

மனித மனதில் கிலேசத்தையும் கிளர்ச்சியையும் ஒருசேரத் தூண்டும் விஷயங்களில் பேய்களுக்கு அடுத்ததாகப் பெரும் விருப்பத்துக்குரியவை ஏலியன்கள் என அழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகளும் பறக்கும் தட்டுகளும்தாம்.
‘எங்கள் வீட்டுப் புழக்கடையில் பறக்கும் தட்டைப் பார்த்தேன்’, ‘ஏலியன்கள் என்னை அலேக்காகத் தூக்கிச் சென்று பறக்கும் தட்டில் வைத்து பல்லைப் பிடித்துப் பரிசோதித்தார்கள்’ என்றெல்லாம் அமெரிக்கர்கள்தாம் அவ்வப்போது பீதியைக் கிளப்புவார்கள். அப்படியான தகவல்களில் பெரும்பாலானவை விஞ்ஞானிகளோடு வீம்பாக விளையாடும் விஷமத்தனங்கள். மண்டையைப் பிய்த்துக்கொள்ளவைக்கும் மிகச் சில மர்மங்களும் உண்டு. ஆனால், அவையும் அறிவியல் ஆதாரம் இல்லாதவை என்பதால் பின்னாள்களில் புறந்தள்ளப்பட்டவை.
புதிய நாமகரணம்: முன்பெல்லாம் அடையாளம் கண்டறியப்படாத பறக்கும் பொருள் (UFO - Unidentified flying object) என விளிக்கப்பட்ட பறக்கும் தட்டுகள், அண்மைக்காலமாக அடையாளம் கண்டறியப்படாத விசித்திர நிகழ்வுகள் (UAP- Unidentified Anomalous Phenomena) எனப் புதிய நாமகரணம் சூட்டப்பட்டிருக்கின்றன. வானில் மட்டுமல்ல, கடலில்கூட விசித்திரமான மிதவைகள் காணப்பட்டதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் விசித்திரத்தின் பெயர் எல்லை விஸ்தரிக்கப்பட்டுவிட்டது போலும்!
பொதுவாகவே ஹாலிவுட் படங்களில் அமெரிக்காவின் ஏதோ ஒரு மாகாணத்தின் குறுக்குச் சந்தில் குண்டு விழுந்தாலும் அகில உலகுக்கும் ஆபத்து என்பதுபோல் சித்தரித்துப் படமெடுத்து நம்மூரிலும் கல்லா கட்டுவார்கள். அந்த வரிசையில் ஏலியன்களும் எந்நேரமும் வாஷிங்டன் வானில் வட்டமிடுவதாகவே அறிவியல் புனைகதைத் திரைப்படங்கள் வெளியாகும். உலகத்தைக் காக்க அமெரிக்க அதிபரே ஆகாயம் ஏறி அதகளம் புரிவார் (‘இண்டிபெண்டன்ஸ் டே’ 1996).
இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது எகிப்து. பிரமிடுகளைக் கட்டித் தந்ததே ஏலியன்கள்தாம் என்றொரு சதிக் கோட்பாடு ஏக பிரபலம். நம்பகமான சேனல் என நம்மால் நம்பப்பட்ட டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்களில்கூடக் கறுப்பு கோட் அணிந்த கக்கேஷிய கனவான்கள் ‘பண்டைய காலப் பறக்கும் தட்டுகள்’, ‘ஏவாள் காலத்து ஏலியன்கள்’ என்றெல்லாம் ‘சும்மா எதையாச்சும்’ (உபயம்: சீமான்) பேசிக்கொண்டிருப்பார்கள்.
பயிர் வட்டங்கள், பிரம்மாண்ட வரைபடங்கள் போன்ற விநோதங்கள் ஏலியன்களின் கணக்கில் எழுதப்பட்டுவிடும். கல்யாண வீடியோவுக்குக்கூட டிரோன்கள் பயன்படுத்தப்படும் இன்றைய யுகத்தில் பலரும் அவற்றைப் பறக்கும் தட்டுகளாகப் ‘பார்க்கும்’ அபத்தமும் அரங்கேறுகிறது. இவ்வளவு ஏன், விளையாட்டாகப் பறக்கவிடும் பட்டங்களைக்கூடப் பறக்கும் தட்டெனக் கருதிப் பதறியவர்களின் கதைகள் ஏராளம். நாசா ஏற்கெனவே விளக்கங்களை அளித்தும், வாட்ஸ்-அப் வானியலாளர்கள் நாசா பெயரிலேயே வகை வகையான வதந்திகளைப் பரப்பி நாசம் செய்கிறார்கள்.
மெக்ஸிகோ ஏலியன்கள்: உலகமயமாக்கல் புண்ணியத்தில் இப்போதெல்லாம் பறக்கும் தட்டுகள் பாரெங்கும் வலம்வருகின்றன போலும். சமீபத்தில் சென்னை முட்டுக்காடு வரை பறக்கும் தட்டுகள் வந்துசென்றதைச் சிலர் பார்த்ததாகச் செய்திகள் வெளியாகின. அதன் உண்மைத்தன்மை பற்றி யெல்லாம் யாரும் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை. செய்தியில் பரபரப்பு இருக்கிறது. போதாதா!
மிகச் சமீபமாக, மெக்ஸிகோவில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ஏலியன் சடலங்கள் என்று உலகம் முழுவதும் ஊடகங்களில் செய்திகள் அடிபடுகின்றன. தூங்கிக்கொண்டிருக்கும் துவாரபாலகர்கள்போலத் தோற்றமளிக்கும் அந்த உருவங்களைப் பார்த்தால், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே அவை ஏலியன்கள் என நம்ப மாட்டார். ஆனாலும் உறுத்தல், பொறுத்தல் எதுவுமின்றி மெக்ஸிகோ அரசே இந்தச் செய்தியைப் பரப்புகிறது.
போதாக்குறைக்கு, இவற்றில் ஓர் ஏலியன் பெண் என்றும் அதன் வயிற்றில் முட்டைகள் போன்ற பொருள்கள் இருப்பதாகவும் இன்னொரு செய்தி. இதையெல்லாம் ‘நாம் தமிழர் தம்பிகள்’போல அப்படியே நம்ப நாசா தயாராக இல்லை. காத்திரமான ஆதாரங்களை வெளியிடுமாறு மெக்ஸிகோவைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. பின்னே? புரட்டாகவே இருந்தாலும் ‘அயலான்’கள் அமெரிக்காவில் மட்டும்தானே கண்டெடுக்கப்பட முடியும்!
- chandramohan.v@hindutamil.co.in