திண்ணைப் பேச்சு - 17: அப்பா ஓட்டிய தபால் ரயில்!

திண்ணைப் பேச்சு - 17: அப்பா ஓட்டிய தபால் ரயில்!
Updated on
2 min read

ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் மிகவும் உடல்நலம் குன்றி, படுத்த படுக்கையாக இருந்தபோது பக்கத்திலிருந்த அவரது புகழ்பெற்ற சீடர் பாஸ்வெல்லிடம், “பாஸ்வெல், நான் சாவதற்குக் கவலைப்படவில்லை. ஆனால், கல்லறையில் நமக்குக் கடிதங்களே வராது இல்லையா? அதை நினைத்துதான் கவலையாக இருக்கிறது!” என்று சொன்னாராம்.

வாழ்வு தரும் இனிமைகளில் கடிதமும் ஒன்று.

வாசலில் “சார் போஸ்ட்” என்கிற குரல் கேட்ட மாத்திரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்வரை தபால்காரரை நோக்கி ஓடும் உற்சாகம் இன்னும் வற்றிவிடவில்லை!

கடிதங்கள் வருவது குறைந்துவிட்டாலும் அவை தரும் மகிழ்ச்சிக்குக் குறைவேது?

அப்பா கடிதம் எழுத அஞ்சல் அட்டை களைத்தான் உபயோகிப்பார். வீட்டுக்கு வருகிற கடிதங்களில் தபால் கார்டுகளே அதிகம் இருக்கும்.

அப்பா அந்தக் காலத்தில் எல்லாரும் செய்ததுபோலக் கடிதங்களைக் குடைக் கம்பியில் குத்திவைக்க மாட்டார். அவற்றுக்கு வலிக்கும் என்று நினைத்துக்கொள்வாரோ என்னவோ. அப்படியே பத்திரமாக அடுக்கி நூலால் கட்டி வைத்திருப்பார்.

கார்டுகளை வைத்து அவர் எங்களுக்குத் தபால் ரயில் ஓட்டி வேடிக்கை காட்டுவார். தபால் கார்டுகளை நெடுக்குவாக்கில் மடித்து ரயில்பெட்டிகள் போலத் திண்ணையில் வரிசையாக நிற்க வைப்பார். ரயில்வண்டி மாதிரி வளைந்து வளைந்து நிற்கும் நீளமான கார்டுகளின் வரிசை. பிறகு கடைசி கார்டைத் தள்ளிவிடுவார்.

தொப் தொப் என்று ஒவ்வொரு கார்டும் முன்னால் நிற்கும் கார்டுமீது சாய்ந்து விழுந்தபடி ரயில் போவதுபோல இருக்கும்.

அப்பா வீட்டில் இருந்தால்தான் இந்த விளையாட்டை ஆட முடியும். எங்களுக்குத் தெரியாமல் கார்டுகளை ஒளித்து வைத்துவிடுவார்.

யாருக்குக் கடிதம் எழுதினாலும் அப்பா தபால் கார்டில்தான் எழுதுவார். பாட்டிக்கு அடிக்கடி எழுதுவார். அதாவது எனது அம்மாவின் அம்மாவுக்கு.

அம்மாவின் உடல்நிலை. நான் மூன்றாம் வகுப்பு பாஸ் ஆனது. நல்ல புளியாகக் கிடைத்தால் வாங்கிவரவும். அரிவாள்மனை இங்கே கிடைக்கவில்லை. குழந்தைக்குப் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மொட்டை போட வேண்டும்.

இப்படிப் பாட்டிக்குச் சொல்ல அப்பா விடம் அநேக விஷயங்கள் இருந்தன. பாட்டி வீட்டு முகவரியில் ஒவ்வொரு முறையும் ‘தண்ணீர்த் தொட்டி சமீபம்’ என்று மறக்காமல் எழுதுவார். இப்படி எல்லா முகவரியிலும் ஒரு கூடுதல் அலங்கரிப்புச் செய்யாமல் இருக்க மாட்டார்.

பாட்டி ரேவதி அக்காவிடம் சொல்லி, ரேவதி அக்காமூலம் கடிதம் கார்டில் வந்துசேரும். ரேவதி அக்கா கையெழுத்து தபால்ரயில்போல் ஓடும். ஓடும் ரயிலின் ஜன்னலில் ரேவதி அக்கா முகம் தெரியும்.

