

பதின்ம வயதுகளில் பலர் ஏதேனும் கெட்ட பழக்கங்களுக்கு ஆட்பட்டு ஒருகட்டத்தில் அடிபட்டுத் திருந்திவிடுவார்கள். குறிப்பாக, கவிதை எழுதும் கெட்ட பழக்கம் இந்த வயதில் இயல்பாகப் பீடித்துக்கொள்ளும். கல்யாண்ஜி, கலாப்ரியா என்று வாசிப்பு வளர்ந்து, கவிதை எனும் வஸ்து புரிபட்டதும் கவுரதையாக அதைக் கைவிட்டுவிடுவார்கள்.
அப்படித் தமிழ்நாட்டில் ஒரு தசாப்தமாகவே இளைஞர்கள் சீமானின் பேச்சைக் கேட்டு ‘உட்டோப்பியன்’ அரசியல் பார்வையுடன் உலவுகிறார்கள். கொஞ்சம் அரசியல் அறிவு வந்ததும் சீமானிஸச் சிறையிலிருந்து வெளிவந்து நிஜ உலகைப் புரிந்துகொள்கிறார்கள். என்ன இடைப்பட்ட காலத்தில் செய்த செலவுக் கணக்குத்தான் எகிறியிருக்கும்.
செய்தியாளர் சந்திப்பு எனும் பெயரில் வாட்ஸ்-அப் வரலாறுகளை அள்ளிவிட்ட கட்டத்தையெல்லாம் தாண்டி, இப்போது செய்தியாளரிடமே ‘செருப்பால் அடிப்பேன்’ என்று சீமான் சீறத் தொடங்கியிருக்கும் நிலையில், அவரைப் பற்றி மனம் திறப்பது நலம் பயக்கும்!
கறிக் கதைகள்: சீமான் குறித்த விமர்சனங்களில் ஒன்று, ஆமைக் கறி உள்ளிட்ட அளவில்லாக் கற்பனைக் கதைகள் பற்றியது. அதுவும் ஈழ விடுதலைப் போரில் உணவு, உறக்கம் பற்றிய சிந்தனை இல்லாமல் போராடிக்கொண்டிருந்தவர்கள் சீமானுக்குக் காரசாரமாகக் கறி சமைத்துப் போட்டதாக அவர் விடும் கதைகள் அரசியல் உலகின் கலகலப்புகள். அதுவும், ‘விருந்து’ கதைகளைச் சொல்லும்போது, மறைந்த போராளிகள் குறித்து மருந்துக்குக்கூட வருந்தாமல் சிரித்தபடி பேசுவது சீமானின் சிறப்பம்சம்.
சினிமா உள்ளிட்ட ஊடகங்களில் பயிற்சி வேண்டும் என்பதற்காக பாரதிராஜா, மகேந்திரன் உள்ளிட்ட திரைக்கலைஞர்களை அழைத்துப் பேசிய பிரபாகரன், அவர்களில் ஒருவராகத்தான் சீமானை ஈழத்துக்கு அழைத்திருந்தார் என்று குலுங்கிச் சிரித்தபடி ராஜ்கிரண் சொன்ன ஓர் ஆதாரமே போதும்.
ஆனாலும், ஆதாரம் எனக் கேட்டுவிட்டால் சேதாரம் செய்துவிடுவார்கள் தம்பிகள் - ஆன்லைனில்தான்! பொட்டு அம்மான் குறித்த சீமானின் சொல்லாடல் அடங்கிய ஆடியோ பதிவு அதிர்ச்சி ரகம். ஆடியோவின் நம்பகத் தன்மை விவாதத்துக்குரியதுதான். ஆனாலும், வெளிநாடுவாழ் தமிழர்கள் சீமான் மீதான நம்பிக்கையை இழந்து வருவதாகவே தெரிகிறது.
மூட்டை நிறைய முரண்கள்: திராவிட இயக்கங்களைத் திட்டுவார். அதிமுகவுடன் ஒட்டுவார். எடப்பாடியைச் சித்தப்பா என்பார். சின்னம்மாவை அம்மா என்பார். ஊழல் வழக்கில் சிறையிலிருந்து மீண்டு வந்த சசிகலாவைச் சந்தித்தது குறித்துச் சிலாகிப்பார். ஆனால், ஊழலால் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது என்பார். மோடியைப் பாராட்டி மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு வாக்கு சேகரித்த கதை தனி.
என்றாலும் அவ்வப்போது மோடியைச் சாடுவார். இன்னொருபுறம் தாடி வைத்த சர்தார் மூலம் மோடியே தன்னை நாடியது குறித்து, ‘அக்னி நட்சத்திரம்’ அமலா ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாடிய கணக்காய் ‘சீமான் வரணும்’ என்று தனக்கு விரிக்கப்பட்ட சீக்ரெட் அசைன்மென்ட்டைச் சிலிர்ப்புடன் பகிர்வார். அதெல்லாம் அண்ணாமலையே அறிந்திராத அதிசயம்.
யாராக இருந்தாலும் எங்க அய்யா, எங்க தாத்தன் என்று சீமான் சொந்தம் கொண்டாடுவதால், சொத்து களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அவரவரின் வாரிசுகள் அச்சப்படுவது இயல்பு. அவர் குறிப்பிடும் நபர், புதுமைப்பித்தனின் மொழியில் சொல்ல வேண்டுமெனில், ‘உலகத்திடம் செலவு பெற்றுக்கொண்டவ’ராக இருக்க வேண்டும்.
அப்போதுதான் மறுப்பேதும் வராது. அதனால்தான், உலகப் பிரபலங்கள் காலமானால்கூட, ‘எனக்கும் சீமானுக்கும் யாதொரு சம்பந்தப் பிராப்தியும் இல்லை’ என்று உயிர் போகும் அவஸ்தையிலும் அவர்கள் உயில் எழுதிவைத்தது போன்ற மீம்கள் பறக்கின்றன.
செய்தியாளர் சந்திப்பென்றால், செய்தியாளர்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகமான ஆதரவாளர்களைப் பின்னணியில் நிற்கவைத்து ‘அலப்பறை அட்மாஸ்பியர்’ ஏற்படுத்துவது சீமானின் தனிப் பாணி. ‘நான் ஓட்டுக்கானவன் அல்ல, நாட்டுக்கானவன்’ என்று ஊரெங்கும் முழங்கிவிட்டு, தனக்கு ஓட்டுப் போடாதவர்கள் சாத்தானின் பிள்ளைகள் என்று சாடுவது சீமானின் புதிய வியூகம். அதற்கு முட்டுக்கொடுக்க சிறுபான்மையினரைச் சேர்ந்த தம்பி, தங்கைகள் பேசுகிறார்கள். அவர்கள் வசிப்பது தனி உலகம்!