முடியுமா என்கிற கவலையாக இருக்கும்.
பேருந்து புறப்பட்டது.
எனக்கு அந்தப் பெண்ணிடம் ஏதாவது பேச வேண்டும்போல் இருந்தது. குறைந்த பட்சம் எந்தக் கல்லூரி என்றாவது கேட்கலாம்.
அந்தப் பெண்ணுக்கும் என்னிடம் ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றியிருக்கும்போல.
“தூறல் போடுகிறது” என்றார் கவலைப்படுகிற குரலில்.
“மழை வரட்டுமே!” என்றேன்.
அந்தப் பெண்ணின் கேள்விக்கு இது பதில் இல்லைதான். ஆனாலும் அவர் முகத்தில் ஒரு வியப்பு ரேகை வெளிப்பட்டு மறைந்தது.
“நீங்கள் வேண்டுமானால் இப்படி ஜன்ன லோரம் உட்கார்ந்து கொள்கிறீர்களா? எனக்குச் சாரல் ஒத்துக்கொள்ளாது. ஜலதோஷம் பிடிச்சுடும்.”
நாங்கள் இடம் மாறிக்கொண்டோம். நான் எப்போது ஜன்னலோரம் உட்காருவேன் என்று காத்திருந்த மாதிரி மழைச்சாரல்.
“சாரல் ஜோரா இருக்கு” என்றேன்.
“நனைஞ்சுடப் போறீங்க. ஷட்டரை வேணும்னா இறக்கி விட்டுக்கோங்க” என்று குரலில் ஒரு கரிசனம்!
“நனையறதுக்குத்தான் நான் இங்கே உட்கார்ந்ததே” என்றேன் சிரிப்புடன்.
“உங்களுக்கு மழைன்னா ரொம்பப் பிடிக்குமோ?”
“உள்ளங்கையில் மழைநீரைப் பிடிச்சு குடிக்கும் அளவுக்குப் பிடிக்கும்!”
“அதெல்லாம் சின்ன வயசுல” என்று சிரித்தார் அந்தப் பெண்.
“மழை குழந்தைகளுக்கு மட்டும் பெய்யறதில்லை. நமக்கும்தான். மழை நம்மைக் குழந்தைகளா ஆக்கிடுது.”
“நீங்க எங்க வேலை பார்க்கறீங்க?”
நான் கதை எழுதுகிற ஆசாமி என்று சொல்லி அந்தப் பெண்ணை கலவரப்படுத்த விரும்பவில்லை.
“ப்ச் ஏதோ ஒரு வேலை. மழைதாங்க முக்கியம்” என்றேன் மழையை வேடிக்கை பார்த்தபடி. மழைச்சாரலின் ஊடாக வீசிய காற்று அப்படியே மழையைப் புடவை முந்தானையாக வளைத்துப் போயிற்று.
“சரியான மழைப் பைத்தியம் நீ்ங்க.”
அவர் எடுத்துக்கொண்ட உரிமை எனக்குப் பிடித்தது.
“நீங்க மட்டுமென்ன? மழை வரலேன்னா என்கூடப் பேசி இருப்பீங்களா?”
“உண்மைதான். மழை நம்ம ரெண்டு பேரையும் பிரெண்ட்ஸ் ஆக்கிருச்சு.”
“மனுஷங்க என்னதான் தப்பு செஞ்சாலும் கடவுள் மனுஷங்க மேல காட்டற அன்புதான் மழையாகப் பெய்யற மாதிரி இருக்கு!”
“இதுவே ஒரு கவிதை மாதிரி இருக்கு! எனக்கு ஒரு தோழி இருக்காங்க பரமக்குடியில். உஷாராணின்னு பேரு. கவிதையெல்லாம் பிரமாதமா எழுதுவாங்க. மழை பத்தியே முழுக்க கவிதை எழுதி அதைப் புத்தகமா போட்டிருக்காங்க!”
