

ரயில்களில் இரண்டாம் வகுப்பு சாதாரணப் பெட்டிகள் குறைக்கப்பட்டு, குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் அதிகரிக்கப்படும் காலம் இது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘வந்தே பாரத்’ செய்திகள் தாம். என்னதான் குளுகுளுவென இருந்தாலும், சாதாப் பெட்டிகள் தரும் சுகானுபவத்தைக் குளிர்சாதனப் பெட்டிகளால் சமன்செய்துவிட முடியாது. குறிப்பாக, அலைபேசி, திறன்பேசி என அறிவியல் சாதனங்கள் மூலம் புறம்பேசும் பழக்கம் பரவலாவதற்கு முன்பான ரயில் பயணங்கள் அலாதியானவை.
பயண அந்தஸ்து: எந்தக் காலமானாலும் குளிர்சாதனப் பெட்டி என்றாலே அதில் பயணிப்பவர்களுக்குக் குஷாலான அந்தஸ்து வந்துவிடும் போலும். பிறந்ததிலிருந்து அதே பெட்டியில் பயணித்து வருபவர்கள் போல அவரவர் இருக்கைகளில் ஆழ வேரூன்றியிருப்பவர்களே அநேகம். விதிவிலக்கான வெள்ளந்திகளும் உண்டு. ஆனால், அதிமுகவுக்குள் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களைப் போல அந்த எண்ணிக்கை குறைவுதான்.
இருக்கை வசதிப் பெட்டியாக இருந்தாலும், படுக்கை வசதிப் பெட்டியாக இருந்தாலும் ‘ஏசி கோச்’ என்றால் ஒரு பணக்காரக் களை அவசியம். ரயிலில் ஏறுவதற்கு முன்பு சாதாரணமாகத் தென்படுபவர்களுக்குக்கூட ஏசி கோச்சில் ஏறி அமர்ந்தவுடன், அரியணை ஏறும் அரசர்களின் மிடுக்கு வந்து விடும்.
சிறிதளவேனும் சிநேக பாவம் தொற்றிக்கொண்டால் அந்தக் களை கலைந்துவிடும் என்று சென்றடையும் இலக்கு வரும்வரை சிலை போலவே அமர்ந்திருப் பார்கள். ஒருவேளை உரக்கச் சிரிக்கிறார்கள் என்றால், ஓடிடியில் ஸ்டாண்ட்-அப் காமெடிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என நாம் உத்தேசிக்கலாம்.
‘பாரத விலாஸ்’ ரயில்: மாறாக, இரண்டாம் வகுப்பு சாதாப் பெட்டிகள் எல்லா வகையிலும் சுவாரசியமானவை - அதிலும் நீண்ட தூரம் செல்லும் ரயில்கள் வழங்கும் அனுபவங்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இப்போதைய பெயரைச் சொன்னால் இடம் போதாது.
எனவே, சென்னை சென்ட்ரல் டு நயி தில்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் என்று மட்டும் குறிப்பிடலாம். சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா மற்றும் ஏகப்பட்டோர் நடித்த ‘பாரத் விலாஸ்’ படத்தின் பயண வடிவமாக இந்த ரயிலைச் சொல்லலாம். தமிழ்ப் பயணிகளுடன் பிற மாநிலப் பிரயாணிகளும் தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் பயணம் அது.
கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ படத்தில் வருவதுபோல பயண மொழி ‘மல்ட்டி லிங்குவ’லாகவே இருக்கும்.
“க்யா ஹால் ஹை பாபு! ரொம்ப நாளா திக்தா நஹி?” என்று பழைய நண்பர்களைப் பார்த்தவுடன் பன்மொழியில் பாசம் பொழிவார்கள்.
“சேச்சே… அப்படி ஒண்ணும் லேது பாபு. கொஞ்சம் வேலையா ஒஸ்தானு நானு” என்று ஒருங்கிணைந்த ஆந்திர நண்பர் சிரிப்பார். அறிமுகமில்லாதவர்கள்கூட அரை மணி நேர ‘அவதானிப்பு’க்குப் பின் அன்புடன் அளவளாவத் தொடங்கிவிடுவார்கள்.
ரயில் உணவு: ரயிலிலும் நிலையங்களிலும் விற்கப்படும் தின்பண்டங்களுக்கென தனித்த மணம், ருசி உண்டு. சமரசம் செய்துகொண்டால், பசியின்றி பயணிக்கலாம். சிலர் வயிற்றுக்குப் பாதகம் நேரக் கூடாது எனக் கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். பெருந்தொற்று அச்சம் உருவாகாத காலத்தில் சக பயணிகளுடன் உணவு வகைகள் பரிமாறிக்கொள்ளப்படும்.
பயணத்தின் போது சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் குறித்து தமிழின் முதல் பயண எழுத்தாளரான சே.ப.நரசிம்மலு நாயுடு, ‘ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்’ நூலில் பட்டியலிடுகிறார். தவிர்க்க வேண்டிய வஸ்துகள், மனிதர்களையும்தான்.1889இல் எழுதப்பட்ட அந்த நூல் இன்றைக்கும்கூட பயண வழிகாட்டியாக இருக்கிறது.
எல்லாம் சரி. முன்பதிவில்லாத மூன்றாம் வகுப்புப் பெட்டி? ஏ.கே.செட்டியார் தொகுத்து வெளியிட்ட, ‘தமிழ்நாடு: நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்’ நூலில் ‘பூலோக நரகம்’ (1918) கட்டுரையில் திரு.வி.க இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘பூலோக நரகம் என்பது யாது? அஃது இருப்புப் பாதை மூன்றாம் வகுப்பு வண்டித் தொடர்.’ இன்றைக்கும் அந்நிலையில் பெரிய மாற்ற மில்லை என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன?