திண்ணைப் பேச்சு 16: பறவைகளிடம் விசா கேட்க முடியாது!

ஓவியம்: வெ.சந்திரமோகன்
ஓவியம்: வெ.சந்திரமோகன்
Updated on
3 min read

பல ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் கவிஞர் இன்குலாபை வண்டலூரில் இருந்த வங்கி ஒன்றின் காத்திருப்போர் வரிசையில் கண்டு வணங்கினேன்.

புன்னகைத்தார். வெளியே வந்ததும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.

என் பேச்சில் அடிக்கடி, ‘சார்… சார்...’ என்று சொல்வதைக் கேட்டு என்னைத் தோழமையுடன் தொட்டு, ‘‘தோழர் அல்லது இன்குலாப் என்றே அழைக்கலாமே!’’ என்றார்.

“ஐயா உங்கள் வயதுக்கு முன்னால்…”

“தோழமைக்கு வயது வேறுபாடு கிடையாது. வாருங்கள் தோழர். தேநீர் அருந்தலாம்” என்று சாலையோரத் தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் வாங்கிக் கொடுத்தார்.

அவர் வீடு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அருகில் இருந்தது. அவரைச் சந்திக்க அடிக்கடி செல்வேன். ஒருமுறை பேச்சை நிறுத்தி, “காதில் விழுகிறதா?” என்று கேட்டார்.

“என்ன?”

“ஒரு சிங்கத்தின் உறுமல்” என்று சொல்லிச் சிரித்தார்.

“உறுமல் அடிவயிற்றிலிருந்து வருகிறது பாருங்கள்!”

“ஆமாம்!”

“கவிதையும் அப்படித்தான் வெளிப் பட வேண்டும் அடிவயிற்று உறுமலாக” என்று குறுந்தாடியை நீவினார்.

“பாரதி கவிதைகளில் இந்த உறுமல் தொனியைக் கேட்கலாம். பாரதிதாசனிடம் கூடுதலாகக் கேட்கலாம். ஓம் ஓமென்று சொல்லி உறுமிற்று வானம் என்பான் பாரதி. பூட்டிய இரும்புக் கதவு திறந்தது, சிறுத்தையே வெளியே வா என்று உறுமுவார் பாரதிதாசன்.”

“இங்கே வந்த பிறகு என் வாழ்க்கை வட்டம் சுருங்கிவிட்டது. திருவல்லிக்கேணியில் இரவெல்லாம் எழுதுவது. பின்னிரவில் கடற்காற்றை அனுபவித்தபடி காலாற நடப்பது. தேநீர் அருந்தி புகைத்தபடியே மீண்டும் வந்து எழுதுவது… அது ஒரு காலம்” என்பார் ஏக்கத்துடன்.

ரயில் நிலையம் பக்கம் இருக்கிற எங்கள் வீட்டுக்கும் வருவார். திண்ணையில் உட்கார்ந்து பேசுவது அவருக்குப் பிடிக்கும். என்னைவிடவும் அந்தத் திண்ணைக்குத் தெரியும் அவர் உரையாடல்கள்.

சங்கப் பாடல்களிலிருந்து ஒரு வரி, காலையில் எழுதிய கவிதையிலிருந்து சில வரிகள். பாப்லோ நெரூடாவின் படைப்பிலிருந்து மேற்கோள்கள். தாமே மொழிபெயர்த்த ரூமியின் கவிதைகள். அவரது பயணங்கள் பரவசங்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதற் கிணங்க அவரைச் சென்று சந்தித்த தருணங்கள்...

கவிஞர் இன்குலாப் ஒரு கலகக்காரர். அவர் கவிதைகள் எழுதினார். போராட்டங்களைத் தேடிப்போனார். அரசி யல், இலக்கிய, ஆன்மிகப் போலிகளைப் பகடி செய்தார்.

தெலங்கானாவின் தெருப்பாடக ராகப் புகழ்பெற்ற கத்தாரைக் கொண்டாடுவார். மேடையில் முழங்கும்போது தெரியும் அளவுக்கு முரடானவர் அல்ல அவர். பேரனுடன் கொஞ்சும்போது தெரியும் அளவுக்கு எளிமையானவரும் அல்ல.

சிற்றலைகள் சிலுசிலுக்கத் தனது பெரும் ஆழத்தை மறைத்தபடி விரிந்து கிடக்கும் பெரும் நீர்ப்பரப்பை ஒத்த மனிதர் அவர்.

உலக மக்களுக்கான தேசிய கீதம்: இந்தியாவுக்கான தேசிய கீதத்தை ரவீந்திரநாத் தாகூர் எழுதினார். உலக மக்கள் அனைவருக்குமான தேசிய கீதத்தை இசைத்தவர் மக்கள் கவிஞர் இன்குலாப் மட்டுமே!

‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ என்கிற அவர் கவிதையை எந்த மொழியில் வேண்டுமானாலும் மொழிபெயர்த்துப் பாருங்கள். அந்த மொழி பேசும் மக்களுக்கு ஏற்ற கீதமாக இருப்பதை உணரலாம்.

வள்ளலார் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார். ஆனால், புல்லுக்கும் பெயர் சூட்டி அந்த ஓரறிவு உயிரோடும் தோழமைகொள்ளும் பொதுவுடைமை மனத்தின் உச்சம் இந்த வரி.

