ஆஹா, என்ன ருசி! - ரொட்டியா, எலுமிச்சை சாதமா?

ஆஹா, என்ன ருசி! - ரொட்டியா, எலுமிச்சை சாதமா?

Published on

மனித வாழ்க்கையில் ருசி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வீட்டில் ஒரே மாதிரியான உணவு வகைகளைச் சாப்பிட்டு அலுத்துப் போனாலும் இரண்டு நாள்களை வெளிமாநிலங்களிலோ வெளி நாடுகளிலோ கழித்துவிட்டால் போதும், நம் உணவின் அருமை புரிந்துவிடும். அதனால்தான் சிங்கப்பூர் சென்றாலும் ‘லிட்டில் இந்தியா’ வைத் தேடி ஓடுகிறார்கள்.

இப்போதெல்லாம் சிம்லாவில் இட்லி சாம்பாரும் மணாலியில் இரவில் தயிர் சாதமும்கூடக் கிடைக்கின்றன. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் திருவிழாவுக்காக 20 குழந்தைகளுடன் டெல்லிக்குச் சென்று, ஐந்து நாள்கள் தங்கியிருந்தபோது இவையெல்லாம் எளிதாகக் கிடைக்கவில்லை.

குழந்தைகள் எல்லாம் மொழி தெரியாத, முன்பின் அறிமுகமில்லாத டெல்லியில் வசிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். நாங்கள் விழா நடக்கும் இடத்திலேயே தங்கியிருந்தோம். ரொட்டி, சப்ஜி, சாலட், ஸ்வீட் என்று சுவையான உணவுதான் வழங்கப்பட்டது. முதல் நாள் நண்பர்கள் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டார்கள். இரண்டாவது நாள் ‘ரொட்டியா’ என்று முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். மூன்றாவது நாள் எரிச்சலடைந்துவிட்டனர்.

எங்களுடன் வந்தவர்களில் சிலர், நான்காவது நாள் எலுமிச்சை சாதத்தையாவது சாப்பிட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். மறுநாள் ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணி. அதனால், உணவுப் பொட்டலங்களைக் கட்டிக் கையில் கொடுப்பதற்காக இரவே சமையலறையில் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது.

எலுமிச்சை பழங்களைச் சமையல் கலைஞரிடம் கொடுத்து, எலுமிச்சை சாதத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் சொன்னார்கள். அந்தச் சமையல் கலைஞரும், “கவலையே வேண்டாம், சிறப்பாகச் செய்துவிடுகிறேன்” என்று கூறி, நண்பர்களை அனுப்பிவைத்தார்.

அசந்து தூங்கிக்கொண்டிருந்தவர்களை எல்லாம் எழுப்பி, “நாளை அருமையான எலுமிச்சை சாதம் சாப்பிடப் போகிறீர்கள். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம்” என்று பெருமிதப்பட்டார்கள்.

மறுநாள் காலை சாப்பிட்டுவிட்டு, ஆளுக்கு ஓர் உணவுப் பொட்டலத்துடன் பேரணிக்குச் சென்றோம். ‘அறிவியல் மக்களுக்கே, அறிவியல் நாட்டுக்கே, அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளுக்கே’ என்று கோஷங்களை முழங்கிக்கொண்டு, நீண்ட தூரம் நடந்து ஜந்தர் மந்தரை அடைந்தோம். நல்ல வெயிலில் நடந்துவந்ததில் மிகவும் களைப்பாக இருந்தது. எல்லாருக்கும் பசி.

“எலுமிச்சை சாதம் என்பதால் எனக்குப் பதினோரு மணிக்கே பசித்துவிட்டது” என்றார் ஒருவர்.

“நான் இதற்காகவே காலையில் ரொட்டியைத் தொடவேயில்லை” என்றார் இன்னொருவர்.

அனைவரும் ஆவலுடன் பொட்டலங்களைப் பிரித்தோம். வெள்ளைச் சோறும் எலுமிச்சைத் துண்டுகள் இரண்டும் என் பொட்டலத்தில் இருந்தன. சில பொட்டலங்களில் ஒரு துண்டு, சில பொட்டலங்களில் மூன்று துண்டுகள் என்று பொட்டலத்துக்குப் பொட்டலம் வித்தியாசத்தைக் காட்டியிருந்தனர்! பசி என்பதால் பழத்தைப் பிழிந்துவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தோம்.

அப்போது ஒரு தோழி, “உங்களுக்காவது எலுமிச்சையை வெட்டிப் போட்டிருக்காங்க. எனக்கு முழு எலுமிச்சம்பழத்தை வச்சிருக்காங்க” என்று வருத்தத்துடன் சொல்ல, நல்ல சாப்பாட்டைக் கெடுத்தவர்கள் மீது கடுங்கோபத்துடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் சிரித்துவிட்டனர்.

எங்கே செல்கிறோமோ அந்த மக்களின் உணவைச் சாப்பிடுவதுதான் சரியானது. அரைகுறை இந்தியில் எலுமிச்சை சாதத்துக்குப் பக்குவம் எப்படிச் சொன்னார்களோ, அந்தச் சமையல் கலைஞர் எப்படிப் புரிந்துகொண்டாரோ தெரியவில்லை. யாரும் சரியாகச் சாப்பிடவில்லை. உணவகம் தேடிச் செல்வதற்கும் அவகாசம் இல்லை.

தங்கும் இடத்துக்குத் திரும்பினோம். எதிரில் வந்த அந்தச் சமையல் கலைஞர் மகிழ்ச்சியாக, “லெமன் ரைஸ் எப்படி இருந்தது? நாளையும் அதையே செய்து கொடுக்கட்டுமா?” என்று கேட்க, “ஐயோ, ரொட்டியே போதும்” என்று அனைவரும் அலறினார்களே பார்க்கலாம்!

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in