எல்லார் வீட்டிலும் தபால் ரயில் ஓடுகிறதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு கார்டிலும் எவ்வளவோ கவலைகள், கஷ்டங்கள், சந்தோஷங்கள் சத்தம் காட்டாமல் ‘தடக் தடக்’ என்று விழுந்துகொண்டே போகும் தபால் ரயில். எந்தப் பிரச்சினை ஆனாலும் அதைத் தீர்த்துவைக்க அப்பாவுக்கு ஒரு தபால் கார்டு போதும்.

ஒரு தடவை அப்பாவிடம் கோபித்துக் கொண்டு அம்மா ‘தண்ணீர்த் தொட்டி சமீபம்’ உள்ள தன் அம்மா வீட்டுக்குப் போய்விட்டார்.

அப்பா ஒரு கார்டு போட்டார். அம்மா உடனே வந்துவிட்டார். வந்தும் வராததுமாக அம்மா எங்கள் வீட்டுக்குப் பின்புறம் இருந்த மாட்டுத் தொழுவத்துக்குச் சென்றார்.

“எங்கே போகிறாய்?” என்று கேட்டார் அப்பா.

“வீட்டுக்காரங்க மாடு கன்று போட்டதா எழுதியிருந்தீங்கள்ல. அதைப் பார்க்கத்தான்... பின்னே உங்களையா பார்க்க வந்தேன்?”

பசு கன்றுக்குட்டியின் உடம்பை நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அம்மா அதன் கழுத்தை வருடிவிட்டார். இரண்டு தாய்மார்கள் உறவாடுவதுபோல் இருந்தது.

ஒரு தபால் கார்டுதான் இதை எல்லாம் சாதித்தது.

பி.கு.

கார்டின் பின்குறிப்பாக பி.கு. என்று போட்டு ஒரு வரி சேர்ப்பார் பாருங்கள். அதுதான் கார்டின் ஜீவன்.

- சுசீலா (எங்கள் வீட்டுக் கோழி) குஞ்சு பொரித்திருக்கிறது.

- வாய்க்காலில் தண்ணீர் வந்துவிட்டது.

- வீட்டுக்குப் பின்னால் வயலில் கீதாரிகள் கிடை போட்டிருக்கிறார்கள்.

அப்பா ஒரே ஒரு கார்டை மட்டும் தனியே பத்திரப்படுத்தி வைத்திருந்தார். பழுப்பேறிய பழைய கார்டு. அதன் வாசகங்கள் எனக்கு மனப்பாடம்.

அன்புள்ள ரங்கராஜன், நேற்று தஞ்சாவூர் திலகர் திடலில் மகாத்மா காந்திக்கு வரவேற்பு கொடுத்தோம். அன்று மெளனவிரதம். ஆனால், எல்லாரையும் பார்த்துப் புன்னகைத்தார். எங்களுக்குப் பெரிய பிரசங்கம் கேட்ட திருப்தி உண்டாயிற்று. எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிடு. வார்தா போய் காந்தி ஆசிரமத்தில் சேர்ந்து விடுவோம்.

உன் நண்பன்

சிவப்பிரகாசம்

பிற்பாடு பல ஆண்டுகள் கழித்துத் தபால் ரயிலை மையமாக வைத்து நான் எழுதிய கதைக்கு ஒரு பிரபல வார இதழ் முதல் பரிசு வழங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆசிரியர் குழுவினர் என்னை அழைத்துத் தங்களுக்கு முன்னால் தபால் ரயிலை ஓட்டிக் காண்பிக்குமாறு வேண்டினர்.

புது கார்டுகள் ஒரு கட்டு வாங்கிக்கொண்டு போனேன். ஆசிரியர் குழுவினர் முன்னால் நீண்ட மேசையில் தபால் ரயில் ஓடியது. எல்லார் முகத்திலும் புன்னகை.

முதல் பரிசு பத்தாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டுவந்து அப்பா படத்தின் முன் வைத்து வணங்கினேன்.

ஒரு கணம் கண்களை மூடினேன். எங்கள் கிராமத்து வீட்டின் திண்ணையில் தபால் ரயில் விழுந்து விழுந்து ஓடிக்கொண்டிருந்தது!

(பேச்சு தொடரும்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in