

இந்தியாவில் மிக முக்கியமான திருமணம் ஒன்று ஜூலை 6 அன்று மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணசாமியும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அனன்யா சாவந்த்தும் தங்கள் திருமணம் மூலம் மிகப் பெரிய நம்பிக்கையைச் சமூகத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
மணமக்கள் இருவரும் டவுன் சிண்ட்ரோம் குறைபாடுடையவர்கள். சில நாடுகளில் டவுன் சிண்ட்ரோம் குறைபாடுடையவர்கள் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இது முதல் முறை என்பதால் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக இருக்க முடியாது, திருமணம் செய்யக் கூடாது என்றெல்லாம் சொல்லப்பட்டுவந்த நிலையில், அந்தக் கருத்துகளைப் பொய்யாக்கும் விதத்தில் விக்னேஷ், அனன்யா திருமணம் முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.
டவுன் சிண்ட்ரோம் என்பது கருவிலேயே ஏற்படும் குறைபாடு. மனிதர்களுக்கு 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். இவற்றில் 22 ஜோடிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். 23 ஆவது ஜோடியில் ஏற்படும் வேறுபாடுதான் ஆண், பெண் என்கிற பாலினத்தைத் தீர்மானிக்கிறது. 21ஆவது ஜோடியில் மூன்று குரோமோசோம்கள் இருந்தால், அந்தக் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் குறைபாடு ஏற்படும். இது தாயிடமிருந்தோ தந்தையிடமிருந்தோ வந்திருக்கலாம்.
பாதிப்புகளின் தன்மையைப் பொறுத்து டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பயிற்சி, கல்வி அளிப்பதன் மூலம் அவர்களும் மற்றவர்களைப் போல ஓரளவு இயல்பான வாழ்க்கை வாழ முடியும். துபாயில் பணியாற்றும் விக்னேஷ் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.
இங்கிலாந்தில் படிக்கும் விக்னேஷின் தங்கையும் அனன்யாவின் அக்காவும் தோழிகள். இருவரும் தங்கள் குடும்பங்களில் பேசி, ஓராண்டுக்குப் பிறகு இந்தத் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு அனன்யா துபாய்க்குச் சென்றுவிடுவார்.
அமெரிக்காவில்கூடச் சிறப்புத் தேவையுள்ளவர்கள் திருமணம் செய்துகொள்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. இந்தியாவில் விக்னேஷ்-அனன்யா, டவுன் சிண்ட்ரோம் குறைபாடுடையவர்களும் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். இனி இது தொடரும்.