நீ மட்டும் ஏன் பாடாமல் நிற்கிறே?

நீ மட்டும் ஏன் பாடாமல் நிற்கிறே?
Updated on
2 min read

தொலைக்காட்சி இசைப் போட்டி நிகழ்ச்சிகளில் சீனியர் முதல் சிறார் வரையிலான ‘சிங்கர்’கள் சிறப்பாகப் பாடுவதைப் பார்த்துப் பரவசப்படுகிறோம். ஆனால், ஆடிஷனுக்கு வந்தவர்களில் அத்தகைய திறமைசாலிகளைத் தேர்ந்தெடுப்பதற்குள் ஆசான்கள் படுசிரமப்படுவது நம் பார்வைக்கு வருவதில்லை.

ஒருவேளை தேர்வு செய்யப்பட்டுவிட்டால், எப்படி அழுவது, தொகுப்பாளர்களின் பரிகாசங்களுக்குப் பயப்படாமல் எப்படிப் பாங்காகப் பதிலளிப்பது, வீட்டிலிருந்து அம்மா - அப்பா வந்திருப்பது தெரிந்தும் நிகழ்ச்சியின் அதிர்ச்சி - நெகிழ்ச்சித் தருணத்துக்காக அது தெரியாததுபோல் எப்படி நடிப்பது எனப் பல பால பாடங்களை அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டியிருக்கும் என்பது தனிக்கதை.

அப்படியான ஆடிஷன் களால் ஆனானப்பட்ட ஜாம்பவான்களே ஆடிப் போன சம்பவங்கள் உண்டு. 90களில் கோலோச்சிய ஓர் இசையமைப்பாளர் பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டிருந்த விஷயம் இது. ஒரு முறை, புதிய குரல்களை அறிமுகப்படுத்த விரும்பிய அவர் ஒரு நன்னாளில் அதற்கென அழைப்பு விடுக்க... அதைப் பார்த்த பாடகார்வலர்கள் பலர் அவரது ஸ்டுடியோவுக்குப் படையெடுத்திருந்தனராம்.

எந்தத் தருணத்திலும் புன்னகை தொலைக் காத அந்த மனிதர் அன்றைக்கு வெந்து நொந்து போகும் அளவுக்கு, வந்தவர்கள் தங்கள் சாகச சாரீரத்தின் மூலம் சங்கீதக் கொலை நிகழ்த்திவிட்டன ராம். பாடகர்கள் தன் மெட்டை இஷ்டத்துக்குப் இம்ப்ரோவைஸ் (!) செய்து பாடினாலும், தடுத்து நிறுத்தாத தாராளவாதியான அவர் அன்று தெம்பிழந்து தேம்பியழாத குறைதான்.

கூடத்தில் இருந்த அனைவரையும் ஈவிரக்கமின்றி நிராகரித்த அவர், இறுதியாக மிச்சமிருந்த ஓர் இளைஞனைப் பார்த்து, “நீ மட்டும் ஏன் பாடாமல் நிற்கிறே? போய்ப் பாடித் தொலை” என்று மிரட்டி விரட்டியிருக்கிறார். அந்தப் பையன் வானத்துக்குக் கீழ் வசிக்கும் எந்த ஓர் உயிரினத்தையும் பிரதிபலிக்காத விசித்திரக் குரலில் கர்ணக்கொடூர கானம் பாடியிருக்கிறான்.

வெகுண் டெழுந்த அந்த இசையமைப்பாளர், “எந்தத் தைரியத்துலய்யா நீ ஆடிஷனுக்கு வந்தே?” என்கிற ரீதியில் கேள்விகளால் வேள்வி செய்ய... பையன் பரிதாபமாகச் சொன்னானாம்: “சார், நான் பாட வரலை. அக்காதான் பாட வந்துச்சு. நான்கூட வந்தவன் சார்!”

அதற்குப் பிறகும் மனசை விட்டுவிடாமல் தொடர்ந்து இயங்கி பல ஹிட் பாடல்களையும், நிறைவான பின்னணி இசைக்கோவைகளையும் அந்த இசையமைப்பாளர் கொடுத்திருக்கிறார் என்றால், அவரது பொறுமையின் அருமையை நாம் புரிந்துகொள்ளலாம்.

வெறும் கேள்வி ஞானத்தை மட்டும் வைத்துப் பாடித்திரியும் என்னைப் போன்ற அமெச்சூர் பாடகர்கள், ஆசான்களுக்குக் கொடுத்த அவஸ்தைகள் தனிக்கதை. ஒருமுறை டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஆர்.கே.புரம் பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்றுப் பாட தலைநகர்வாழ்த் தமிழர்களில் முக்காலே மூணு வீசம் பேர் ஆடிஷன் அரங்கில் குழுமியிருந்தார்கள்.

கூட்டம் அதிகம் என்பதால், தன் பார்வையில் பாடகராகப் ‘படுபவர்க’ளை மட்டும் ஒவ்வொருவராக மேடைக்கு வருமாறு இசைக்குழுவின் தலைவர் ஏஞ்சல்ஸ் அழைத்துக்கொண்டிருந்தார். நானும் நண்பர் குமரனும் சென்றிருந்தோம். என்னைப் பார்த்தால், ‘கூட வந்தவ’னாகத் தெரிந்திருக்கும் போல, ஒரு மணி நேரம் கடந்தும் என்னைக் கூப்பிடவே இல்லை.

ஞாபக மறதியில் ஏஞ்சல்ஸே என்னை அழைத்துவிட, நான் சென்று எனக்குத் தெரிந்த ஸ்ருதியை(!) நினைத்துக்கொண்டு பாட, “ஏ ஷார்ப், பி ஷார்ப், ஐசியூ ஷார்ப்” என்று இசைமொழியில் என்னை ஏசியபடி பேசித் தீர்த்து இறுதியாக, “சரி, நேராகக் கோயிலுக்கு வந்திடுங்க. அங்கே பார்த்துக்கலாம்” என்று ஒரு தீர்மானத்துடன் (!) சொன்னார்கள் இசைக் குழுவினர்.

நானாவது பரவாயில்லை. எனக்குப் பின்னர் பாடவந்த ஒரு பெண்மணி, ‘வசீகரா உன் நெஞ்சினிலே’ பாடலின் வரிகளை, ‘கருமாரியே நீ வருவாயே’ என பக்தி ரசம் சொட்ட மாற்றிப் பாட, ஏஞ்சல்ஸும் இன்ன பிற இசைக் கலைஞர்களும் ‘நின்னுக்கோரி வர்ணம்’ காமெடி கணக்காக ஒருவரை இன்னொருவர் பார்த்துக் கொண்டதை ஒருபோதும் மறக்க முடியாது.

- chandramohan.v@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in