

ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஹவில்தார் ஒருவர் எங்கள் கிராமத்தில் இருந்தார். அவரது மீசையிலும் ஒரு ராணுவ ஒழுங்கு துலங்கும். ‘ஆர்மியில் எனக்கு மீசை அலவன்ஸ் கொடுத்தார்கள் தெரியுமா?’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்.
“மீசையைக் கத்தரித்து, சீவிச் சிங்காரிப்பது ஒரு சள்ளை பிடித்த வேலை. ஆனால், அதிகாரிகளுக்கு முன்னால் நான் சல்யூட் அடித்து நிற்கும்போது உங்க மீசையும் அட்டென்ஷனில் நிற்குது பிரதர் என்று நண்பர்கள் சொல்லும்போது பெருமையாக இருக்கும்!” என்பார்.
மன்னர் பரம்பரையா? - தஞ்சாவூர் கலெக்டரின் டபேதார் நடராசனின் மீசை அந்தக் காலத் தஞ்சையில் பிரபலம். மன்னர்களின் கிரீடம் போல கட்டிய முண்டாசு, வெண்ணிற கோட், கால்சராய், கம்பீரமான கிருதா, கிருதாவுடன் சங்கமிக்கும் ஏர் இந்தியா மகாராஜா மீசை, நடையில் பணிவு கலந்த மிடுக்குடன் காணப்படுவார்.
தஞ்சையில் நடைபெற்ற கலைவிழா ஒன்றில் வெளிநாட்டுக் குழுவினர் விருந்தினராக இடம்பெற்றனர். அப்போது ஓர் அலங்காரத் தட்டில் குளிர்பானக் கோப்பைகளைக் கொண்டுவந்து குழுவினருக்கு வழங்கினார் நடராசன்.
குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு ஜெர்மன் அறிஞர் நடராசனின் மீசையைக் கண் கொட்டாமல் பார்த்தார். பிறகு கலெக்டரிடம், ‘இவர் மராட்டிய அரச குடும்பத்தவரா?’ என்று வினவியபோது, நடராசன் சிரித்துவிட்டார்.
ஜமீன்தார் மீசை: பள்ளிக்கூடம் போகிற வழியில்தான் ஜமீன்தார் பங்களா இருந்தது. பெயர்தான் பங்களா, அது ஒரு பாழடைந்த கட்டிடம். பங்களாவின் நீண்ட வராந்தாவில் ஓர் அரதப் பழசான நாற்காலியில் ஜமீன்தார் உட்கார்ந்திருப்பார்.
அவர் எந்த ஊர் ஜமீன்தார், அவர் பெயர் என்ன என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. குச்சி போன்ற உடம்பு. ஆனால், ரொம்பப் பெரிய மீசை! அவ்வளவு பெரிய மீசையை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. தெருவை அவர் வேடிக்கை பார்ப்பார். தெரு அவரை வேடிக்கை பார்க்கும்.
மீசை வாத்தியார்: பாரதியார் மாதிரியே எங்கள் பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியர் இருந்தார். அவர் பெயர் மீசை வாத்தியார். கருகருவென்று சுழன்று ஈட்டிமுனை போல் நிற்கும் அந்த மீசை எதிர்ப்படுபவர்களை ஒரு கணம் தடுமாறச் செய்துவிடும்.
சாயங்கால வேளைகளில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் சாரணர் சீருடையில் கழுத்தில் தொங்கும் விசிலுடன் போக்குவரத்தை ஒழுங்கு செய்வது அவர் பொழுதுபோக்கு. அவரது மிரட்டல் உருட்டல்கள் மீசை அசைவுகளுக்கு யாராக இருந்தாலும் வழிவிட்டு ஒதுங்கத்தான் வேண்டும்.
மீசை மேல் ஆசை வைக்காதே தமிழா! - ‘மீசைமேல் ஆசை வைக்காதே தமிழா. விரால் மீனுக்கும்தான் மீசை இருக்கிறது. வீரம் வந்துவிடுமா அதற்கு?’ என்று கேட்கிறார் பாரதியார், தமது மீசையை முறுக்கியபடி.
