திண்னைப் பேச்சு 12: கங்காளம் பாதாளக் கொலுசு ஜோடுதலை

திண்னைப் பேச்சு 12: கங்காளம் பாதாளக் கொலுசு ஜோடுதலை
Updated on
2 min read

கங்காளம், பாதாளக் கொலுசு, ஜோடுதலை மட்டுமல்ல ரயில் அடுக்கு, கச்சா உருளி, ஆனைக்குண்டான், அரிக்கஞ்சட்டி, தேக்ஸா, பாலாடை, கெண்டி, முந்திரி கூஜா, தூக்குச்சட்டி, மரஉரல், கொத்துச்சட்டி, யந்திரம், திருகை கெட்டில், மாக்கல்சட்டி, கூம்பா, ஏனம் போன்ற இன்னும் எண்ணற்ற பெயர்களை இன்றைய தலைமுறையினர் கேள்விப் பட்டிருக்கவும் மாட்டார்கள்.

இவை எல்லாம் தஞ்சை மாவட்டத்தின் முந்தைய தலைமுறையினர் காலத்தில் அன்றாடப் புழக்கத்தில் இருந்த பாத்திரங்களின் பெயர்கள். இவை இப்போது அருங்காட்சி யகத்தில்கூட இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

கங்காளம் என்பது வாயகன்ற பெரிய பாத்திரம். இரண்டு புறமும் இரண்டு பேர் தூக்கிவர வசதியாக உலோக வளையங்கள். பந்திகளில் உணவு தயாரித்து கொண்டுவர உபயோகப்படுவது. ஜோடுதலை என்பதும் ஒரு பாத்திரம்தான். ரயில் அடுக்கு என்பது ஒன்றுக்குள் ஒன்றாகப் பொருந்தும் பாத்திர அடுக்கு.

ஆனைக்குண்டான் பெரிய பாத்திரம். இதில் குளிக்க வெந்நீர் விளாவி வைப்பார்கள். முந்திரிப்பழம் போல் இருப்பதால் முந்திரிக் கூஜா. ஏந்தலான பாத்திரத்தை ஏனம் என்பார்கள். காலப்போக்கில் இந்தப் பாத்திரங்களின் இடத்துக்கு நவீனமான பொருள்கள் வந்துவிட்டதால் பொருள்களோடு சேர்ந்து அவற்றின் பெயர்களும் பேச்சு வழக்கிலிருந்து மறைந்து விட்டன.

தஞ்சாவூரா? - முன்பெல்லாம் யாராவது ‘எம்ப்ளது’ என்று சொல்லிவிட்டால் போதும், தஞ்சாவூரா என்று கிண்டலடிப்பார்கள். இப்பொழுது எம்ப்ளது என்பார் இல்லை.

மூன்று குழந்தைகள் இருந்தால் இரண்டாவ தாகப் பிறந்த ஆண் குழந்தையை ‘நடுவுலவன்’ என்றுதான் அழைப்பார்கள். பெண்ணென்றால் ‘நடாயி’.

நாடகம் என்பதை நாடவம் என்பதும் நீரா காரத்தை நீச்சத் தண்ணி என்றும் சொல்வார்கள்.

சின்னக்குட்டி நாத்துனா! - நாத்தனார் என்பதை ‘நாத்துனா’ என்பதே வழக்கம். நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதி பாடும் பழைய பாடலில், ‘சின்னக்குட்டி நாத்துனா சில்லறைய மாத்துனா குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா’ என்பதும் பேச்சுவழக்கின் நயம்காட்டி மகிழ்விக்கும் திரைப்பாடல்.

கவித்துவப் பேச்சு - நாற்று நட்ட வயல்களில் பயிர் நன்றாக முளைத்து வருவதைப் பார்த்து, ‘பச்ச புடிச்சிருக்கு’ என்பதில் உள்ள கவித்துவம் மனசை மயக்கும். மீன் வலைகளில் மாட்டி துள்ளி விழும் கெண்டை மீன்களைத் ‘துள்ளு கெண்டை’ என்பார்கள்.

ஆள் கட்டுமஸ்தானவன் என்பதைக் குறிக்க ‘ஓங்கு தாங்கா இருப்பான்’ என்பது உணர்வுபூர்வமானது. திருமண மான பெண்களைக் ‘கட்டுக்கழுத்தி’ என்பார்கள். உறவு வேண்டாம் என்பதை ‘உன் சங்காத்தமே வேண்டாம்’ என்று சொல்லி விடுவார்கள். மண்ணெண்ணெய் சீமெண்ணெய் ஆகிவிடும். சேமிப்பு செருவாடு எனப்படும்.

‘ஒவுத்திரியம்’ என்கிற சொல் உபத்திரவம் என்பதைக் குறிக்கும். ‘ஒரவணம் கெட்டுப் பேசு கிறார்’ என்றால் ஒழுங்குமுறை தவறிய பேச்சு என்று பொருள். இதமாக இருக்கிறது என்பதை ‘ஒணக்கையாக இருக்கு’ என்பார்கள்.

