மூங்கில் பொருள்கள்: பிடித்த வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி!

மூங்கில் பொருள்கள்: பிடித்த வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி!
Updated on
1 min read

இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த மூங்கிலின் பயன்பாடு இன்று இல்லை. மூங்கிலை வைத்துக் கூடை, முறம், விசிறி, தட்டு, ஜன்னல் திரை என்று செய்துகொண்டிருந்தவர்கள் எல்லாம் வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எஞ்சியிருக்கக்கூடிய ஒருசிலரில் கோவையைச் சேர்ந்த லட்சுமணனும் ஒருவர்.

“மூங்கில் குச்சியும் ஓலையும் வைத்துதான் நாங்கள் பொருள்களை உருவாக்குகிறோம். இது எங்களின் பரம்பரைத் தொழில். என் தாத்தா முருகேசனிடமிருந்து நான் தொழிலைக் கற்றுக்கொண்டேன். என்னிடமிருந்து என் மனைவி கற்றுக்கொண்டார். 42 ஆண்டுகளாக இருவரும் மூங்கில் பொருள்களைச் செய்துதான் வருமானத்தை ஈட்டிவருகிறோம்.

முகூர்த்த நாள்களில் கல்யாணக் கூடைகளுக்கு மவுசு அதிகம். அப்போது பொருள்களின் விலை கொஞ்சம் அதிகம் வைப்போம். மற்ற நாள்களில் விலையைக் குறைத்துவிடுவோம்” என்று சொல்லும் லட்சுமணன், மூங்கில் பொருள்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தின் காரணமாகத் தங்கள் மகன்களை படிக்க வைத்து, வேறு வேலைகளுக்கு அனுப்பிவிட்டதாகச் சொல்கிறார்.

வயதாகிவிட்டதாலும் அதிக வருமானம் வராத தொழிலில் கஷ்டப்பட வேண்டாம் என்று மகன்கள் கூறினாலும் தன் மனைவியின் விருப்பத்தின் காரணமாகவே மூங்கில் பொருள்களைச் செய்து விற்பதாகச் சொல்கிறார், இவர்.

“மூங்கிலை நாங்கள் மொத்த விற்பனை சந்தையில் வாங்கிக் கொள்வோம். ஒரு கூடையைச் செய்து முடிக்க இரண்டு நாள்கள் ஆகிவிடும். பெரிய கூடையாக இருந்தால், செய்து முடிக்க கூடுதல் நாள்களாகும். கூடைகளைச் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரம், அவற்றுக்குப் பயன்படுத்தும் மூங்கிலின் விலை ஆகியவற்றை வைத்தே விலையை நிர்ணயம் செய்வோம்.

பெரிய கடைகளில் மக்கள் விலையைக் குறைத்துக் கேட்க மாட்டார்கள். ஆனால், எங்களிடம் விலையைக் குறைத்துதான் வாங்குவார்கள். இப்போது மூங்கில் பொருள்களைப் பயன்படுத்துகிறவர்கள் குறைவாக இருப்பதால், குறைந்த விலை என்றாலும் விற்றுவிடுவோம். 10 கூடைகளை விற்றால், மூன்று கூடைகள் மட்டுமே நாங்கள் சொன்ன விலைக்குப் போகும். பிடித்த வேலை என்பதால் மகிழ்ச்சியாகச் செய்கிறோம்” என்கிறார் லட்சுமணன்.

ஞெகிழிப் பொருள்களின் பயன்பாடு குறையும் காலம் வரும்போது, மூங்கில் பொருள்களின் பயன்பாடு அதிகரிக்கும். ஆனால், அது எப்போது வரும்?

எழுத்து, படம்: வே.அ.ஹரிஹரன், பயிற்சி இதழாளர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in