

இந்தச் சிறிய வாழ்க்கைப் பயணத்தில் மகிழ்ச்சியாக இருக்க 10 வழிகள். இவை உங்கள் மகிழ்ச்சிக்கான, அமைதிக்கான உத்தரவாதத்தைத் தருவதோடு உங்கள் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும்.
நன்றி உணர்வோடு இருத்தல்: ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது நமக்கு வாழ்க்கையில் கிடைத்த நல்ல விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ளலாம். நமக்குக் கிடைத்த ஆசீர்வாதங் களுக்காக நன்றி சொல்லி நாளைத் தொடங்கலாம். பொதுவாக ஒரு நாளை எப்படித் தொடங்குகிறோமோ, அப்படியேதான் அந்த நாள் முழுவதும் இருக்கும்.
எடுத்துக்காட்டாக எழுந்த உடனே கோபம் வந்தால், அந்த நாள் முழுவதும் கோபமாகவே நடந்துகொள்வோம். எனவே நன்றி உணர்வோடு ஒரு நாளைத் தொடங்குவது, அந்த நாள் முழுவதுமே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க உதவும். குடும்பத்தினரிடம், நட்பு வட்டாரத்திடம் நன்றி என்கிற வார்த்தையை அதிகமாக உபயோகியுங்கள். நன்றி உணர்வோடு இருங்கள். அதை வெளிப்படுத்திக்கொண்டும் இருங்கள்.
உடல் நலத்தைப் பேணுங்கள்: ‘உடல் வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே’ என்றார் திருமூலர். உயிர் வாழ்தலுக்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் உடல்நலம் மிகவும் முக்கியம். ஸ்ட்ரெச்சிங், உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றில் குறைந்தபட்சம் ஒன்றையாவது தினமும் செய்யுமாறு வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். சத்தான உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். உடல் தேவைகளை உதாசீனப்படுத்தாமல் உணவு, தூக்கம், உடல் உழைப்பு போன்றவற்றைத் தேவையான அளவு, அதே நேரம் மிகாமலும் உடலுக்குக் கொடுங்கள்.
மன நலத்தைப் பேணுங்கள்: உடலைப் போலவே மனமும் சிரத்தையோடு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். சுவாசப் பயிற்சிகளைச் செய்யலாம். உணர்வுகளுக்கும் சுவாசத்துக்கும் தொடர்பு உண்டு. எனவே, ஒரு நாளில் 10 நிமிடங்களாவது முழு விழிப்புணர்வோடு ஆழ்ந்து சுவாசியுங்கள். தியானம் செய்யலாம். கண்களை மூடி எழும் எண்ணங்களைத் தீர்ப்பிடாமல், ஆராய்ச்சி செய்யாமல், வெறுமனே கவனித்தபடி அமைதியாக உட்கார்ந்திருங்கள். சுவாசப் பயிற்சியும் தியானமும் மனநலத்துக்கான எளிய வழிகள். தேவைப்பட்டால் கவுன்சலிங், தெரபி அல்லது மன நலத்துக்கான உதவிகளை எடுத்துக்கொள்ளத் தயங்காதீர்கள்.
நிகழ்காலத்தில் வாழுங்கள்: கடந்த காலத்தில் எப்போதோ நடந்த, மனதைப் பாதித்த விஷயங்களை அசைபோட்டுக் கொண்டிருக்காதீர்கள். எதிர்காலத்தில் நடக்கப்போகும் சாத்தியக்கூறுகளைக் கற்பனை செய்து, உங்களை நீங்களே பயமுறுத்தாதீர்கள். நிகழ்காலத்தின், அன்றைய பொழுதை அந்தந்த தருணங்களை அப்படியே வாழப் பழகுங்கள்.
மன்னியுங்கள்: நமக்குத் துன்பம் இழைத்தவர்களை, துரோகம் செய்தவர்களை மனதார மன்னிக்கலாம். மன்னித்தல் என்பது கடந்த காலத்தை, கடந்த காலத்தின் நிகழ்வுகளை மன்னிப்பது அவ்வளவே. அவர்கள் நமக்குச் செய்த துன்பத்தை அனுமதிக்கிறோம் என்பதல்ல. எனவே, எதிர்காலத்தில் அப்படித் துன்பமோ துரோகமோ நடந்துவிடாமல் இருக்க நாம்தான் பொறுப்பு என்கிற உணர்வுடன் மன்னித்துவிட்டுக் கடந்து செல்லுங்கள்.
