

இன்னும் சில மணி நேரத்தில் கதிரவன் எட்டிப் பார்த்துவிடுவான். பெரும்பான்மையான மக்கள் உறக்கத்தில் இருக்க, சென்னை யின் முக்கியச் சாலைகளில் சுடச்சுட உணவு வகைகளைச் சுவைத்துக்கொண்டிருக்கிற வர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!
கண்களைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் ஐடி ஊழியர்கள், மாணவர்கள், குடும்பங்கள், நண்பர்கள் என அலை அலையாக மக்களைத் திரட்டிக்கொண்டிருக்கின்றன இரவு உணவகங்கள். இரவு 11 மணியிலிருந்து உணவு விநியோகம் ஆரம்பித்துவிடுகிறது. டீ, சான்ட்விச், பாப்கார்ன், பிரியாணி, வறுத்த கோழி என உணவுப் பட்டியல் நீள்கிறது.
கத்திப்பாரா சதுக்கம்: கத்திப்பாரா சதுக்கத்தைச் சுற்றி மட்டும் சுமார் 25 உணவகங்கள் அமைந்துள்ளன. அங்குதான் நீண்ட நேரப் பணியை முடித்துவிட்டு, களைப்பைப் போக்குவதற்காக மருத்துவர் அபிஷேக் பால் வந்திருந்தார். “பொதுவாகவே எங்கள் ஷிப்ட் முடிய நள்ளிரவாகிவிடும்.
பசி இருக்கும் என்பதால் நொறுக்குத் தீனிக்காக இங்கு வந்துவிடுவோம். இரவில் போக்குவரத்து நெரிசல் இருக்காது, உணவகங்களில் கூட்டம் இருக்காது என்பதும் நாங்கள் இங்கு வருவதற்கு முக்கியக் காரணம்” எனச் சூடான பாப்கார்னைக் கொறித்துக்கொண்டே பேசினார்.
மறுபுறம் ஜூனியர் குப்பண்ணா தென்பட்டது. அங்கு சிலர் உணவுப் பிரியர்களுக்கு பிரியாணி பரிமாறிக்கொண்டிருந்தனர். இரவு 11 மணிக்குச் சேவையை ஆரம்பிக்கும் இந்த உணவகங்கள், அதிகாலை 2 மணிவரை திறந்திருக்கின்றன.
திரைப்படம் பார்த்துவிட்டுத் திரும்புகிற வர்கள், வேலை முடித்துவிட்டு வருகிறவர்கள், நள்ளிரவு பார்ட்டிகளை விரும்புகிறவர்களின் விருப்பத்துக்குரிய உணவகங்களாக இவை இருக்கின்றன.
குழந்தைகள் விளையாடுவதற்காகவே கத்திப்பாரா சதுக்கத்தில் கடந்த ஆண்டு விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. அதற்குப் பிறகு மக்கள் இங்கு பெரும் திரளாக வந்துகொண்டிருக்கின்றனர். இதனால் புதுப் புது உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்குத் தர வேண்டிய தேவை இருப்பதாக மேலாளர் ஒருவர் கூறினார்.
அண்ணா சாலை: ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பிலால் உணவகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. புஹாரி போன்ற சென்னையின் புகழ்பெற்ற உணவகங்கள் அருகே இருந்தாலும் பிலாலின் பால்கனி, சூடான டீ, பன் பட்டர் ஜாமை நோக்கி மக்கள் இரவு நேரத்தில் படையெடுப்பதால், அந்தப் பகுதியே வாகனங்களால் நிறைந்துவிடுகிறது. மக்களின் அமோக வரவேற்பால் நள்ளிரவு தாண்டியும் இருக்கை கிடைப்பது கடினமாகவே இருக்கிறது.
மாலை வேளைகளில் தன் நண்பர்களுடன் பிலாலில் ஆஜராவதைத் தன் கடமையாகவே கொண்டிருப்பதாகச் சொல்கிறார் அண்ணா சாலை வங்கி ஒன்றில் பணிபுரியும் ஃபிரான்சிஸ் சேவியர். “ஒருநாள்கூட இங்கு வராமல் இருந்ததில்லை. நள்ளிரவுவரை வேலை நீளும்போது, இரவு உணவுக்கு பிலாலே சிறந்த இடமாக இருக்கிறது. இவர்கள் வழங்கும் பிரியாணியின் சுவை தனித்துவமானது என்பதே மக்களின் வரவேற்புக்குக் காரணம்” என்கிறார்.
சேவியரின் நண்பர் அன்பு வெள்ளையன், “பிலாலின் பன் பட்டர் ஜாமுக்கு நிகர் எதுவுமே கிடையாது. இங்குள்ள மட்டன் சமோசா அட்டகாசமாக இருக்கும்” என்கிறார்.