“முழுசும் மழை பத்தியா? பலே ஒரு கவிதை ஞாபகம் இருந்தா சொல்லுங்களேன்!”
“மழைக்குப் பயந்துகொண்டு குடையை விரிக்காதீர்கள்னு ஒரு கவிதை எழுதியிருப்பார். குடையை விரித்து மழையைப் புறக்கணிப்பது அம்மாவைப் புறக்கணிப்பது போல் இருக்காம்!”
“ஏன் அப்படி?”
“அம்மாவோட அஸ்தியைக் கரைச்ச கடல்லேர்ந்து வர்ற நீராவிதானே ஒவ்வொரு மழையும்னு எழுதியிருப்பார்!”
“எனக்கும் மழை வரும்போதெல்லாம் அம்மா ஞாபகம் வந்துவிடும்!”
“அதோ அங்க பாருங்க, அந்த மாடு மழையில் நனைஞ்சுகிட்டு ஆனந்தமா நிக்குது! மனுஷங்கதான் மழைக்குப் பயப்படுறாங்க!”
கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். பேருந்து போய்க்கொண்டிருந்தது. ஓட்டுநருக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் வைப்பர் மெளனமாக இயங்கிக்கொண்டு இருந்தது.
“மழை வந்துவிட்டால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி” என்று சொல்லி மெளனத்தைக் கலைத்தேன்.
“ஆமாம். மழையில் நனைந்துகொண்டே புத்தகப் பையோடு வீட்டுக்குப் போகிற குழந்தைகளைப் பார்த்தால் பொறாமையா இருக்கும். தெருவில் போகிற தண்ணீரில் காகிதக் கப்பல் விடலாம். மழை விட்ட பிறகு தெரியும் ரெயின்போ அழகாக இருக்கும்!”
“சின்ன வயசுல உங்கள் மழை அனுபவம் பத்திச் சொல்லுங்களேன்” என்று கேட்டார் அந்தப் பெண்.
“ரொம்ப சின்ன வயசு. ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படித்துக் கொண்டி ருந்தேன். என் தம்பிக்கு மூணு வயசுதான் இருக்கும். வைசூரியில் இறந்துவிட்டான். ரைஸ்மில் போகிற வழியில் குளத்தங்கரை ஓரம் அவனைப் புதைத்தார்கள்... ஒருநாள் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.
நான் அப்பாவின் குடையை எடுத்துக்கொண்டு குளக்கரைக்கு ஓடினேன். தம்பியைப் புதைத்த மண்மேட்டின்மீது குடையைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே நின்னேன். அப்பா என்னைக் கண்டுபிடிச்சு தரதரன்னு வீட்டுக்கு இழுத்துப் போனார். ‘அப்பா, தம்பி மழைல நனைஞ்சுருவாம்பா… நனைஞ்சுருவாம்பா…’ என்று அழுதுகொண்டே போனேன்!”
அந்தப் பெண் என் சோகமான நினைவை மாற்ற நினைத்தார் போலும்.
“சார், நீங்க எந்த ஊர்?”
“மழை ஊர். மழைத் தெரு. மழைவீடு. போதுமா?”
“ஐயோ, போதும் சார் உங்கள் மழைப் புராணம்!”
ஜன்னலுக்கு வெளியே வெளிச்சப் புள்ளிகள்.
“அடடா! நான் இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு. போயிட்டு வரேன் சார்.”
மனித நெரிசலைத் தள்ளிக்கொண்டு சிரித்தபடி கையாட்டிவிட்டு, பேருந்தின் படிக்கட்டு நோக்கிச் சென்றார்.
நானும் கை அசைத்தேன்.
பேருந்து புறப்பட்டது. ஒரு மறக்க முடியாத நட்பைப் பரிசளித்துவிட்டு, நிதானமாகப் பெய்துகொண்டிருந்தது மழை.
ரயில் சிநேகம்போல இது மழை சிநேகம் போலும்!
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com