

பெயரில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாகக் கடந்து போய்விட முடியாது. பெயரில் என்னவோ இருக்கத்தான் செய்கிறது. பெயர் என்பது நாம் குழந்தையாக இருந்தபோதே நமக்குச் சூட்டப்பட்டது. பெயர் சூட்டும் வைபவத்தில் குழந்தையைத் தொட்டிலில் இட்டு அதன் காதில் அதற்குச் சூட்டிய பெயரை உச்சரிக்கும் வழக்கம் உண்டு. விவரம் தெரியும் வயது வந்ததும் இந்தப் பெயரை எனக்கு ஏன் வைத்தாய் என்று கேட்டால், உன் காதில் சொல்லிவிட்டுத்தான் வைத்தோம் என்று தப்பித்துக்கொள்ளலாம் பாருங்கள்.
ஆரோவில் கவிஞர் இரா.மீனாட்சி குழந்தைக்குப் பெயர் சூட்டல் என்கிற பெயரில் தன் ஆதங்கத்தை ஒரு கவிதையாக வடித்திருப்பார்.
பிள்ளைக்குப் பெயர் சூட்டணும்
அவசரம் என்னத்துக்கு?
அதன் விழிப்பை
அதுவே பேசும்வரை
நிர்வாணமாய் இருக்கட்டுமே! - ஆம், பிறந்த குழந்தைக்குச் சூட்டப்படும் பெயர் என்கிற ஆடையைக் கடைசிவரை கழற்ற முடிவதில்லை. பெற்றோர் சூட்டிய பெயர் பிடிக்காதவர்கள் அதை மாற்றிக்கொள்கிறார்கள். சட்டரீதியாகவும் சமூகரீதி யாகவும் நிகழும் இத்தகைய பெயர் மாற்றங்கள் பற்றி அரசிதழ் அறிவிக்கை களில் வெளியாவதைப் பார்க்கிறோம்.
மாரிமுத்துவா? ஆதிகுணசேகரனா? - அண்மையில் மறைந்த நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து, “நான் திரைப் படத்துறையில் வாய்ப்புக் கேட்டு வந்தபோது மாரிமுத்து என்கிற கிராமத்துப் பெயரை மாற்றிக்கொள்ளும்படி சொன்னார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. திரைத்துறையில் இப்படித் தாமாகப் பெயரை மாற்றிக்கொள்வதும், இயக்குநர் மாற்றிவைப்பதும் இயல்பாக நடக்கும்.
அந்தப் பெயரில் புகழ்பெற்ற நடிகர்களும் உண்டு. ஆனால், மாரிமுத்து என்கிற பெயரை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டேன். அந்தப் பெயரிலேயே திரைத்துறையில் பல ஆண்டுகள் செயல்பட்டேன். ஏனென்றால் மாரிமுத்து என்கிற பெயர் என் அடையாளம். அதாவது என் மண்ணின் அடையாளம். இந்தப் பெயரையே சின்னத்திரையில் நான் ஏற்று நடித்த பாத்திரத்தின் ஆதிகுணசேகரன் என்கிற பெயர் அடித்துக்கொண்டு போய்விட்டது” என்று கூறியிருந்தார்.
‘சிவாஜி’ கணேசன், ‘ஜெமினி’ கணேசன் போன்ற பெயர் மாற்றங்கள் இப்படி நிகழ்ந்தவைதாம். காலத்தால் அழியாத திரைப்பாடல்களை எழுதிய கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
புனைபெயர் மோகம்: எழுத்தாளர்கள் பலருக்கும் புனைபெயர் மீது ஒரு மோகம் இருக்கிறது. சிறுகதை மன்னர் சொ.விருத்தாசலம் என்றால் தெரியுமா? புதுமைப்பித்தனின் இயற்பெயர்தான் அது! தன் புனைபெயர் ஓர் அமெரிக்க விளம்பரத்தன்மை கொண்டிருப்பதாகப் புதுமைப்பித்தனே கூறியிருக்கிறார்.
அற்புதமான கதைகளைத் தமிழுக்குத் தந்து சாகித்ய அகாடமி, ஞானபீடம் முதலிய விருதுகளைப் பெற்றவர் முருகேசன் என்றால் யாரென்று தெரியுமா? முருகேசன் என்கிற பெயரைக் கழற்றிவிட்டு ஜெயகாந்தன் என்கிற பெயரில் எழுதத் தொடங்கி வாசகர்களின் மனங்களில் இடம்பெற்றார். ஜெயகாந்தன் என்கிற பெயரின் கம்பீரத்தை வேறு எந்தப் பெயர் அவருக்குத் தந்துவிட முடியும்? பொன்னியின் செல்வனை கிருஷ்ணமூர்த்தி எழுதினார் என்பதைவிட கல்கி என்கிற பெயரில் ஒருவித கற்பனாலோகத்துச் சாயல் இருப்பதை மறுப்பதற்கில்லை.
