திண்னைப் பேச்சு 13: இந்தக் கேள்வியை யாரிடமும் கேட்காதீர்கள்...

திண்னைப் பேச்சு 13: இந்தக் கேள்வியை யாரிடமும் கேட்காதீர்கள்...
Updated on
2 min read

எழுபதுகளில் தஞ்சாவூரில் இருந்த கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பாக ஜெயகாந்தனைப் பேச அழைத்திருந்தார்கள். அந்தக் கல்லூரி மாணவர்களின் வீரப்பிரதாபங்கள் மாநிலம் முழுவதும் பிரசித்தம். எதற்கெடுத்தாலும் ஸ்டிரைக், வகுப்புகள் புறக்கணிப்பு, சாலை மறியல்...

ஜெயகாந்தனிடம் கல்லூரி முதல்வர், "சார், உங்கள் பேச்சை நான் கேட்டதில்லை. ஆனாலும் ரொம்ப அழுத்தம் திருத்தமாக, ஆக்ரோஷ மாகப் பேசக்கூடியவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்கள்தான் மாணவர் களுக்கு மனதில் உறைக்கும் படி நல்ல அறிவுரை சொல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

“அதற்கென்ன, சொன்னால் போச்சு” என்றார் ஜே.கே.

மேடையில் ஏறியதும் அவர் மாணவர் களைப் பார்த்து இப்படிச் சொன்னார்: “மாணவர்களே, மாடுமேய்க்கப் போங்கள்!”

ஒரே கூச்சல், விசில் சத்தம்.

“நீங்கள் வீட்டில் இருந்தால் எங்கே மாடு மேய்க்கப் போய்விடுவீர்களோ என்று பயந்துகொண்டுதான் உங்கள் பெற்றோர் உங்களை எல்லாம் கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறார்கள்!”

கேட்டுக்கொண்டிருந்த மாணவர் களிடமிருந்து மீண்டும் எழுந்தது ஆரவாரம்.

“நண்பர்களே, மாடுமேய்ப்பது ஒன்றும் தகுதிக் குறைவான செயல் இல்லை. மகாபாரதத்தில் கிருஷ்ணரே மாடு மேய்த்திருக்கிறார். எனக்கும் படிப்பு வரவில்லை. ‘நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று என் ஆசிரியர்களிடம் பலமுறை திட்டு வாங்கியிருக்கிறேன். நான் ஞானபீடம் வாங்கவில்லையா?”

சிரிக்க சிரிக்கப் பேசினார் ஜே.கே.

அன்றைய கூட்டம் மாணவர்களும் ஜெயகாந்தனும் சேர்ந்து நடத்திய கலந்துரையாடல் அரங்கமாகக் களைகட்டியது. கல்லூரி முதல்வர் பாதியில் எழுந்து போய்விட்டார்.

கடைசி பெஞ்சு: அப்போதெல்லாம் பள்ளி, கல்லூரி களில் படிப்பில் கவனம் செலுத்தாத, கல்லூரி விதிகளுக்குக் கட்டுப்படாத மாணவர்கள் கடைசி பெஞ்சில் ‘அடைக்கலமாகி’ இருப்பார்கள்

முதல் பெஞ்ச் மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்வதைக் கவனமுடன் கேட்டு, தேர்வுகளில் மதிப்பெண்களை அள்ளுபவர்களாக இருப்பார்கள்.

காலம் எத்தனையோ கடைசி பெஞ்சு மாணவர்களை வாழ்வின் முதல் பெஞ்சில் உட்கார்த்தி வைத்திருக்கிறது. அவர்கள் கெட்டுப் போய்விடவில்லை. எதற்கும் கட்டுப்படாதவர்களாக, சுதந்திரர்களாக இருந்தார்கள். அவர்களின் கற்றலுக்கான சாளரங்கள் பள்ளிக்கு வெளியே இருந்தன.

கடைசி பெஞ்சு மாணவர் ஒருவர் பிற்காலத்தில் ரிசர்வ் வங்கி டெபுடி கவர்னராக ஆனார். புகழ்பெற்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் கடைசி பெஞ்சில்தாம் உருவானார்கள். மதிப்பெண்களுக்காகப் படிக்க மறுத்தவர்கள் அவர்கள்.

