

பளபளக்கும் மாடுலர் கிச்சன் இல்லை, துடைத்து வைத்த சமையல் மேடை இல்லை, கண்ணைக் கவரும் அழகிய பாத்திரங்கள் இல்லை, விதவித மான உணவுப் பண்டங்கள் இல்லை, துல்லியமான எடிட்டிங் இல்லை...
இவ்வளவு ‘இல்லை’கள் இருப்பதாலேயே சுஸ்மிதா பதிவேற்றுகிற காணொளிகள் கருத்தை நிறைக்கின்றன. கிராமத்து வாழ்க்கையின் அசலான முகம் கொடுக்கிற நிறைவு அது. ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சுஸ்மிதா, வீட்டினர் தனக்கு வைக்கப்பட்ட செல்லப் பெயரில் யூடியூப் அலைவரிசை (tusu zupu vlogs) ஒன்றை நடத்திவருகிறார்.
சுஸ்மிதாவுக்குப் பள்ளி மாணவியைப் போன்ற தோற்றம். ஆனால், வயல் வேலையிலிருந்து வீட்டு வேலை வரை அனைத்தையும் அசாத்தியமாகச் செய்துவிடுகிறார். சிறு குடிசை வீடு, வீட்டுக்கு வெளியே சிறிதும் பெரிதுமாக இரண்டு அடுப்புகள்.
சிறிய அடுப்பு சமையலுக்கு, பெரிய அடுப்பு நெல் அவிக்க. 2021இல் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கிய சுஸ்மிதா இதுவரை 350க்கும் மேற்பட்ட காணொளி களைப் பதிவேற்றியுள்ளார். இரண்டாயிரத்தை எட்டாத சந்தாதாரர்கள், அரிதாகச் சில காணொளிகள் மட்டும் நான்காயிரம் பார்வைகளைத் தாண்டியுள்ளன.
பலரும் பார்க்காத வேறு உலகத்தை இந்தக் காணொளிகள் காட்டுகின்றன. வீட்டுக்கு அருகில் இருக்கும் தோட்டத்திலும் காட்டிலும் கிடைக்கிறவற்றைத்தான் சமைத்து உண்கிறார்கள். கீரை வகைகள் (முருங்கைக் கீரை மட்டும் நமக்குத் தெரிகிறது), கத்தரிக்காய், கோவைக்காய், முருங்கைக்காய், பாகற்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, காளான் போன்றவற்றைத்தான் அதிகமாகச் சமைக்கிறார்கள். நண்டு, மீன், நத்தை, சிப்பி இவையெல்லாம் சிறப்பு உணவு.
இவை எப்போதாவது உண்டு. எண்ணெய்யைப் பெயருக்குத்தான் பயன்படுத்துகிறார்கள். காரத்துக்குச் சிவப்பு மிளகாய், பூண்டு. அரிதாக வெங்காயம், சீரகம். மற்றபடி காய்களில் உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேகவைத்துச் சாப்பிடுகிறார்கள்.
சுஸ்மிதா குடும்பத்தினர் தங்கள் வயலில் நெல்லை விதைக்கிறார்கள். நிலத்தைத் தந்தையும் சகோதரனும் உழ, விதைத் தூவுதல், நாற்றுப் பிடுங்குதல், நாற்று நடுதல், களையெடுத்தல், அறுவடை என எல்லாவற்றிலும் சுஸ்மிதாவின் பங்கு உண்டு. நெல் மூட்டையை அநாயசமாகத் தூக்கித் தோளில் வைத்தபடி நடக்கிறார்.
வீட்டிலேயே நெல் அவிக்கிறார்கள். அதைக் காயவைத்து அரவை மிஷினில் கொடுத்து அரிசியாக்குகிறார்கள். உமியை வீட்டுத் தேவைக்கு அள்ளிவந்துவிடுகிறார்கள். சோறாக்கி அதில் தண்ணீர் ஊற்றிச் சாப்பிடுகிறார்கள். வேக வைத்த கீரை அல்லது காயைத் தொட்டுக்கொள்கிறார்கள்.
மாங்காய், முட்டைகோஸ் போன்ற சில வகை காய்களைக் காயவைத்துக் கொள்கிறார்கள். தேவைப்படும்போது இவற்றை ஊறவைத்துச் சமைக்கிறார்கள். கேழ்வரகைக் கழுவி தண்ணீர் விட்டு அரைத்து மாவாக்கி அதைக் கொதிக்கும் நீரில் கொட்டி கூழ்போலக் காய்ச்சிக் குடிக்கிறார்கள்.
வெங்காயம், தக்காளி இல்லாமல் நம் ஊரில் பலருக்குச் சமையலே நடக்காது. ஆனால், நமக்குச் சற்றுத் தள்ளியிருக்கும் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த சுஸ்மிதாவின் வாழ்க்கையும் உணவுப் பழக்கமும் சுவையூட்டிகளோடும் மணமூட்டிகளோடும் சக்கை உணவோடும் வாழும் நமக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்துகின்றன.
இவர்களுக்கும் நாள் கிழமை உண்டு. அதையும் சுஸ்மிதா காணொளியாகப் பதிவேற்றியிருக்கிறார். நன்கு பழுத்த பனம்பழத்தைப் பிழிந்து சாறெடுத்து அதைக் காய்ச்சுகிறார்.
அந்தச் சாற்றைக் கோதுமை மாவில் ஊற்றிக் கலந்து தோசையாகச் சுட்டெடுத்தால் அதுதான் அவர்களது பண்டிகை உணவாம்! இலைகளில் படர்ந்திருக்கிற சிவப்பு எறும்பைக் கைபடாமல் சேர்த்தெடுத்து கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சட்னியாக அரைத்து அதைச் சோற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடுகிறார்கள்.
பறவைகளின் கீச்சொலியும் காற்றின் இருப்பையும் தவிர காணொளியில் வேறு எந்த ஒலியும் இல்லை. சிலவற்றில் ஆங்கிலத்தில் விளக்கம் இருக்கிறது.
தாங்கள் உண்டு, தங்கள் வயல் உண்டு என்று வாழ்கிற இவர்களுக்கு ‘அன்பளிப்பு’ என்கிற பெயரில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களைச் சிலர் அனுப்பிவைக்கிறார்கள். நூடுல்ஸ், நெயில் பாலீஷ், பாப்கார்ன் என இயற்கைச் சூழலுக்குள் மெல்ல நுழையப் பார்க்கிறது உலகமயமாக்கல். விவசாயிக்கே கோதுமை மாவை பாக்கெட்டில் அடைத்து அன்பளிப்பாக அனுப்புகிற கொடுமையும் நடக்கிறது.
எல்லாம் ‘ஸ்பான்சர்’ படுத்தும்பாடு. தண்ணீரைப் பிழிந்து சோறு சாப்பிட்டபடியே பூனைக்கும் நாய்க்கும் சிறிது எடுத்து வைக்கிறார் சுஸ்மிதா. கொய்யாப் பழத்தை அரியும்போது தத்தி வந்து பக்கத்தில் அமரும் கிளிக்குச் சிறு துண்டைத் தருகிறார். வாழ்க்கை வானவில்லைவிட வண்ணமயமாகத் தெரிகிறது.
யூடியூப் அலைவரிசையைக் காண: https://shorturl.at/jpFRY