கடல்புறா, யவனராணி போன்ற சரித்திரப் புதினங்களை எழுதிய சாண்டில்யனின் இயற்பெயர் பாஷ்யம். எழுபதுகளில் நான் சென்னை ரங்கநாதன் தெருவில் குடியிருந்தபோது அங்கே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியாரின் சொற்பொழிவு எங்கள் வீட்டின் கூடத்தில் நடக்கும், அங்கு வருவார். ஒரு மாமி அவரிடம், “இங்கேயும் வருகிறீர்கள். சாண்டில்யன் என்கிற பெயரில் உங்கள் சரித்திர நாவல் வர்ணனைகளையும் எழுதுகிறீர்கள் எப்படி சார்?” என்று கேட்டார். “பாஷ்யம் எழுதினால்தானே தப்பு? சாண்டில்யன் எழுதறான்.
எழுதிட்டுப் போட்டுமே” என்றார் அவர். வண்ணநிலவனின் இயற்பெயர் ராமச்சந்திரன். வானம் வசப்படும் என்கிற நாவலை எழுதியவர் வைத்தியலிங்கம் என்கிற பிரபஞ்சன். வேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை என்கிற பெயரில் கதைகள் எழுதிப் பிரபலமானார். புனைபெயருக்கும் எழுத்துக்கும் சம்பந்தமில்லை. சொந்தப் பெயர்கள் எவ்வளவு கர்னாடகமாக இருந்தாலும் அந்தப் பெயரிலேயே எழுதிப் புகழ் பெற்றவர்கள் உண்டு. ப. சிங்காரம் எழுதிய ‘புயலில் ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ போன்ற நாவல்கள் சிங்காரம் என்கிற பெயரையே சிலாகிக்க வைத்துவிட்டன.
ஜி.நாகராஜன், கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா போன்ற பெயர்களும் பிரபல்யம் அடைந்தன. சமகால எழுத்தாளர் ஜி.குப்புசாமி தன் சொந்தப் பெயரில் எழுதிவருவது குறிப்பிடத்தக்கது.
சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி என்று பெண் பெயரில் எழுதிப் புகழ்பெற்றவர்கள் உண்டு. பேரறிஞர் அண்ணா செளமியன், சமதர்மன், வழிப்போக்கன், துரை என்று இருபதுக்கு மேற்பட்ட புனைபெயர்களில் எழுதியிருக்கிறார். பாரதியார் காளிதாசன், ஷெல்லிதாசன் ஆகிய புனைபெயர்களில் பத்திரிகைக் கட்டுரைகள் எழுதினார்.
கவிராயர் கூட்டம்: கதை, கட்டுரைகள் எழுதிப் புகழ்பெற்ற வர்கள் கவிதைகளுக்கு என்று தனியாகப் புனைபெயர் வைத்துக்கொண்டிருந்தார்கள். புதுமைப்பித்தன் இப்படி எடுத்த அவதாரம்தான் ‘வேளூர் வே. கந்தசாமிக் கவிராயர்’.
வானத்து அமரன் வந்தான் காண்!
வந்தது போல் போனான் காண்
என்று புலம்பாதீர்
நான் செத்ததுக்குப் பின்னே
சிலைகள் வடித்து வையாதீர்
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டுவிடும்
என்கிற புகழ்பெற்ற கவிதையை இந்தப் புனைபெயரில்தான் எழுதினார். தொ.மு.சி. ரகுநாதன்தான் ‘திருச்சிற்றம்பலக் கவிராயர்’. எழுத்தாளர் நா.பார்த்தசாரதி ‘செங்குளம் வீரசிங்கக் கவிராயர்’ என்கிற புனைபெயரில் கவிதைகள் எழுதினார்.
கமலா வரவும்: அந்தக் காலத்தில் தியேட்டர்களில் பார்வையாளர் சம்மந்தப்பட்ட முக்கியச் செய்திகளை ‘ஸ்லைடு’ போட்டுத் தெரிவிப்பார்கள். கமலா அவசரமாக வெளியே வரவும், கணவர் காத்திருக்கிறார் என்று ஸ்லைடு ஒருமுறை போடப்பட்டது. ஒரே நேரத்தில் இருபது கமலாக்கள் வெளியே வந்தார்கள் என்பார் பாலகுமாரன்.
நான் யார்? - நான் யார் என்கிற ரமணரின் தத்துவ விசாரம் பெயரிலிருந்துதான் தொடங்குகிறது.
எழுத்தாளர் நகுலனைச் சந்திக்க ஒரு நண்பர் வந்தார். “யார் நீங்கள்?” என்று கேட்டார் நகுலன்.
“நான்தான் ராமகிருஷ்ணன்.”
“எத்தனை வருஷமாக ராமகிருஷ்ணனாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டாராம் நகுலன்.
நமது பெயர் என்பது உண்மையில் நாம்தானா என்கிற தத்துவ விசாரத்தில் தள்ளிவிட்டுவிடுகிறது இந்தக் கேள்வி.
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com