

மயக்க இயல் மருத்துவர் மாணிக்கவாசகம் தனது ‘தூங்காமல் தூங்கி’ என்கிற அற்புதமான புத்தகத்தில், தான் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நோயாளியைக் காப்பாற்ற முடியாமல் போனபோது, மருத்துவப் பணியே வேண்டாம் என்று வெறுத்து நின்ற கணத்தைக் கனமாக எழுதியிருப்பார். தலைமை மருத்துவர் அவரைச் சமாதானப்படுத்தி, தொடரச் செய்த மருத்துவப் பணியில் பின்னர் வாய்த்த உன்னத தருணங்கள் பலவற்றை நெகிழ்ச்சியோடு சொல்லியிருப்பார்.
மருத்துவமனைகளுக்கு எத்தனை முறை போயிருப்போம் என்கிற எண்ணிக்கை தொழிற்சங்க நிர்வாகிகளிடம் இருக்காது. பாதிக்கப்பட்டது சங்க உறுப்பினர்களாக இருக்கலாம், அவர்தம் நெருங்கிய சொந்தபந்தங்களாக இருக்கலாம். சங்கத்தின் சார்பில் சென்று பார்த்து ஆறுதல் சொல்வதும், தேவையான உதவிகளை உறுதி செய்வதும் தொழிற்சங்க இயக்கத்தின் அளப்பரிய சமூகப் பங்களிப்பு.
தொழிற்சங்க வாழ்க்கையில் தோழர்களைக் காப்பாற்ற முடிந்த மகிழ்ச்சியான கணங்களுக்குக் குறைவில்லாமல், அதிர்ச்சியில் உறைந்து நின்ற தருணங்களும் இருக்கின்றன. எதிர்பாராமல் உதவ முடிந்த பரவசம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது.
ஒருநாள் வங்கியின் பாதுகாப்பு அதிகாரி மேஜர் வெங்கட் நாராயணன், “ராமகிருஷ்ணன் என்று ஐடி கார்டில் இருக்கிறது. வெளியூர் ஊழியர் போல... அடிபட்டிருக்கு... கீழே வாங்க” என்று என்னை அழைக்கவும், சங்கத்தின் மற்றோர் உறுப்பினர் அசோகனையும் அழைத்துக்கொண்டு ஓடினேன்.
எங்களுக்கு நன்கு அறிமுகமான அந்தத் தோழர் சாலை விபத்துக்குள்ளாகி துடித்துக்கொண்டிருந்தார். காஞ்சிபுரம் அருகே ஒரு சிற்றூர் கிளையில் இருந்து வந்து, தலைமை அலுவலகத்தில் வேலை முடித்துக்கொண்டு, பேருந்து பிடிக்கப் போகும்போது விபத்தில் சிக்கிக்கொண்டார். ஆட்டோ ஒன்றை நிறுத்தி, தோழர்கள் உதவியோடு ராமகிருஷ்ணனை ஏற்றி, அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்தேன்.
வழிநெடுக அரற்றிக்கொண்டு வந்தார் ராமகிருஷ்ணன். ஆட்டோ ஓட்டுநர், “பேசாம வாப்பா, ஆஸ்பத்திரி போயிருவோம். கவலைப்படாதே” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
மருத்துவமனைக்குள் சென்றதும், அவசரப் பிரிவில் இருந்த மருத்துவர், “சொந்தக்காரங்களுக்குச் சொல்லிட்டீங்களா?” என்றபோது பகீரென்றது.
“இப்போதுதான் விபத்து நடந்தது, அவர் பேசிக்கொண்டு தான் வந்தார்” என்று சொன்ன என்னை முறைத்த மருத்துவர், “நீங்க டாக்டரா, டயர் ஏறி இறங்கிருக்கு... உள்ளே எந்த உறுப்புக்கும் கேரண்டி சொல்ல முடியாது. சொல்லிருங்க குடும்பத்துக்கு” என்று சொல்லிவிட்டு, அடுத்த நோயாளியைப் பார்க்கப் போனார்.
அப்போதும் தைரியமாகத்தான் அலுவலகம் திரும்பினோம். அன்று மாலைக்குள் அசோகன் முயற்சியில் குடும்பத்தார் மருத்துவமனை சென்றுவிட்டனர். அன்றிரவு கடந்தது. மறு நாளும் கடந்தது. நம்பிக்கை அதிகரித்தது. மூன்றாம் நாள் விடியற்காலை நான்கு மணிக்கு “அப்பா போயிட்டாருங்க’' என்று அவருடைய மகன் தொலைபேசியில் அழைத்துக் கதறினார்.
மதுரை தோழர் முருகேசன் பல ஆண்டுகளுக்கு முன் சென்னை தனியார் மருத்துவமனையில் இதய நோய் காரணமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அறுவைசிகிச்சை உடனே செய்தாக வேண்டும். தோழருடைய இணையர் ஜெயலட்சுமி அச்சத்தில் இருந்தார்.
ஜெயலட்சுமியுடன் மருத்துவரைச் சந்தித்தேன். “இப்போது எப்படி இருக்கிறார், மதுரைக்கு அழைத்துச் செல்லலாமா?" என்று கேட்டேன், இன்னொரு மருத்துவ ஆலோசனை பெறப் போகிறோம் என்று நேரே சொல்ல இயலாது என்பதால். மருத்துவர் கோபமாக, “நீங்கள் யார், அவருக்கென்ன சொந்தம், நீங்க எப்படி உள்ளே வந்தீங்க?” என்று என்னை நோக்கி இரைந்தார்.
“இவன் என் தம்பி. மாமாவுக்கு என்னாச்சுன்னு பார்க்க வந்திருக்கான், சிகிச்சை பற்றிச் சொல்லுங்க” என்றார் ஜெயலட்சுமி. ஒரு கணம் உறைந்துவிட்டேன்.
உடனே மருத்துவர் மென்மையாக, “தம்பி, இப்போதைக்கு அவரை வேறெங்கும் அழைத்துப் போக இயலாது. இங்கேயே அறுவைசிகிச்சை செய்துதான் காப்பாத்தணும். அப்புறம் உங்க விருப்பம்” என்றார்.
முருகேசன் அறுவைசிகிச்சை முடிந்து நலம் பெற்றார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிகிச்சை தேவைப்பட அதிலும் குணம் பெற்றார். ஜெயலட்சுமிதான் சிறுநீரகங்கள் செயலிழக்க, கரோனா காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முருகேசனை அழைத்தேன். “இன்னும் சில நிமிடங்கள்தாம்...” என்று சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த அக்காவின் இறுதி நிகழ்வுக்குக்கூட இந்தத் தம்பியை ஊரடங்கு அனுமதிக்கவில்லை.