

பயணங்கள் எல்லாம் சுவாரசிய மானவைதான் என்றாலும் என் முதல் ‘சோலோ ட்ரிப்’ வாழ்நாள் அனுபவமாகத் தங்கிவிட்டது. அந்தப் பயணம் என் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் அழகான மாற்றத்தைக் கொண்டுவந்தது.
தோழி ஒருவர் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள வேலி ஆஃப் ஃபிளவர்ஸ்க்குச் செல்ல இருப்பதாகச் சொன்னார். அது என் நீண்ட காலக் கனவு என்பதால் நானும் வருகிறேன் என்றேன். 13 நாள்களுக்கு எங்கள் பயணத்தைத் திட்டமிட்டு, பயணச் சீட்டை எடுத்துவிட்டோம்.
வீட்டில் உதவியாளர் ஒருவர், நான் இல்லாதபோது என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார். அந்த நம்பிக்கையில்தான் பயணத்தைத் திட்டமிட்டேன். உத்தராகண்ட் புறப்படுவதற்கு மூன்று நாள்களுக்கு முன், தன் அம்மாவுக்கு உடல்நலக் குறைவு என்று உதவியாளர் 15 நாள்கள் விடுப்பு எடுத்துக்கொண்டார். இடி விழுந்தது போலிருந்தது. அடுத்த இடி, தவிர்க்க இயலாத சூழ்நிலையில் தன் பயணத்தை ரத்து செய்துவிட்டார் தோழி.
இதுவரை தனியாகப் பயணம் செய்த தில்லை. இப்போது பயணத்தைத் தொடர் வதா, ரத்து செய்வதா என்கிற குழப்பம் எனக்கு. வீட்டில் புதிதாக உதவிக்கு ஒருவரை நியமித்தேன். ஆனால், அவர் நன்றாகக் கவனித்து கொள்வாரா? குழந்தைகள் எப்படிப் பள்ளிக்குச் செல் வார்கள்? தனியாகப் பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்குமா? அறிமுகமில்லாத நபர்களுடன் எப்படி 13 நாள்களைக் கழிக்க முடியும் என்றெல்லாம் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.
நீண்ட யோசனைக்குப் பின், முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். நான் இல்லாமல் வீட்டில் எப்படிச் சமாளிக்கிறார்கள், புதிய மனிதர்களுடன் நான் எப்படிச் சமாளிக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக நினைத்தேன். உடனே புறப்பட்டுவிட்டேன்.
ரிஷிகேஷை அடைந்ததும் வீட்டில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டேன். “அம்மா. நீங்க ஜாலியாகப் போயிட்டு வாங்க, நாங்க பார்த்துக்கறோம்” என்று பிள்ளைகள் உற்சாகமாகச் சொன்னார்கள். அப்படியும் எனக்குள் ஒரு குற்ற உணர்வு தோன்றியது.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, 23 நபர்களுடன் பயணம் ஆரம்பித்தது. பயணத்தின் இரண்டாம் நாள், மலைப் பாதையில் 11 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடக்க வேண்டும். சீராக இல்லாத அந்த மலைப் பாதையில் ஆறுகள், சிறு நீரோடைகள், கொடிகள், பசுமையான மரங்கள், பறவைகள் என இயற்கை இயல்பு மாறாமல் காட்சியளித்ததைக் கண்டு என் பயம், தயக்கம் எல்லாம் விடைபெற்றுச் செல்ல ஆரம்பித்தன. அங்கேதான் இயற்கையின் ஆகச் சிறந்த படைப்பான மனிதர்களின் மாண்பையும் புரிந்துகொண்டேன்.
அந்த நடைப்பயணம் முழுவதும் யாராவது ஒருவர் என்னோடு பேசிக் கொண்டு துணையாக நடந்து வந்தார்கள். அக்கறை யோடு கவனித்துக் கொண்டார்கள். உதவி என்றதும் ஓடிவந்தார்கள். ஆண்கள், பெண்கள், எங்கள் குழுவில் உள்ளவர்கள், வேறு குழுவைச் சேர்ந்தவர்கள், என்னைப் போல் தனியாகப் பயணம் செய்பவர்கள் என அந்த நடைப் பயணத்தின்போது ஏராளமானவர்களைச் சந்தித்தேன்.
அவர்களின் பேச்சு மிகக் கண்ணியமாகவும் உளப்பூர்வமாகவும் இருந்தது. உரையாடல்கள் ஒவ்வொன்றும் நம்பிக்கையும் பாதுகாப்பான உணர்வையும் தந்தன. மூன்றாம் நாளிலிருந்து பயணம் சிறப்பாகவும் சந்தோஷமாகவும் அமைந்தது.
13 நாள்கள் ஓடிவிட்டன. வீடு திரும்பினேன். குழந்தைகள் எப்படிச் சமாளித்தார்களோ என்கிற கவலை மீண்டும் ஒட்டிக்கொண்டது. ஆனால், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களை அழைத்த போது, “வாங்க அம்மா, இதோ இந்த விளையாட்டை முடித்து விட்டு வருகிறோம்” என்றார்கள். இதைக் கேட்டு எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.
சிறிது நேரத்தில் இருவரும் வந்தனர். “அம்மா, நீங்கள் இல்லாமல் சில நேரம் ஒரு மாதிரியிருந்தது. மற்றபடி பரவாயில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்களா?” என்று கேட்டார்கள்.
தாய்மை, பொறுப்பு என்கிற பெயரில் என்னை நெருக்கிக்கொண்டிருந்த குற்ற உணர்வு கரைவதை உணர்ந்தேன். 2018இல் நான் மேற்கொண்ட இந்தப் பயணம் என் வாழ்வில், ஒரு திருப்பு முனையாக அமைந்தது. எனக்கு இரண்டு முக்கியப் பாடங்களைத் தந்தது.
ஒன்று, இந்த உலகம் நான் நினைத்துக்கொண்டிருக்கும் அளவிற்கு மோசமானதல்ல, பாதுகாப்பான தாகவே இருக்கிறது. இரண்டு, யாராவது இந்த உலகை விட்டுச் சென்றால், அதற்காக இந்த உலகம், தான் சுற்றுவதை நிறுத்திக் கொள்வதில்லை. அது போலதான் என் வீடும். நான் இல்லாவிட்டாலும் இயங்கும்.
எனவே நம் விருப்பங்களுக்கு முன்னுரிமை தரலாம். நமக்குப் பிடித்ததைச் செய்யும்போது வரும் குற்ற உணர்வை ஒதுக்கிவைக்கலாம்.