

பத்து ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்துவந்த தமிழ்நாட்டின் பாரம்பரியப் பட்டுப் புடவைகள்கூட இன்று எளிதாகக் கிடைப்பதில்லை. ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்த, அழிந்து போன பாரம்பரியம் மிக்க புடவைகளை மீளுருவாக்கம் செய்துவருகிறார் காயத்ரி. தஞ்சாவூர் ராணி கட்டிய புடவையிலிருந்து பிரிட்டிஷ் பெண்கள் உடுத்திய கவுன் வரை வரலாற்றை மீட்டு, நிகழ்காலத்துக்குக் கொண்டுவருகிறார். இதற்காக ‘யாத்ரி வீவ்ஸ்’ என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறார்.
காணாமல்போன கொனியா புட்டா, குட்டனி பார்டர், சூசி பார்டர், கருங்கன்னி பருத்தி, தர்மாவரம் உள்ளிட்ட பல புடவைகளை மீளுருவாக்கம் செய்திருக்கிறார் காயத்ரி.
“எனக்கு இது பகுதி நேரப் பணிதான். நம் முன்னோர்களின் பாரம்பரியம் மிக்க புடவைகளின் மீது இருந்த ஆர்வமும் மதிப்பும் காரணமாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். ஆங்கிலேயர்கள் ஆவணப்படுத்திய புடவை களில் இருந்துதான் மீளுருவாக்கம் செய்கிறேன். இப்படி ஆவணப்படுத்தாமல் நாம் எத்தனையோ வகை நெசவு முறைகளை இழந்து விட்டோம் என்பதை அறிந்தபோதுதான் எனக்கு மீளுருவாக்கத்தின் முக்கியத்துவம் புரிந்தது.
நம் முன்னோர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள இந்த மீளுருவாக்கம் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. ஒவ்வொரு மீளுரு வாக்கத்தையும் தொடங்கும் முன்பு, ‘நான் இதைச் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்’ என்று என் வழிகாட்டி சொன்னதை நினைத்துக்கொள்வேன்” என்று காயத்ரி சொல்லும்போது இந்தப் பணியின் முக்கியத்துவம் புரிகிறது.
நாட்டுப் பருத்தியில் தயாரிக்கப்படும் துணிகளின் ரசிகையான காயத்ரிக்குப் பிடித்தது பொன்டுரு பருத்தி. இது காந்திக்கு விருப்பமான காதி. கொண்டப்பட்டி, எர்ரப்பட்டி என இரண்டு வகைப் பருத்திகள் பொன்டுருவில் பயன்படுத்தப்படுகின்றன. பழுப்பு நிறத்தில் இருக்கும் எர்ரப்பட்டி பஞ்சில் நெய்யப்படும் ஆடை, சாயம் ஏற்றாமலே வெளிர் சிவப்பு அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மென்மையான இந்தப் பருத்தி, துவைக்கத் துவைக்க மேலும் மென்மையாகும்.
“ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த பிறகே நீண்ட நிலைப்புத் தன்மைகொண்ட பருத்தியில் இருந்து நூல் எடுக்கும் இயந்திரங்கள் இந்தியாவுக்கு அறிமுகமாயின. இந்த நாட்டுப் பருத்தியைப் பயிரிடுவதே இப்போது அரிதாகிவிட்டது. பொன்டுருவில் நாட்டுப் பருத்தியைப் பயன்படுத்தி இன்றும் பழங்கால முறையில் நெசவு நடக்கிறது. நிறைய இடங்களில் அம்பர் சர்க்கா எனப்படும் இயந்திரம் கொண்டு காதி நெசவு செய்கிறார்கள்.
“பருத்தியில் உள்ள விதைகளையும் அழுக்குகளையும் சுத்தம் செய்வதுதான் முதல் வேலை. இதற்கு அந்த ஊர்க் குளத்தில் கிடைக்கும் வலவு மீனின் தாடை எலும்புகளைக் கொண்டு சீப்பு போன்ற கருவியை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் சீவிப் பஞ்சைத் தூய்மைப்படுத்துகிறார்கள்.
சுத்தம் செய்த பஞ்சைத் தட்டித் தட்டையாக்க வேண்டும். இதன் மூலம் பஞ்சு நன்றாக விரிந்து நூல் நூற்க ஏதுவாக மாறும். இதை வாழை மட்டையில் சுருட்டி நூலாகத் திரிப்பார்கள். வார்ப்பு, வெஃப்ட் இரண்டுக்கும் ஏற்ற வகையில் இதை நூலாகத் திரிக்க வேண்டும்.
“இந்த நூலைக் கஞ்சியில் இட்டு, தெருவில் காயவைப்பார்கள். அதிக வெயில் பட்டால் நூல் அறுந்துவிடும். மூன்று அல்லது ஆறு புடவை என்று கணக்கு வைத்துத் தேவைக்கேற்றபடி வார்ப்பிங் ட்ரம்மில் நூலைச் சுற்றுவார்கள். பிறகு ஒவ்வொரு நூலாகத் தறியில் இணைக்கும் வேலையைப் பெரும்பாலும் பெண்களே செய்வார்கள்.
நான்காயிரத்தில் இருந்து ஐயாயிரம் நூல்களை அரை நாளில் புனைந்துவிடுவார்கள். அடுத்து வெஃப்ட்டுக்கு இன்னொரு சர்க்காவில் தார்க்குச்சியில் சுற்றி, ஷட்டிலில் போட்டு நெய்யத் தொடங்குவார்கள். இவை அனைத்துக்கும் 15 பேருக்கு மேல் வேலை செய்ய வேண்டும். வேலை முடிய சுமார் 20 நாள்கள் ஆகும்” என்கிறார் காயத்ரி.
இவ்வளவு உழைப்பைக் கோரும் புடவை என்பதால், சில ஆயிரங்களில் இருந்துதான் தொடங்குகிறது மீளுருவாக்கப் புடவைகளின் விலை. பட்டுப் புடவை அதன் சரிகைத் தரத்துக்கு ஏற்ப இன்னும் கூடுதல் விலையில் இருக்கும். இதன் மதிப்பை உணர்ந்த வாடிக்கையாளர்கள் கிடைப்பது குறித்து மகிழ்ச்சி கொள்கிறார் காயத்ரி.
“புதிய மீளுருவாக்கப் புடவை பற்றிய அறிவிப்பை இன்ஸ்டகிராமில் வெளியிட்டதும் முன்பதிவு செய்துவிடுகிறார்கள். புடவை அவர்கள் கையில் கிடைத்து, அதைக் கட்டிப் பார்க்க ஆறுமாத காலம் ஆகிவிடும். என்றாலும் வரவேற்பு பலமாக இருக்கிறது. கோ ஆப் டெக்ஸ் மூலம் பல பாரம்பரிய நெசவினை ஊக்குவிக்கும் அரசு, இன்னும் நிறைய விளம்பரம் செய்தால் இப்படி ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்களைச் சென்றடையலாம்.
எதிர்காலத்தில் இயற்கைச் சாயம் தோய்த்த புடவைகளை உருவாக்குதல், பட்டுப்புழுவைக் கொல்லாமல் கிழிந்த கூட்டை வைத்து எரி சில்க் தயாரிப்பதைப் போன்று சூழலைச் சீர்குலைக்காத பணி களிலும் ஆர்வம் இருக்கிறது” என்கிறார் காயத்ரி.