

`நானொரு சிந்து காவடிச் சிந்து' என்று மெலடியையும் பாடமுடியும், `மானாமதுர மாமரக் கிளையிலே வூவூ... லலலா' என்று உச்ச ஸ்தாயியிலும் பாடமுடியும். அவர்தான் கே.எஸ்.சித்ரா. இசையமைப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய பாடகியாக ரசிகர்களின் மனதில் கடந்த 40 ஆண்டுகளாக இடம்பிடித்திருப்பவர்.
ஏறக்குறைய 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் சித்ராவை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுப் பெண்ணாகக் கொண்டாடுவதுதான் அவர் பெற்ற அங்கீகாரங்களில் மிகவும் சிறப்பானது. அதனால்தான் 90களில் பிறந்த தங்களின் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு (சில ஆண் குழந்தைகளுக்கும்) `சித்ரா' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். இன்றைய குழந்தைகள், ‘சித்ரா அம்மா’ என்றே அவரை அன்போடு அழைக்கிறார்கள்.
இசையின் மீது உள்ள ஆர்வத்தால் இசை ஆசிரியர் ஆகவேண்டும் என்று நினைத்தவர் சித்ரா. தொடக்கத்தில் திருவனந்தபுரம் வானொலி நிலையத்தில் சேர்ந்திசைப் பாடல்களைப் பாடினார். இயக்குநர் ஃபாசில் மலையாளத்தில் எடுத்த திரைப்படத்தை தமிழிலும் ‘பூவே பூச்சூடவா' என்கிற பெயரில் உருவாக்கினார்.
அந்தப் படத்திற்கு இசையமைத்த இளையராஜா, மலையாளத்தில் நதியாவுக்குப் பின்னணி பாடியிருக்கும் பெண்ணையே தமிழிலும் பாடவைக்கலாம் என்று முடிவெடுத்தார். அதில் சித்ரா பாடிய, `சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதா' இன்றைக்கும் தமிழ் நெஞ்சங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணி ஜெயராமுக்குப் பிறகு பாடலுக்கான முழுமையான இசைக் குறிப்புகளை எழுதிக் கொண்டு பாடுபவர் சித்ராதான். அதனால் அவரின் பாடலில் ஸ்ருதி சுத்தம், உச்சரிப்பு சுத்தம் பரிபூரணமாக இருக்கும். இந்த நுட்பம் கனகச்சிதமாக `பம்பாய்' திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடிய ‘கண்ணாளனே’ பாடலில் வெளிப்படும். `தி கார்டியன்' தொகுத்திருந்த `நீங்கள் அவசியம் கேட்க வேண்டிய 1000 பாடல்கள்' தொகுப்பில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது.
சித்ராவுக்குக் கிடைத்த ஆறு தேசிய விருதுகளில் மூன்று, தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியதற்காகக் கிடைத்தவை. எட்டு முறை ஃபிலிம்பேர் விருது. தென்னிந்தியாவின் நான்கு மாநிலத் திரைப்பட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ (2005), பத்மபூஷண் (2021) சித்ராவின் இசைச் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன. யுனைடெட் அரபு எமிரேட்ஸின் சுல்தான் முகம்மது அல் குவாஸிமி விருதை அவரின் 40 ஆண்டு திரைப்பட இசைத் துறை பங்களிப்புக்காகப் பெற்றிருக்கிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் ஜனாதிபதி விருதை 2018இல் இசைத் துறையில் பெற்றிருக்கும் முதல் பாடகி சித்ராதான். சத்யபாமா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவை சித்ராவுக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியிருக்கின்றன. தென்னிந்தியப் பாடகிகளில் லண்டன் ராயல் ஆல்பர்ட் அரங்கத்தில் பாடியிருக்கும் பாடகி என்னும் பெருமையும் சித்ராவுக்கு உண்டு.
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, “கே.எஸ்.சித்ரா கேரளத்தின் வரம்” என்று பாராட்டியிருக்கிறார். ஆனால், சித்ரா தென்னிந்தியாவின் வரம் அல்லவா!