அடுத்த வரி ‘பறவைகளோடும் எல்லை கடப்பேன்!’ மொழியாலும் இனத்தாலும் நிறத்தாலும் வேறுபாட்டு எல்லைகளை வகுத்துக்கொண்டு, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குப் பயணிக்க கடவுச்சீட்டு வேண்டு மென்று கேட்கின்ற வேடிக்கை மனிதர்களை நோக்கிப் பாடுகிறார். வேடந்தாங்கலுக்கு வருகிற பறவை களிடம் யாரும் விசா கேட்க முடியாது.

‘பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும் எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்.’ என்ன ஒரு ஞானச் செருக்கு.

கவிதை தொடர்கிறது. மானுடம் மலர்கிறது.

நீளும் கைகளில்

தோழமை தொடரும்!

நீளாத கையிலும்

நெஞ்சம் படரும்!

எனக்கு வேண்டும்

உலகம் ஒரு கடலாய்

உலகுக்கு வேண்டும்

நானும் ஒரு துளியாய்!

இந்த வரிகளைப் படித்துவிட்டு “ஐயோ, இந்த வரி ஒரு சூஃபி ஞானம்போல் இருக்கிறது! நீங்களே சூஃபி ஞானிபோல் ஆகிவிட்டீர்கள்” என்றேன்.

‘‘கவிராயரே, என்னைத் தத்துவச் சிமிழிக்குள் அடைத்துவிடாதீர்கள். என்னைச் சாமானிய மனிதனாகவே பாருங்கள்!’’

‘மனுசங்கடா! நாங்க மனுசங்கடா! ஒன்னைப்போல அவனைப்போல எட்டுசாணு ஒசரமுள்ள மனுசங்கடா! டேய் மனுசங்கடா!’ என்று அவர் பாடிய மற்றொரு பாடல் நினைவுக்கு வந்தது.

‘எந்த மூலையில் விசும்பல் என்றாலும்

என் செவிகளிலே எதிரொலி கேட்கும்!

கூண்டில் மோதும் சிறகுகளோடு

எனது சிறகிலும் குருதியின்கோடு!’

என்ன ஒரு மனிதநேயம்!

‘சுவரில்லாத சமவெளிதோறும்

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்

மனிதநேயம் என்றொரு

பாடலை இசைப்பேன்!’

இன்குலாப் நிலவில் கால்வைத்தி ருந்தால் இந்த வரிகளைத்தான் பாடியிருப்பார்!

பாரதியை நோக்கி அவர் பாடுவதாக அமைந்த வரிகள் இலக்கிய உலகை அதிரவைத்தன.

பாரதீ

அரசாங்கம் கவிஞர்களைக் கண்ணியப்படுத்தும்

வாழ்ந்து பிணமானால்

உன் போன்றோரையும்

பிணமாக வாழ்ந்தால்

என் போன்றோரையும்!

தனக்கு விருது கிடைக்காத விரக்கதியில் பிறந்த கவிதை அல்ல இது! பிணமாக வாழ விரும்பாத பெருங்கவிஞனின் பிரகடனம்.

ஆகவேதான் அவர் மறைந்த பிறகு வழங்கப்பட்ட ‘சாகித்ய அகாடமி’ விருதினைப் பெற மறுத்துவிட்டனர் இன்குலாபின் குடும்பத்தினர்.

வாகையின் உச்சி அரும்புகள் சிவக்கும் காலம்

தோழர் இன்குலாபின் தன்னம்பிக்கை தன்னிகரற்றது. அவர் கவிதையொன்று இப்படி முடியும்.

“வருகிறது! வாகையின் உச்சி அரும்புகள் சிவக்கும் காலம்!”

வெற்றிவாகை சூடும் மன்னர்களின் ஆதிக்க மனோபாவத்துக்கு அடையாளமாகச் சொல்லப்படும் வாகை சூடுதல் - வரும் காலத்தில் மன்னர்குலம் மறைந்து மானுடம் தழைக்கும்போது அதே வாகை மலரின் வழித்தோன்றல்களான உச்சி அரும்புகள் போன்ற இளைய சமுதாயம் பொதுவுடைமைப் பதாகையை உயர்த்தும் என்றே இதற்குப் பொருள் கொள்ளலாம்.

இன்குலாப் உடல் நலிவுற்றிருந்த நாள் ஒன்றில் அவர் இல்லம் சென்றேன். நீரிழவு நோய் காரணமாக ஒரு கால் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தது.

“வாருங்கள் தோழர்” என்றார் புன்னகையோடு.

நொய்ந்த உடம்பு. செயற்கைக்கால்.

“கவிராயர், இன்றொரு சாதனை நிகழ்த்தினேன். வாசலில் உள்ள இரும்பு கேட்வரை தத்தித்தத்தி நடந்தே சென்றுவிட்டேன்.”

தமிழகம் முழுவதும், ஏன் தமிழகம் கடந்தும் நடந்து சென்றவர், போராடியவர் இப்படிச் சொல்ல நேர்ந்ததே என்று சோர்ந்துபோனேன்.

வாடிய என் முகம் கண்டு சிரித்தார் இன்குலாப்.

“பயணம் என்பது எவ்வளவு தொலைவு செல்கிறோம் என்பதைக் குறிப்பதல்ல. நாம் இன்னும் இயங்கு கிறோம் என்பதை இவ்வுலகிற்கு அறிவிப்பது!”

(பேச்சு தொடரும்)

- thanjavurkavirayar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in