என்ன ஆகப்போகிறாய்? - படித்துவிட்டு என்ன ஆகப் போகி றாய் என்று குழந்தைகளைக் கேட்பது பெரியவர்களுக்கு வேண்டுமானால் விளையாட்டாக இருக்கலாம். ஆனால், குழந்தைகள் பெற்றோரின் கனவுகளை காணுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு மொட்டிலேயே கருகிவிடுகிறார்கள்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருநாள் அழுதுகொண்டே வீடு திரும்பிய பள்ளிச் சிறுமியான தன் மகளிடம் காரணம் கேட்டார்.

“டீச்சர் நீ என்ன ஆகப்போகிறாய்னு கேட்டால் என்ன சொல்றதுன்னே தெரியல. என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் டாக்டர்களாகவும் இஞ்சினியர் களாகவும், விமானிகளாகவும் ஆயிட் டாங்கப்பா. எனக்கு ஆவதற்கு ஒன்றுமே இல்லியா… நான் அப்படியே நின்னேன். எல்லாரும் சிரிச்சாங்க. நீயே சொல்லுப்பா… நான் என்ன ஆகப்போறேன்?”

மீண்டும் அழ ஆரம்பித்த குழந்தையைத் தேற்ற முடியாமல் திகைத்துப் போனார் நண்பர்.

பள்ளி ஆசிரியராகப் பணிசேர்ந்த இளைஞர் ஒருவர் அறிவுரை கேட்டு என்னை அணுகியபோது, ஒரே ஓர் அறிவுரைதான் சொன்னேன்.

“உன் மாணவர்கள் படித்த பின் என்ன ஆக விரும்புகிறார்கள் என்று தப்பித்தவறிகூடக் கேட்டுவிடாதே.”

திரைக்கலைஞரின் பதில்: திரைக்கலைஞர் சில்க் ஸ்மிதாவிடம் ஒரு செய்தியாளர் கேட்டார்: “நீங்கள் திரைத்துறைக்கு வராமல் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள்?”

“ஒரு நக்சலைட்டாக ஆகி இருப்பேன்” என்று அமைதி யாகச் சொன்னார் சில்க் ஸ்மிதா.

பஞ்சர் ஒட்ட ஆசைப்பட்ட வண்ணநிலவன்: நானும் எழுத்தாளர் வண்ணநிலவனும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

“எழுத்து தவிர உங்களுக்குப் பிடித்தமான வேலை என்ன?” என்று சாதாரணமாகத்தான் கேட்டேன்.

“எழுத்து தவிர அல்ல, எழுத்தைவிடவும் பிடித்தமான வேலை எனக்கு ஒன்று இருக்கிறது!”

“என்ன வேலை?”

“சைக்கிள் ரிப்பேர் கடையில் பஞ்சர் ஒட்டுகிற வேலைதான்!”

“நிஜமாகவே சொல்கிறீர்களா? என்ன காரணம்?”

“பஞ்சர் ஒட்டும் பையனை யாரும் கவனிக்க மாட்டார்கள். நாம் பாட்டுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு பஞ்சர் ஒட்டிக்கொண்டிருக்கலாம், இந்த எழுதுகிற வேலையே வேண்டாம் என்று தோன்றுகிறது. புகழ் வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது. எழுதுவதற்காக கிடைக்கும் விருதும் பாராட்டும் ரொம்பவும் மூச்சுமுட்டுவதாக இருக்கிறது. என் வேலையை நான் செய்துட்டுப் போறேன். யாருடைய கவனிப்பும் இல்லாமல். அதற்கு சைக்கிள் ரிப்பேர் கடைதான் சரி.”

“இங்கே எல்லாரும் கௌரவிக்கப் படவும் பாராட்டப்படவும் விருதுகளை விரும்புகிறவர்களாகத்தானே இருக்கிறார்கள்.”

“எனக்கு விருப்பமில்லை. இதெல் லாம் எனக்கு வேண்டாத சமாச்சாரம்.”

எழுத்து என்னுள் வார்த்த துறவு. பிறகு எழுத்தையே துறக்குமளவு வளர்ந்துவிட்டது என்கிற தளைய சிங்கத்தின் வாசகத்திற்கு எடுத்துக்காட்டாக எனக்கு முன்னால் சிரித்தபடி நின்றார் வண்ணநிலவன்.

(பேச்சு தொடரும்)

- thanjavurkavirayar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in