

வங்கி தொழிற்சங்க வாழ்க்கையில் எத்தனையோ விதமான அனுபவங்கள் உண்டு. கடைநிலை ஊழியர்கள் என்று அழைக்கப்படும் எளிய தோழர்களின் தொழிற்சங்க விசுவாசமும் தனிப்பட்ட நட்பும் விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அதிலும் தூய்மைப் பணியாளர்கள் கிளையில் பணிபுரிவோருக்கு ஆற்றிய சேவை அவர்கள் பணியைப் போன்றே தூய்மையானது.
சிற்றூர்களில் இளம் ஊழியர்கள் பணிக்குச் செல்கையில் ஒரு தாயைப் போல் அரவணைக்கும் கைகள் அவர்களுடையவை. மாத ஊதியம் அறுபது ரூபாய், வெளியே இருந்து தண்ணீர் எடுத்துவர பதினைந்து ரூபாய் என்று பணிக்கு அமர்த்தப்பட்ட காலம் ஒன்று உண்டு. புதிய நியமனமாகப் பணியில் சேரும் இளம் எழுத்தர்கள், அதிகாரிகள் உள்ளூரில் வீடு பிடித்துத் தங்கி, சாப்பாட்டுக்குச் சிரமப்படுகையில் இந்தப் பெண்கள் அவர்களுக்குச் சமைத்துப் போடவும் செய்வார்கள்.
ஊரில் இன்னார் இன்னார் இப்படி என்று இளம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை மணியும் அடித்து வைப்பார்கள். மேலாளர்களும் அறியாத நபர்களுக்குக் கடன் கொடுக்கும் முன், கடைநிலை ஊழியர்கள் போகிற போக்கில் சொல்லிப்போகும் கருத்துகளையும் பரிசீலனையில் எடுத்துக்கொள்வதுண்டு. வங்கி அலுவலகத்தில் வேலையே கவனமாக மற்றவர்கள் இருக்கையில், இவர்கள் பாதுகாப்பு அரணாக இருப்பதையும் பல நிகழ்வுகள் எடுத்துச் சொல்லும்.
தொழிற்சங்க இயக்கப் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் பலரையும் மறக்க முடியாது. இருவர் எப்போதும் நினைவில் இருப்பர். ஒருவர் சரோஜா அம்மாள். அதிரடிப் பெண்மணி அவர். எப்படி இப்படி வீர மங்கையாக இருக்கிறீர்களே என்று ஒருமுறை கேட்க, அவரது வாழ்க்கை சிலிர்க்க வைத்தது.
கிராமத்தில் தங்கள் பெற்றோரை ஆண் பிள்ளைகள் கைவிட்டுப் போனதும் அவர்களுக்கு உற்ற துணையாக இளம் வயதிலிருந்தே பார்த்துக் கொண்டவர், தந்தை இறந்தபோது சொத்துக்காக இறுதிக் காரியம் செய்ய மட்டும் வந்து நின்றவர் களை விரட்டிவிட்டுத் துணிந்து நின்று தானே கொள்ளி போட்டவர்.
மற்றொருவர் சரஸ்வதி. வங்கிக் கிளையின் சதுரப் பரப்பளவு கணக்கில் கொள்ளாமல் நாள் கூலி கொடுத்துத் தற்காலிகப் பணியில் வேலை வாங்கப்பட்டு வந்தது அறிந்து சங்கத்திலிருந்து கடிதம் எழுதினோம். தொழில் ஆணையர் முன்பாகத் தொழிற்தகராறு சட்டத்தின்படி தொழிற்தாவா எழுப்பினோம். இது நடந்தது தொண்ணூறுகளின் முற்பகுதி.
அவரைப் பணி நிரந்தரம் செய்ய வைத்து, முறைப்படியான ஊதியம் வழங்கவும், முந்தைய பணிக்காலத்திற்குமான ஊதிய நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கவும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டு, தாவா சுமுகமான முடிவுக்குவந்தது. அரியர்ஸ் பணம் 55 ஆயிரம் ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டது. அப்படியான ஒரு தொகையை அவர் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அடுத்த வாரம் சங்க அலுவலகத்திற்கு ஒரு டிமாண்ட் டிராஃப்ட் வந்தது. தோழர் சரஸ்வதி மூவாயிரம் ரூபாய் சங்கத்திற்கு நன்கொடை அனுப்பி இருந்தார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பொதுவாக ஒரு தொழிற்சங்கம் தனது உறுப்பினர்களிடம் நன்கொடை கேட்டுப் பெறுவதும், ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடும் நேரத்தில் நன்கொடை கேட்டுச் சுற்றறிக்கை அனுப்புவதும் வழக்கம்தான் என்றாலும், ஓர் எளிய தூய்மைப் பணியாளருக்கு அவருக்கு உரிய ஊதியம் பின் தேதியிட்டுத் தரப்பட்டது அவருக்கானது, அதில் இந்த அளவு நன்கொடை அதீதமானது என்று சங்கத் தலைமையில் இருந்த நிர்வாகிகள் பேசிக்கொண்டோம்.
அவருக்கு உறுத்தி விடாது, உணர்வுகளை எந்த விதத்திலும் புண்படுத்தாது அந்த டிராஃப்டை இணைத்து மிகவும் பக்குவமாக ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி வைத்தோம். எங்கள் கடிதம் போன வேகத்தில் அவரிடமிருந்து பதில் கடிதம் வந்தது, 'எனக்கு குலதெய்வம் மாரியாத்தா. அவளுக்கு மூவாயிரம் காணிக்கை கோயிலில் கொண்டு செலுத்தி விட்டேன். அதை ஆத்தா ஏத்துக்கிட்டா. எனக்கு இன்னொரு குலதெய்வம் சங்கம்தான். திருப்பி அனுப்ப உங்களுக்கு உரிமை இல்லை.'
எப்பேற்பட்ட மனிதர்கள்! எத்தனை உன்னதமான உணர்வுகள்! அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்கு இன்னும் உறுதியாகத் தயார்ப்படுத்தும் அனுபவங்கள்!