பிரியாணி எல்லாம் இரவில் வேண்டாம், டீ, காபி, பிஸ்கெட் போதும் என்று நினைப்பவர்களை இருகரம் நீட்டி வரவேற்கிறது பிலாலுக்கு எதிரில் இருக்கும் புகழ்பெற்ற புஹாரி பேக்கரி.
அண்ணா நகர்: உணவுப் பிரியர்களுக்கு மற்றும் ஒரு சொர்க்க பூமியாக இருக்கிறது அண்ணா நகரின் கோரா உணவு வீதி. இங்கு உலகின் பல்வேறு நாட்டு உணவு வகைகளைத் தரத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. உணவுக்கான ரீசார்ஜ் கார்டுகளைப் பணம் கொடுத்துப் பெற்றுக்கொண்டு, விரும்பும் இடத்தில் உணவை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
“கோரா உணவு வீதியில் 40க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. 5,700-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன” என்கிறார் அதன் உரிமையாளரான ராஜசேகர் கோரா.
இளம் தலைமுறையினரைக் கவருவதற்காக ஸ்பைடர் தோசை போன்றவற்றையும் கோரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உணவு வகைகள் மட்டுமின்றி, விதவிதமான குளிர்பானங்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. பர்மிய உணவு வகைகளான அத்தோ, பேஜோ போன்றவையும் கோராவில் கிடைக்கின்றன.
கூட்ட நெரிசலைச் சமாளிக்க கோரா வீதிகளில் பவுன்சர்களும் உலா வருகின்றனர். கோராவைப் பொறுத்தவரை பிரியாணிகள் மிகப் பிரபலம். மூங்கில் பிரியாணி, பானை பிரியாணி எனப் பல வகையான பிரியாணிகள் கிடைக்கின்றன.
“நான் நள்ளிரவில் பலமுறை கோரா உணவு வீதிக்கு வந்திருக்கிறேன். இந்தப் பகுதி பாதுகாப்பானதாகவே உள்ளது. பெரும்பாலும் நண்பர்களுடன்தான் இங்கு வருவேன். மகிழ்ச்சியாக நேரம் கடந்துவிடும்” என்கிறார் நீரா கபிலன்.
இங்குள்ள சில உணவகங்களில் செல்லப் பிராணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது கோராவின் தனித்துவம் என வாடிக்கை யாளர்கள் சொல்வதைக் கேட்க முடிந்தது.
நாவலூர்: சாலமனும் அவரது ஐடி நண்பர்களும் 12 மணிக்குப் பணி முடிந்த பிறகு, ஆர்டிஎஸ் உணவு வீதிக்குத்தான் வருகிறார்கள். “இரண்டு நாள்களுக்கு ஒருமுறையாவது வந்துவிடுவோம். நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்குச் சிறந்த இடம் இதுதான். வெறும் உணவுக்காக மட்டுமல்லாமல் பிறந்தநாள் பார்ட்டி போன்ற கொண்டாட்டங்களுக்கும் இங்கு ஆஜராகிவிடுவோம். மலபார் பரோட்டா, மதுரை கறிதோசை எனக்குப் பிடித்த உணவு வகைகள்” என்கிறார் சாலமன்.
15 ஆயிரம் சதுர அடியில் பரந்து விரிந்து காணப்படும் ஆர்டிஎஸ் உணவு வீதி, 70க்கும் மேற்பட்ட உணவகங்களைக் கொண்டுள்ளது. 200 கார்கள்வரை இங்கு நிறுத்த முடியும்.
“ஐடி கம்பெனிகள் இந்தப் பகுதியைச் சுற்றி அமைந்திருப்பது எங்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. மாலை நேரத்தில் 5 ஆயிரம் பேர்வரை வருகிறார்கள். கிரில், பார்பக்யூ போன்றவை இங்கு பிரபலம். ஆரோக்கியமான, சுகாதாரமான உணவு வகைகளை வழங்குவதே எங்கள் இலக்கு. அதன் பொருட்டே தொடர்ச்சியாக உணவு சார்ந்த ஆய்வுகளையும் மேற்கொள்கிறோம்" என்கிறார் ஆர்டிஎஸ் உணவு வீதி உரிமையாளர்களில் ஒருவரான பிரவின் காஸ்மிர் .
ஆர்டிஎஸ் உணவு வீதியைப் பொருத்தவரை இங்கு 11.30 மணியளவில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுவிடும். தேவை இருப்பின் சில கடைகள் அதிகாலை 2 மணி வரை செயல்படுகின்றன. உணவகங்களைத் தவிர்த்து இளைஞர்களுக்கு மெய்நிகர் கேம் ஷோக்கள், ஸ்பா, பிளே மார்க்கெட் போன்றவையும் ஆர்டிஎஸ் உணவு வீதியில் இருக்கின்றன.
- அனன்யா தேசிகன், சஞ்சனா கணேஷ்
தமிழில்: இந்து குணசேகர்
(தி இந்துவில் வெளிவந்த கட்டுரை)