மேப்படியான்: ஒரு வேலையை நேர்த்தியாகச் செய்துவிட்டால், ‘நறுவிசாகச் செய்துவிட்டாயே’ என்று பாராட்டு வார்கள். ஒரு விஷயத்தில் தனக்குப் பாத்தியதை இல்லை என்பதை ‘அக்குசு’ என்பார்கள். யாராவது தன் வரம்பை மீறி எதிர்த்துப் பேசினால் ‘மேக்கரிச்சுப் பேசாதே’ என்பார்கள். So and So என்று ஆங்கிலத்தில் சொல்வதற்கு, மேப்படியான் என்று சொல்வது எப்படி அழகாகப் பொருந்துகிறது!

‘மேலும் சொல்’ என்பதை ‘மேக்கொண்டு சொல்லு’ என்பதும் மறுநாள் என்பதை ‘மைக்கா நாள்’ என்று சொல்வதும் வழக்கம். முடியும் வரை என்பதை ‘முடியுந்தண்டி’ என்பார்கள்.

ராத்திரிக்கு வருகிறேன் என்பதை ‘ரவை’க்கு வருகிறேன் என்பார்கள். யோசனை அல்ல ‘ரோசனை’. மழைவிட்டு விலகிய வானத்தைப் பார்த்து, ‘வானம் வெக்காளித்துவிட்டது’ என்பது தஞ்சைக்கே உரிய அழகிய சொல்லாட்சி. வீடுகளில் அடம் செய்யும் குழந்தைகளை, ‘அசமடக்கிட்டு வர்றேன்’ என்பது தஞ்சை மகளிரின் வழக்கு.

பாதாளக் கொலுசு: இதற்குப் பாதாளக் கரண்டி என்றும் பெயர். தெருவில் யாராவது ஒருவர் வீட்டில்தான் பாதாளக் கொலுசு இருக்கும். கிணற்றுக்குள் ஏதாவது பொருள் விழுந்துவிட்டால் கூரான கொக்கிகளுடன் நீருக்குள் மூழ்கும் பாதாளக் கொலுசு அப்படியே அந்தப் பொருளைக் கவ்வி எடுத்து வந்துவிடும்.

தமிழ் வேடம் தரித்த ஆங்கிலம்: ஆங்கிலச் சொற்கள் பல தமிழ் வேடம் தரித்து உலவுவதைத் தஞ்சை கிராமங்களில் காணலாம். அவற்றுக்கு இணையான ஆங்கிலச் சொற்கள் எது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

அருச்சண்டு, ஷாப்புக்கடை, வேங்கு (Bank) ராக்கெட்டு (டிராக்டர்) சுசட்டி, (Society) ஏராப்ளம், ஈச்சரு (ஈஸிசேர்) ஈ.வோ., கலட்டரு, துப்பட்டி கலட்டரு (Deputy Collector) எம்ச்சார், (MGR) கரண்டாபீஸ், பூதரமாவு (முகப்பவுடர்) என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

வண்டல் இலக்கியம்: அனாதி காலம் தொட்டு ஓடிவரும் பேராற்றின் புனல்வெளியில் உருண்டோடி பாறைகளும் கூழாங்கற்களாக ஆகிவிடுவதுபோல மக்களின் வாயில் தலைமுறை தலைமுறையாகப் புழங்கிவரும், புரண்டுவரும் சொற்களும் உருமாறி வழுவழுப்பாக ஆகிவிட்ட வார்த்தைக் கூழாங்கற்களே பேச்சுமொழி.

பேச்சுத்தமிழ் என்பது தமிழகத்தில் உள்ள அந்தந்த மாவட்டங்களின் பண்பாட்டு விளைச்சல் என்பதில் ஐயமில்லை. பல மாவட்டங்களுக்கும் வட்டார வழக்குச் சொல் அகராதிகள் வந்துவிட்டன. தஞ்சைக்கு இப்படி ஓர் அகராதி இல்லாத குறையை மறைந்த எழுத்தாளர், ‘நெற்களஞ்சியத்தின் சொற்களஞ்சியம்’ என்கிற தமது சிறிய நூலின் மூலம் போக்கிவைத்தவர் மன்னார்குடி ப.பரிதிபாண்டியன். தஞ்சை பேச்சுவழக்குச் சொற்களைத் திரட்டும் பெரும் பணியின் முன்னோடி. அவர் இதனைத் தொடர முடியாதபடி அகால மரணம் குறுக்கிட்டுவிட்டது.

நெற்களஞ்சியங்கள் காலியாகக் கிடப்பதைப் போல் சொற்களஞ்சியமும் காலியாகிக் கொண்டிருக்கிறது. திரும்பப் பெறவே முடியாத பண்பாட்டு விதை நெற்களான சொற்கள் பலவும் தினசரிப் பயன்பாட்டிலிருந்து மறைந்து வருகின்றன. ஆம், காவிரி வண்டல் இலக்கியம் வழக்கொழிந்து வருகிறது. அது முற்றிலுமாக அருகி மறைவதற்குள் அதனைத் தொகுக்கும் பெரும்பணியினைத் தொடங்கியாக வேண்டும்.

(பேச்சு தொடரும்)

- thanjavurkavirayar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in