பாரதியின் மீசை ரௌத்ரம் பழகிய மீசை. பாரதியின் மீசையை வ.ரா. இப்படி வர்ணிக்கிறார்: “பாரதியாருக்கு மீசை உண்டு. அது பார்க்க ரொம்ப நேர்த்தியாக இருக்கும். கண்ணைக் குத்தும் கெய்சர் மீசை அல்ல. கத்தரிக்கோல் பட்ட ‘தருக்கு’ மீசை அல்ல. தானாக வளர்ந்து, பக்குவப் பட்டு அழகும் அட்டகாசமும் செய்யும் மீசை. அவரது வலது கை எழுதாத நேரத்தில் எல்லாம் அநேகமாக மீசையிலிருக்கும். மீசையை முறுக்குவதாகத் தோன்றாது. மீசைக்கு ‘டிரில்’ பழக்கிக் கொடுப்பது போலத் தோன்றும்.”
ரசிகமணியின் மீசை: ரசிகமணி டி.கே.சி.யின் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் அந்த மீசையின் அழகில் மனதைப் பறிகொடுக்காதவர்கள் உண்டா? டி.கே.சி.யின் முகத்திலே தவழும் மந்தகாசத்தில் அவர் மீசைக்கும் பங்குண்டு. கு.அழகிரிசாமி தமது கட்டுரை ஒன்றில் டி.கே.சி.யின் மீசை, ‘பொன் வெள்ளை மீசை’ என்று வர்ணிப்பார்.
கி.ரா. தன் ‘அன்னப்பறவை’ எனும் டி.கே.சி. பற்றிய நூலில் இப்படி எழுதுகிறார்: “ஒரு குதிரை வண்டி எங்களைக் கடந்துபோனது. அதில் ரசிகமணி உட்கார்ந்திருந்தார். டி.கே.சி.யின் சிவப்பு முகத்தில் ஜரிகை வெள்ளியாக மினுக்கும் கொத்து மீசையும் காக்கை இறகுபோல் கருத்த புருவமும் அப்படியே மனதில் பதிந்து போனது.”
மீசைக்குள் உடம்பு! - பல ஆண்டுகளுக்கு முன்னால் ராஜாஜியைக் கூட்டமொன்றில் பேசுவதற்கு அழைக்க ம.பொ.சி. போனபோது, அவர் மறுத்துவிட்டாராம். இதைப் பற்றிப் பல ஆண்டுகள் கழித்து நினைவுகூர்ந்த ராஜாஜி, “அப்போது உங்களுக்கு உடம்புக்குள் மீசை இருந்தது. இப்போதோ மீசைக்குள் உடம்பு இருக்கிறது” என்றாராம்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தஞ்சையில் நடந்த விழாவுக்கு வருகை தந்த ம.பொ.சி.யை நேரில் பார்த்ததை மறக்க முடியவில்லை. அவர் மீசை பயமுறுத்தும் மீசை அல்ல. அவர் பேச்சை ஒரு மணி நேரம் மெய்மறந்து கேட்ட பிறகுதான் புரிந்தது குழைவோடும் பணிவோடும் தமிழின் நயத்தைச் சொல்லிச் சொல்லி வளர்த்த மீசை அது!
தமிழ் மணவாளன் கவிதை ஒன்றில் பாரதிதாசனின் மீசை விரித்துவைத்த புத்தகம் போல் இருப்பதாக எழுதியிருந்தது நயம். ஒருமுறை ஜே.கே. இப்படி மேடையில் முழங்கினார்: “ஏன் மீசை வளர்க்கிறேன் என்று கேட்கும் நண்பர்களே, நான் ஒன்றும் மீசை வளர்க்கவில்லை. மீசைதான் என்னை வளர்க்கிறது! மீசை என் ஜீவிதம்!”
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com