

தமிழ்நாடு அரசு ஓசைப்படாமல் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. விக்ரம் விண்கலம் நிலவில் தரையிறங்கிச் சாதனை படைத்திருக்கும் இத்தருணத்தில் தமிழ்நாடு அரசின் இச்செயல் பாராட்டுக்குரியதாகிறது.
2023 ஜனவரியில் தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் என்கிற குக்கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வானியல் ஆய்வரங்கு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே இத்தகைய வானியல் ஆய்வரங்கு செயல்படும் முதல் அரசுப் பள்ளி இதுதான்!
பள்ளியின் இரண்டு மாடிக்கு மேல் உள்ள மேற்பரப்பில் சக்திவாய்ந்த தொலைநோக்கி வானத்தைக் கூர்ந்து பார்த்தபடி நிற்கிறது. சந்திரயான் 3 நிலவில் இறங்கும் காட்சிகளைக் காணும் வாய்ப்பும் இந்த ஆய்வரங்கின் கணினித்திரைகளில் நேரலையாக வந்தடைந்திருக்கிறது.
பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சங்கரன் அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர். நிலவில் சந்திரயான் தரையிறங்கும் காட்சியை மகிழ்ச்சி பொங்க மாணவர்களுக்குப் படிப்படியாக வர்ணித்தார். மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.
பள்ளி மாணவனானேன்: நான் கால இயந்திரத்தில் ஏறி 60 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்து, சிறுவனாகிவிட்டேன். இதே பள்ளியில் நான் ஏழாம் வகுப்பு ‘பி’ பிரிவு மாணவன்.
எங்கள் அறிவியல் ஆசிரியர் வடிவேலு வானத்து விண்மீன் கூட்டத்தையும் பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் சூரியக் குடும்பத்தைப் பற்றியும் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பில் பாடம் நடத்துவதோடு நின்றுவிடாமல் எங்களை எல்லாம் இரவு எட்டு மணிக்கு மேல் வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார். வானத்தை அண்ணாந்து பார்க்கச் சொன்னார். வயல்வெளி வகுப்பறை ஆகிவிட்டது.
“வானத்தில் தெரியும் ஒளிப்புள்ளிகளை உற்று நோக்குங்கள். அவற்றில் கண்சிமிட்டாதவை கோள்கள். கண்சிமிட்டுபவை விண்மீன்கள். ஏன் நட்சத்தி ரங்கள் கண்சிமிட்டுகின்றன தெரியுமா?” என்று கேட்டார்.
நாங்கள் ஆச்சரியத்துடன் ஆகாயத்தைப் பார்த்தோம். விண்மீன்களின் ஒளிக்கற்றைகள் பூமியில் உள்ள வளிமண்டலத்துக்குள் வரும்போது ஏற்படும் ஒளிவிலகல் காரணமாக விண்மீன்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிகின்றன! ‘டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்று பாடுகிறோம் அல்லவா? உண்மையில் எந்த ஸ்டாரும் கண்சிமிட்டு வதில்லை.
அதேபோல கோள்களுக்கு என்று தனியே ஒளி கிடையாது என்பதால் அவற்றிலிருந்து எந்த ஒளியும் நம்மை அடைவதில்லை. ஆகவே அவை கண் சிமிட்டுவதில்லை! அதோ தெரிகிறது பாருங்கள், அதுதான் ஓரியன் நட்சத்திரக்கூட்டம். ஒரு போர்வீரன் இடுப்புக் கச்சையுடன் வாள் ஏந்தி நிற்பதுபோல் தெரிகிறதா?”
அட ஆமாம்! கச்சை மட்டுமல்ல, அவன் கால் களும் தலையும்கூடத் தெரிந்தது! “தெரியுது சார்! தெரியுது சார்!” என்று கத்தினோம்.
வடிவேலு வாத்தியார் சிரித்தார்.
“அதோ பாருங்கள், அதுதான் சப்தரிஷி மண்டலம். நாலு கால், வாலுடன் ஒரு கரடி மாதிரி தெரிகிறதா? பார்ப்பதற்குத்தான் இந்த உருவங்கள் இப்படி வடிவமாகத் தெரிகின்றன. இது நம் கற்பனை. உண்மையில் அவை எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இல்லை. மேலும் கீழும் உள்ள இரண்டு நட்சத்திரங்கள் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன!”
வடிவேலு வாத்தியார் வானத்தை விரித்துவைத்து வாசிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
“டெலஸ்கோப் இருந்தால் இவற்றை மிகவும் நெருக்கமாகப் பார்க்க முடியும்”.
“சார், நம் பள்ளிக்கு ஒரு டெலஸ்கோப் வாங்கலாம்!”
