

டெல்லியில் முன்பு நாங்கள் தங்கியிருந்த முனிர்கா பகுதிக்குச் சில நாள்களுக்கு முன்னர் சென்றிருந்த நண்பர் மணிகண்டன், அங்கிருந்து வீடியோ காலில் பேசினார். வீடுகளும் கடைகளும் அடர்த்தியாக நிறைந்திருக்கும் முனிர்கா வீதிகள், 15 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்ததிலிருந்து அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை. மழை தொடங்கியிருந்ததால் வீதிகளில் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருந்தது. மிகப் பெரிய வித்தியாசம், ‘மணிப்புரி’ எனப் பொதுப்பெயரில் அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலத்தவரை இங்குள்ள கடைகளில் அதிகம் பார்க்க முடிந்ததுதான். வாடிக்கையாளர்களாக மட்டும் அல்ல; உரிமையாளர்களாக, பணியாளர்களாக இப்போதெல்லாம் அவர்களே அதிகம் என்றார் மணிகண்டன்.
மோமோஸைப் பரப்பியவர்கள்: தமிழர்கள், மலையாளிகள் ஆகியோருடன் வடகிழக்கிந்தியர்களும் அதிகம் வசிக்கும் பகுதி என்பதுதான் முனிர்காவின் தனிச்சிறப்பு. தென்னிந்திய, வடகிழக்கிந்திய உணவகங்கள், குறிப்பாக மெஸ்கள் இங்கு தனிச்சுவை கொண்டவை. ‘குங்ஃபூ பாண்டா’ படத்தில் பாண்டாவுக்குக் குறுக்கு வழியில் குங்ஃபூ கற்றுக்கொடுக்க மாஸ்டர் ஷிஃபு பயன்படுத்தும் உணவுப் பண்டத்தைப் பலர் பார்த்திருப்பீர்கள்.
சிலர் சுவைத்திருப்பீர்கள். இந்தியாவில் ‘மோமோஸ்’ என்று அழைக்கப்படும் அப்பண்டம் இப்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிடைக்கிறது. டெல்லியில் மோமோஸைப் பிரபலப்படுத்தியவர்கள் வடகிழக்கிந்தியர்கள்தாம். மங்கோலிய முகச் சாயல் கொண்ட நம் இந்தியச் சகோதரர்கள், முனிர்காவின் மூலைமுடுக்கெல்லாம் சிறிய ஸ்டவ் வைத்து மோமோஸ் அவித்து விற்பார்கள். ரத்தச் சிவப்பு நிறக் காரச் சட்னியுடன் அதைத் தொட்டுச் சுவைத்தால், உடலில் ஓடும் நரம்புகள் அனைத்தும் மனக்கண்ணில் ஒருகணம் தோன்றி மறையும்.
மணிப்புரிகளில் பலர் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள். சுறுசுறுப்பானவர்கள். நட்புடன் பழகக்கூடியவர்கள். டெல்லி பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள். கால் சென்டர் ஊழியர் முதல் கல்லூரிப் பேராசிரியர்கள் வரை பல்வேறு துறைகளில் பணிபுரிகிறார்கள்.
இழிவும் துணிவும்: அதேவேளையில், ‘சீனி’ அல்லது ‘சிங்கி’ என்று அவர்களை இகழ்வாக விளிப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். சீனத் தோற்றம் கொண்ட வடகிழக்கிந்தியர்களை இந்தியர்களாக ஏற்பதில் உள்ள புரிதலின்மையின் வெளிப்பாடு அது. மணிப்புரிகளின், குறிப்பாகப் பெண்கள் அணியும் நவநாகரிக ஆடைகள் தென்னிந்தியாவிலிருந்து செல்லும் இளைஞர்களுக்குக் கலாச்சார அதிர்ச்சி அளிக்கக்கூடியவை.
மணிப்புரி பெண்களிடம் அபாரமான சுயமரியாதையும் தற்காப்புணர்வும் உண்டு. பணியை முடித்துவிட்டு நள்ளிரவைத் தாண்டியும் அறைக்குத் திரும்பும் அவர்களிடம் அச்ச உணர்வே இருக்காது. ஹோலி கொண்டாட்டத்தின்போது ‘பாங்’ போதையில் நடமாடும் ஆண்கள் கூட்டத்துக்கு நடுவே பணியிடங்களுக்குத் துணிச்சலாக நடந்து செல்வார்கள். இதனால், பல நேரத்தில் குற்றச்செயல்களுக்கு இலக்காவதும் உண்டு. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆண்களும் பெண்களும் குழுக்களாக இணைந்தே வசிப்பார்கள். பிற மாநிலத்தவர்கள் அதைத் தவறாகப் பார்ப்பதும் உண்டு.
மறைந்த புன்னகை: பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட வடகிழக்கின் மக்களுக்காகக் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பல தசாப்தங்களாகவே அரசு அக்கறை காட்டுகிறது. போக்குவரத்து வசதிகள் இல்லாத மலைப் பகுதிகளிலிருந்து வந்து தலைநகரில் தங்கள் வாழ்க்கைத் தேடுதலைத் தொடர்கிறார்கள். அவர்களுக்கு இடையே இனக்குழு சார்ந்த பிணக்குகள் இருந்தாலும் பெருநகரங்களில் வாழும்போது, பிணக்குகளின் எல்லைகள் மறைந்து அவர்களுக்குள் ஓர்மை ஏற்படுவதைக் கவனித்திருக்கிறேன்.
என்னுடன் பணிபுரிந்த நவ்பா எனும் மணிப்பூர் இளைஞன் எப்போதும் முகத்தில் புன்னகை தரித்திருப்பான். வேலை பார்த்துக்கொண்டே மேல் படிப்பையும் தொடர்ந்தான். 2008இல் நடந்த மும்பை தாக்குதல்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, “அண்ணா, சக மனிதர்களை இப்படி இரக்கமின்றிக் கொல்ல எப்படி அவர்களுக்கு மனம் வந்தது?” என்று முகம் சிவக்கக் கேட்டான். அந்த ஒரு தருணத்தில் மட்டும் அவன் முகத்திலிருந்து புன்னகை மறைந்திருந்தது.