

‘வடிவுக்கு வளைகாப்பு’ திரைப்படத்தில் சாவித்திரி பாடிய பாடலிலிருந்து சில சுவையான வரிகள்:
(பாடியவர் பி.சுசீலா)
சாலையிலே புளியமரம்
ஜமீன்தாரு வச்சமரம்
ஏழைகளைக் காக்கும் மரம்
எல்லாருக்கும் உதவும் மரம்!
ஆடுமாடு கூட்டங்களை
ஆதரிக்க தழை கொடுக்கும்
அசலூரு சென்றவருக்கு
அருமையாக நிழல் கொடுக்கும்!
பெண்கள் கூட்டமாகப் பாடும் இந்த கோரஸ் பாட்டில்தான் எவ்வளவு இனிமை! எங்கள் ஊரில் நெடுஞ்சாலை ஓரம் மிகப்பெரிய புளியமரம் நின்றிருந்தது. பல தலைமுறைகளைப் பார்த்த மரம். அந்த இடத்தின் பெயரே புளியமர ஸ்டாப்.
புளியமர நிழலில் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழிலாளர்களையும் மாடுகளுக்கு லாடம் அடிப்போரையும் பேருந்துக்குக் காத்திருப்போரையும் காணலாம்.
இன்று புளியமர ஸ்டாப்பும் இல்லை. புளியமரமும் இல்லை. குடிநீர் குழாய் பதிக்க, மின்கம்பங்கள் நட, சாலையை விரிவுபடுத்த என்று ஏதேதோ காரணம் காட்டி மரத்தை மட்டுமல்ல அங்கே விரிந்து பரந்திருந்த நிழலையும் அல்லவா வெட்டிவிட்டார்கள். அரை நூற்றாண்டு நிழல் ஒரே நாளில் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.
அரியவகை மரங்களை அழிவிலிருந்து காக்கும் பொருட்டே அவை கோயில்களின் தலவிருட்சங்களாக ஆக்கப்பட்டன போலும்.
பிழைத்த தென்னந்தோப்பு: பாரதி புதுவையில் வாழ்ந்திருந்த காலத்தில் கடும் புயலும் மழையும் மாறி மாறி அடித்து வீடுகள் எல்லாம் இடிந்து வீழ்ந்தன. மரங்கள் வேரோடு வீழ்ந்து ஊரே அலங்கோலமாகிவிட்டது.
பாரதி புதுவையைச் சுற்றிவந்தார். வழக்கமாகத் தாம் தனிமை நாடிச் செல்லும் தென்னந்தோப்பில் மட்டும் ஒரு சில மரங்களே விழுந்து சீராகக் காட்சி தந்தது. அது ஏழையின் தென்னந்தோப்பு. ஆகவே, பராசக்தி அதைக் காத்தாள் என்று குதூகலித்த பாரதி, ‘பிழைத்த தென்னந்தோப்பு’ என்கிற பெயரில் ஒரு கவிதையே பாடிவிட்டார்:
வயலினிடையே - செழுநீர் மடுக்கரையினிலே
அயலெவருமில்லை - தனியே ஆறுதல் கொள்ளவந்தேன்
காற்றடித்ததிலே மரங்கள் - கணக்கிடத்தகுமோ
நாற்றினைப் போலே சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே
சிறிய திட்டையிலே உளதோர் தென்னஞ்சிறுதோப்பு
வறியவனுடைமை அதனை வாயு பொடிக்கவில்லை
வீழ்ந்தன சிலவாம் மரங்கள் மீந்தன பலவாம்
வாழ்ந்திருக்கவென்றே அதனை வாயு பொறுத்துவிட்டான்!
அறிவுச் செல்வத்தைக் காத்த மரங்கள்! - தினை என்கிற சிறுதானியமும், ஓங்கி நிற்கும் பனைமரமும் ஆதித்தமிழருடன் சேர்ந்தே வாழ்ந்துவந்தாலும் அவற்றின் மீது அக்கறை கொள்வாரில்லை. பழந்தமிழரின் அறிவுச் செல்வம் பனை ஓலைச் சுவடிகளாக, ஏடுகளாக நூலால் கட்டிவைத்துப் பாதுகாக்கப்பட்டது.
