

இந்தியாவில் சுமார் 16 பாராகிளைடிங் தளங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பிர் பில்லிங். இது ஆசியாவிலேயே அதிக உயரமானது. பிர் கிராமத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கிறது பில்லிங். எட்டாயிரம் அடி உயரத்தில் இருக்கும் பில்லிங்கில் இருந்து ஐந்தாயிரம் அடி உயரத்தில் இருக்கும் பிர் கிராமத்துக்கு பாராகிளைடர் மூலம் பறந்து தரை இறங்கலாம். சென்னையில் இது போன்ற சாகச விளையாட்டுகளுக்காகவே சில சுற்றுலா நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. நாங்கள் ‘டென்ட் அண்ட் ட்ரெக்’ நிறுவனம் மூலம் டெல்லி வரை விமானத்திலும் அங்கிருந்து இமாச்சலுக்குச் சாலை வழியாகவும் பயணித்தோம்.
பாராகிளைடரில் குடை போல விரிந்திருக்கும் பகுதி விங் அல்லது கேனபி. கிழியாத நைலான் மூலம் இரண்டு அடுக்குகளாகத் தயாரிக்கப்பட்டது. இவற்றில் உள்ள அறைகள் காற்றால் நிரம்பி பறக்க உதவுகின்றன. வேகத்தை மட்டுப்படுத்தவும் நிறுத்தவும் கருவிகள், பைலட் அமர இருக்கை எல்லாம் இருக்கும். இன்னோர் இருக்கையில் நம்மை அமர வைத்து, பைலட்டுடன் இணைத்துவிடுவார்கள். நமக்கு பாராகிளைடிங் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை. பெண் பைலட்களும் இருக்கிறார்கள்.
முதலில் பெரிய முதுகுப் பையில் சுருட்டி மடித்து வைத்திருக்கும் குடை போன்ற பகுதியைத் தரையில் வைத்து விரிப்பார் பைலட். ஆர்வம் இருந்தால் நாமே டேக் ஆஃப் செய்ய பயிற்சியும் கொடுப்பார்கள். பாதுகாப்புக் கருவிகளை மாட்டிவிட்டவுடன் இரண்டு பேர் கயிறு மூலம் நம்மைப் பிடித்திருக்க அவர்களை எதிர்த்து ஓடவேண்டும். திருப்தி ஏற்பட்டால் தரையில் விரித்து வைத்திருக்கும் பாரா கிளைடரை பைலட் முதலில் இணைத்துக்கொண்டு, பின்னர் நம்மை அவருடன் இணைத்துக் கொண்டு ஓடுவார்.
திகிலும் பரவசமும் கலந்த மனநிலையில் இருந்தேன். மலை உச்சியில் மற்றவர்கள் நின்றுவிட பைலட் மட்டும் தாண்டினார். ஓடிவரும்போதே குடை போன்ற பகுதியில் பாதி அறைகளில் காற்று நிரம்பிவிட்டது. மீதி அறைகளிலும் இப்போது காற்று நிறைந்திருந்தது. எனவே உச்சியில் இருந்து கீழே தொப்பென்று விழாமல் மிக மிக மெதுவாக இறங்கினோம். உடலை அசைப்பதன் மூலம் பைலட் திசையைத் திருப்பினார். தரையிறங்கும் வேகத்தைக் கூட்டவும் குறைக்கவும் அவரால் முடியும்.
பாராகிளைடர் விரிந்து நாம் பறக்க ஆரம்பித்ததும் முகத்தில் மோதும் குளிர்க் காற்றால் உடல் சிலிர்த்தது. காலுக்கடியில் பூமி. மலை, ஆறு, சிறிய வீடுகள்கூடத் தெரிந்தன. தலைக்கு மேலே அல்ல இணையான மட்டத்தில் மேகங்களும் சூரியனும். அடடா! அந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது, உணரவே முடியும். வாழ்நாள் அனுபவமாக இருக்கும். கைகளை விரித்தால் சிறகின்றிப் பறப்பது போன்று இருந்தது. பைலட் இடமும் வலமுமாகத் திருப்பும்போது இதயம் கொஞ்சம் வேகமாகத் துடித்தது.
பாராகிளைடரை அப்படி இப்படி அசைத்து, தலைகீழாகக் கவிழ்த்து சாகசங்களை நிகழ்த்துவார்கள். உடம்பு தாங்காது என்று நினைத்தால் பைலட்டிடம் சொல்லிவிடுவது நல்லது. பேச்சுக் கொடுத்தால் பைலட் கீழே தெரியும் ஆறு, கிராமம் பற்றி விளக்குகிறார். அமைதியாகவும் ரசிக்கலாம். சுமார் இருபது நிமிடங்கள் வானத்தில் பறந்து தரையிறங்கிவிட்டோம்.
விமானத்தில் பறக்கும் அனுபவம் இதற்குப் பக்கத்தில்கூட வர முடியாது. என்னதான் ஒரு நபருடன் நாம் இணைக்கப்பட்டிருந்தாலும் சிறிது இடைவெளிவிட்டு வசதியான இருக்கையில்தான் நாம் அமர்ந்திருப்போம். எனவே நாம் பாராகிளைடருடன் பிணைக்கப் பட்டிருக்கிறோம் என்கிற உணர்வுகூட இருக்காது. கைகளையும் கால்களையும் காற்றில் வீசி வானத்தில் மிதந்துகொண்டே சூரிய அஸ்தமனத்தைக் கண்டு களிக்கலாம். அக்டோபரிலிருந்து ஜூன் வரைதான் பாராகிளைடிங்குக்கு ஏற்ற காலம் என்பதால் திட்டமிட்டுப் புறப்படுவது நல்லது.