

செக். குடியரசில் உள்ள பில்சனில் பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 55 நாடுகளைச் சேர்ந்த 250 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 16 வயது ஷீதல் தேவி, தான் கலந்துகொண்ட முதல் சர்வதேசப் போட்டியில் 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார்!
ஜம்மு காஷ்மீரில் உள்ள லோய் தார் கிராமத்தைச் சேர்ந்த ஷீதல் தேவி, கைகள் இன்றிப் பிறந்தார். அப்பா விவசாயி. அம்மா ஆடு மேய்ப்பவர். மிக ஏழ்மையான குடும்பம். இரண்டு கைகளும் இல்லாமல், சிறிய விஷயத்துக்கும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் வாழ்க்கை மிகவும் கடினமானது.
ஆனாலும் ஷீதல் மிகவும் தன்னம்பிக்கை மிகுந்த பெண்ணாகத் திகழ்ந்தார். ராணுவ அதிகாரி ஒருவர் ஷீதலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, வில்வித்தை அகாடமியில் சேர்த்துவிட்டார். அதற்குப் பிறகு ஷீதலின் வாழ்க்கை முன்னேற்றத்தைக் கண்டது.
கைகள் இல்லாத ஷீதலுக்காகக் கால்களால் இயக்கக்கூடிய வில்லும் அம்பும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. உலக அளவில் கைகள் இன்றிக் கால்களால் வில்லை இயக்கும் முதல் பெண் என்கிற சிறப்பையும் பெற்றார் ஷீதல். ஆறே மாதங்களில் வில்வித்தையில் சிறந்த வீராங்கனையாக உருவானார்.
இதன் மூலம் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது உலகம் முழுவதும் கால்களால் வில்வித்தையில் ஈடுபடும் வீரர்கள் ஆறு பேர் இருக்கிறார்கள். இவர்களுடன் போட்டியிட்டு, 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் ஷீதல் தேவி.
ஷீதலின் பயிற்சியாளர் குல்தீப், “கால்களால் வில்லைப் பிடித்து, அம்பை எய்வது அவ்வளவு எளிதானது அல்ல. சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் மட்டுமே இதைச் செய்ய இயலும். ஷீதலிடம் அந்த எண்ணம் அதிகம் இருந்ததால், வெகு விரைவில் ஒரு வீராங்கனையாக உருவாகிவிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த கைகள் இல்லாத வில்வித்தை வீரரின் வீடியோக்களை அடிக்கடி போட்டுக் காட்டியது ஷீதலுக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்கிறார்.
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்றதன் மூலம், பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு ஷீதலுக்குக் கிடைத்திருக்கிறது. நாட்டுக்காகப் பல பதக்கங்கள் ஷீதல் தேவி மூலம் கிடைக்கவிருக்கின்றன.