“இது ஏழைப் பள்ளிக்கூடம். ஆனா, நிச்சயம் இது பெரிய பள்ளி ஆகும். நம் ஆய்வுக் கூடத்துக்கு டெலஸ்கோப் கிடைக்கும்!”
பள்ளி மைதானத்தில் விளையாடும்போது, நரைத்த முடியும் சின்ன முகம் போன்ற ஒற்றை விதையும்கொண்ட வெடித்த பூக்கள் காற்றில் மிதந்து செல்வதைப் பார்ப்போம். அவற்றைப் பார்த்து எங்களுக்கு அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா என்று கத்துவோம். ஒருநாள் அவற்றைப் பார்த்து எங்களுக்கு டெலஸ்கோப் கொண்டுவா என்று கத்தினோம்.
நனவான கனவு: ஓர் அதிநவீன தொலைநோக்கிக் கருவியை மேலஉளூர் பள்ளிக்குத் தாத்தாப்பூச்சி கொண்டுவந்து விட்டது. என்ன நடுவில் 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. மாணவர்கள் வானத்தை வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
வானவியல் ஆய்வுக்கூடம் பிரமிக்கவைத்தது. ஆய்வுக்கூடத்தின் அறை முழுவதும் சுவாரசியமான விளக்கப் படங்கள். இரண்டு பெரிய திரைகளில் விரியும் பால்வீதி மண்டலம், சுழலும் கோள்கள்.
“நமது சந்திரயான் விண்கலத்தின் லேண்டருக்கு ஏன் தெரியுமா விக்ரம் லேண்டர் என்கிற பெயர்?” என்று கேட்டுவிட்டு விளக்குகிறார் சங்கரன்.
“விக்ரம் சாராபாய்தான் நமது விண்வெளித் திட்டத்தின் தந்தை. இவர் ராக்கெட்டுகளின் ஏவுதளம் அமைக்க திருவனந்தபுரத்தில் ஓர் இடத்தைத் தேர்வு செய்தார். அது அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சொந்தமானது. அங்கிருந்த பாதிரியார் பீட்டர் பெர்னார்டு பெரேராவிடம் தனது கோரிக்கையை முன்வைத்தார். பாதிரியார் தான் நடத்தும் பிரார்த்தனைக் கூட்டத்தில், “குழந்தைகளே, இதோ வந்திருக்கிறவர் புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாய்.
இவர் தமது ராக்கெட் ஆய்வுக்கூடத்தை நிறுவ இந்தத் தேவாலயத்தையும் எனது வசிப்பிடத்தையும் பயன்படுத்த அனுமதி வேண்டுகிறார். ஆன்மிகமும் அறிவியலும் மனிதகுலம் முன்னேற உழைப்பவைதாம்! ஆகவே இந்தத் தேவாலயத்தையும் நான் வசிக்குமிடத்தையும் இவருக்குக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார் பாதிரியார். ‘ஆமென்’ என்று அங்கிருந்த அனைவரிடமிருந்தும் ஒரே குரலில் ஆமோதிப்பு எழுந்தது.”
இப்படி அனைத்து விஷயங் களையும் சுவையாகச் சொல்கிறார் சங்கரன். ஸ்பெக்ட்ராஸ்கோப் என்கிற சிறிய மரத்தாலான கருவியை மாணவர்கள் கையில் கொடுத்து சூரிய ஒளியைப் பார்த்து ஏழு நிறங்களையும் காணவைத்தார்.
“இதேபோல நிறப்பிரிகையை உண்டாக்கி, அதிலிருக்கும் நிறமாலையில் உள்ள கறுப்புப் பட்டைகள் உதவியுடன் நிலவில் நகரும் ரோவர் கருவி கனிமங்களையும் தனிமங்களையும் கண்டுபிடிக்கிறது. இதற்காக ஸ்பெக்ட்ரோ மீட்டர் அதில் பொருத்தப் பட்டிருக்கிறது.” இந்த ஆய்வகத்தின் உதவியுடன் அண்மையில் மாணவர்கள் பெற்ற அறிவியல் செய்தி என்ன என்று கேட்டேன்.
“முழு சந்திர கிரகணத்தின்போது நிலவு சிவப்பாகத் தெரியும். அதை ரெட்மூன் என்பார்கள். அரிதினும் அரிதான நிகழ்வு. இது இந்தியாவில் தெரியாது. கலிபோர்னியாவில் இருந்த ஆய்வுக்கூடம் எங்களுக்கு அனுப்பி, அதை மாணவர்கள் கணினியில் காணும்படி செய்தோம்!”
ஒரு மாணவர் விக்ரம் லேண்டரை அட்டையில் செய்து வைத்திருந்தார். யாழினி சாக்பீஸில் சந்திரயான் செய்து வைத்திருந்தார். வடிவேலு வாத்தியார் வானிலிருந்து புன்னகைக்கிறார்.
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com