பொறுப்புணர்வோடு இருத்தல்: உங்கள் எண்ணங்களின் எஜமானர் நீங்கள்தாம். எனவே, யாருடைய வார்த்தைகளோ செயல்களோ உங்கள் மனதிற்குள் புகுந்து உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்க முடியாது. உங்கள் மகிழ்ச்சிக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் பொறுப்பு நீங்கள்தாம். எனவே, பொருளாதாரம் உள்பட எதற்கும் அடுத்தவரை குறை சொல்லாமல் பொறுப்புணர்வோடு செயல்படுங்கள்.
சமூகத்தில் சுமூகமாக வாழலாம்: மனிதன் ஒரு சமூக உயிரினம்; ஆகையால் பிற மனிதர்களுடனான உறவு, நம் மகிழ்ச்சிக்கு மிக முக்கியக் காரணியாக இருக்கிறது. நம் ஒவ்வொருவரிடமும், தன் அகந்தை (ஈகோ) இருந்து கொண்டேதான் இருக்கும். இந்தத் தன்முனைப்பே பிறரிடம் இசைவாக வாழ விடாமல் தடுக்கும். நான் எப்படிச் சிறப்பான விதத்தில், தனித்தன்மையுடன் இருக்கிறேனோ அப்படியேதான் மற்றவர்களும் சிறப்புத் தன்மையுடன் இருக்கிறார்கள் என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
நானும் வாழ்கிற இந்த மக்களுள் ஒருவர்தான்; மேலானவரோ கீழானவரோ அல்ல என்கிற எண்ணம் சமுதாயத்தில் சுமூகமாக வாழத் துணைபுரியும். நட்பு வட்டத்தைத் தரும். ஆரோக்கியமான எல்லைகளுடன் கூடிய, நட்பு வட்டாரம் மகிழ்ச்சியாக இருக்க மிகவும் உதவும்.
நகைச்சுவை உணர்வோடு இருங்கள்: தாராளமாகச் சிரியுங்கள். எதுவும் குறைந்து போகாது. சிரிக்கும்போது மன அழுத்தம் குறையும். வாய்விட்டுச் சிரிப்பது இதயத்தை, நுரையீரலை நன்றாகச் செயல்பட வைக்கும். தசைநார்களைத் தளர்த்தி, மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க உதவும். நகைச்சுவை உணர்வோடு பார்த்தால், கடந்த கால துன்பங்கள்கூடக் கரைந்து போகும். சவால்கள் சிறிதாக, மிக எளிதானதாகத் தெரியும்.
அவரவர் வாழ்க்கையை வாழலாம்: அடுத்தவர் வாழ்க்கையில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை முற்றிலும் தவிர்க்கலாம். ஏன் இதைச் செய்யவில்லை அல்லது ஏன் இப்படிச் செய்தாய் என்று தோண்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்யுங்கள். அது போலவே மற்றவர்களும் அவர்களுக்குப் பிடித்ததை அவர்கள் செய்கிறார்கள் என்கிற எண்ணத்தோடு, உங்களுக்கான வெளியை எடுத்துக்கொண்டு, அவர்களுக்கான வெளியைக் கொடுத்து வாழுங்கள். இது உறவுகளில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
கற்றுக்கொண்டே இருங்கள்: புதிய மொழி, கலைகள், விருப்ப வேலைகள் எனப் புதிதாகக் கற்றுக்கொண்டே இருங்கள். அது உங்கள் அறிவாற்றலைப் பெருக்குவதோடு உங்களுக்குத் தன்னம்பிக்கையையும் பக்குவத்தையும் தரும். உங்கள் பன்முகத் தன்மையை அதிகரிக்கும். சவால்களை எளிதாகச் சமாளிக்கும் திறமையைத் தரும். மகிழ்ச்சியாக இருப்பது எளிதாக வாய்க்கும்.
- கட்டுரையாளர், மனநல ஆலோசகர், ‘நான் எனும் பேரதிசயம்’ நூலின் ஆசிரியர்.