இலக்கு என்னும் பனை ஓலையின் பெயரே இலக்கணம் இலக்கியமாயிற்று என்றோர் ஆய்வு குறிப்பிடுகிறது. வீட்டோலை, ஏட்டோலை, தூது ஓலை, சாவோலை, காதோலை, மணவோலை, மாராய (பூப்பு) ஓலை என்று தமிழரின் கல்விக் கருவூலத்தைப் பனை மரங்கள் பாதுகாத்து வந்திருக்கின்றன. பனைமரங்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசும் கிராமப்புறத் தொழில்முனைவோரும் களமிறங்கியிருப்பது பதநீராக இனிக்கும் செய்தி.
‘பனைமரமே பனைமரமே ஏன் வளர்ந்தாய் பனைமரமே’ என்று பாடாத பள்ளிக் குழந்தைகளே அக்காலத்தில் இல்லை.
மரங்கள் பற்றிய பாடல்களை இப்போதெல்லாம் குழந்தைகள் பாடுவதில்லை. தங்களைச் சுற்றியுள்ள மரங்களின் பெயர்களே குழந்தைகளுக்குத் தெரியவில்லை. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா வாழைமரம் பற்றி எப்படிப் பாடுகிறார் பாருங்கள், ‘கல்யாண வாசலிலே கட்டாயம் நிற்கும் மரம்!’
கல்வி அறிவு சொற்பமாகவே வாய்க்கப்பெற்ற கிராமத்து மக்கள், மின்விளக்கு வசதி முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டபோது மின் கம்பங்களை ‘லைட்டுமரம்’ என்றும் மின்விளக்குகளை ‘வாழைத்தண்டு விளக்கு’ என்றும் குறிப்பிட்டனர். தொலைத்தொடர்பு கம்பிகளுடன் நடப்பட்ட கம்பங்களை, தந்திமரம் என்றே அழைத்தனர்.
யானைப்பூச்சி: எங்கள் ஊரில் விளாமரங்கள் இருந்தன. விளாம்பழத்தில் வெல்லமிட்டுப் பிசைந்து சாப்பிட்டால் புளிப்பும் இனிப்புமாக ஒரு புதுச்சுவை கிடைக்கும். விளாம்பழம் ஓட்டோடு ஒட்டாது. ‘விட்டதடா ஆசை விளாம்பழத்து ஓட்டோடே’ என்பது பற்றற்ற நிலையைக் குறிக்கும் பழமொழி.
யானைப்பூச்சி விளாம்பழத்தை ஓட்டை போட்டு, உள்ளே நுழைந்து, பழத்தை முழுவதுமாகத் தின்றுவிடும். இதைத்தான் யானை விழுங்கிய விளாம்பழம் என்பார்கள்.
மரங்கள் கவனிக்கின்றன! - சங்கப் பாடல் வரிகள் ஒன்று தன் வீட்டெதிரே சிறுவயதிலிருந்தே விளையாடிய மரத்தின் கீழ் நின்று தன் காதலை வெளிப்படுத்த வெட்கிய பெண்கள் பற்றி குறிப்பிடுகிறது. ஆம், மரங்கள் நம்மைப் பார்க்கின்றன. நாம் பேசுவதைக் கேட்கின்றன.
காய்க்காத தென்னைமரங்களின் கீழ்நின்று பேசினால் அவை காய்த்துவிடும் என்பது கிராமத்து நம்பிக்கை. அவை காய்க்க வேண்டுமானால் அவற்றின் கீழே மனிதர்களின் பேச்சுக் குரல் கேட்க வேண்டுமாம். மரங்களின் கீழ் நின்று அழுதால் அவை பட்டுப் போய்விடும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
சென்னையில் கேட்ட குயிலோசை: சென்னையின் பழைய ஒளிப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா? மயிலாப்பூர் தென்னை மரங்கள் சூழக் காட்சிதரும். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருமருங்கும் மரங்கள் குடைபிடிக்கும். பாரிமுனையில் மரங்கள் அடர்ந்து எழில் மிகுந்து தோன்றும். ஒரு காலத்தில் தலைமைச் செயலகத்தின் உள்ளே ஏராளமான நாவல் மரங்கள் இருந்தன என்றால் நம்பமுடிகிறதா?
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதி மாந்தோப்பு போல மரங்கள் மிகுந்திருந்தது. எப்போதும் குயிலோசை கேட்டபடி இருக்கும். இப்போது சென்னை நகருக்குள் மரங்களின் கூட்டமும் இல்லை; குயிலோசையும் குறைவு.
பிரமிளின் வார்த்தைகளில் சொல்வதானால் சென்னையில் காதில் விழுவது ‘இரும்பின் கோஷம்’ ஒன்றுதான்!
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com