

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் மேம்பட்ட நிலையில் நாம் அனைவரும் மெய்நிகர் உலகத்துக் குள் வாழ ஆரம்பித்துவிட்டோம். இப்படி மனித இனம் வளர்ச்சி, சௌகரியம் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துகொண்டிருக்கும்போது, நம் குழந்தைகளைப் பற்றிய கவலை ஒன்றும் சேர்ந்தே வருகிறது. அவர்கள் திறன்பேசி, கணினியில் செலவிடும் நேரம், அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் யோசிக்கும்போது அச்சமாக இருக்கிறது.
நண்பர் ஒருவர், தனது குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ‘கிரஷிங் கிரஞ்சி’ காணொளிகள் குறித்து வருத்தப்பட்டார். அதில் உணவுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் எல்லாம் டயருக்கு அடியில் வைத்து நசுக்கப்படுகின்றன. இது போன்ற வன்முறை செயல்களை உள்ளடக்கிய காணொளிகள் குழந்தைகளால் விரும்பிப் பார்க்கப்படுவதற்கு என்ன காரணம்?
குழந்தைகளின் உலகம் ஆர்வமும் ஆச்சரியமும் கனவுகளும் நிறைந்ததாகவே இருக்கும். அதனால்தான் அவர் களிடமிருந்து எப்போதும், ‘ஏன், எதற்கு, எப்படி’ என்கிற கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவர்களால் ஒரு குச்சியைக் குதிரையாகவும் உடைந்த பொம்மையைப் பறக்கும் தட்டாகவும் நாற்காலியை ரயிலாகவும் கற்பனை செய்துகொள்ள முடியும். மகிழ்ச்சியாக அந்தக் கற்பனைகளில் திளைக்கவும் முடியும்.
குழந்தைகள் வண்ணங்களையும் ஒலி களையும் மிகவும் விரும்புவார்கள். அதனால்தான் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் காணொளிகள், வீடியோ கேம்கள் போன்றவற்றில் வண்ணங்களையும் ஒலிகளையும் முதன்மையாக வைத்துக்கொள்கிறார்கள். இவை எல்லாம் சிலிர்ப் பையும் கிளர்ச்சியையும் தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
அதனால், குழந்தைகள் மீண்டும் மீண்டும் சலிப்பின்றிக் காணொளிகளைக் கண்டு ரசிக்கிறார்கள். பொருள்கள் வீணாவது குறித்து அவர்கள் சிந்திக்க இடம் கொடுக்காத அளவுக்கு மற்ற விஷயங்களால் அவர்களைத் திணறச் செய்துவிடுகின்றன இந்தக் காணொளிகள்.
வீடியோ கேம்களில் ஒவ்வொரு முறை ஜெயிக்கும்போதும், அங்கே பரிசு (reward) கிடைக்கும். தோல்வியுற்றால், அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இதுதான் இயல்பான வாழ்க்கைக்கும் மெய்நிகர் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம்.
இந்த மெய்நிகர் உலகம் மிக சவுகரியமாக இருப்பதால், உண்மையான உலகத்துக்குள் வர, அசல் உலகத்தின் சவால்களை எதிர்கொள்ள அவர்கள் மனம் விரும்புவதே இல்லை. தொடர்ந்து காணொளிகளைப் பார்ப்பதால் விழுமியங்கள் சார்ந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளும் வரலாம். சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு, தன்னைச் சுற்றி யிருப்பவர்களிடம் பழகுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கையாள்வது எப்படி? - புதிய கண்டுபிடிப்புகளை யார் முதலில் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள், அவற்றை யார் முதலில் வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள் என்கிற போட்டிதான் நடந்து கொண்டிருக்கிறது. நாமும் இவற்றுடன் சேர்ந்தேதான் பயணிக்க வேண்டி இருக்கிறது. அதனால், குழந்தைகளைக் கணினி, திறன்பேசியைத் தொடவே கூடாது, தேவையற்ற காணொளிகளைப் பார்க்கவே கூடாது என்று சொல்வது பலனளிக்காது.
அப்படி ஒட்டுமொத்தமாகத் தவிர்க்கும்போது, நண்பர்களைவிடத் தான் மேலானவர் அல்லது கீழானவர் என நினைப்பதற்கான சாத்தியம் அதிகம். இது அவர்களின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. அதனால், இதைக் கவனமாகக் கையாண்டு, குழந்தைகளை முறைப்படுத்துவது நம் கடமை.
குழந்தைகள் கணினி, திறன்பேசியில் செலவிடும் நேரத்திற்குக் கட்டுப்பாடு வையுங்கள். மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளை விளையாடச் சொல்லுங்கள்.
குழந்தைகளிடம், ‘அதை விளையாடாதே, இதைப் பார்க்காதே, அப்படிச் செய்யாதே’ என்றால், அந்த விஷயங்களைச் செய்து பார்ப்பதற்கான ஆர்வம்தான் அதிகமாகும். எனவே, முடிந்தவரை இந்த எதிர்மறை வாக்கியங்களைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அதைச் செய்யச் சொல்ல வேண்டும். இது குழந்தைகளிடம் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும்.
வீடியோ கேம் ஆடாதே என்பதற்குப் பதிலாக, ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படித்துப் பார் என்று சொல்லலாம். அகராதியில் தினமும் ஐந்து வார்த்தைகளுக்குப் பொருள் கண்டறியச் சொல்லலாம். பிக்ஷ்னரி விளையாடச் சொல்லலாம். சைக்கிளில் கால் மணி நேரம் சுற்றிவிட்டு வரச் சொல்லலாம்.
ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்து, விவாதம் செய்யச் சொல்லலாம். செய்தித்தாள்களைப் படித்து, முக்கியமான விஷயங்களைச் சொல்லச் சொல்லலாம். குழந்தைகள் இவற்றைச் செய்யும் போது சிறிய பொருள்களைப் பரிசளிக்கலாம்.
உணவுப் பொருள்களை வீணாக்காதே என்று சொல்வதைவிட, இந்த உணவுப் பொருள்கள் கிடைக்காமல் எவ்வளவு குழந்தைகள் இருக்கி றார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டலாம். எது செய்ய வேண்டாம் என்பதற்குப் பதிலாக, என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதுதான் சிறந்த வழிமுறை. அதே போலக் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அப்படி நாமும் நடந்துகொள்ள வேண்டும் என்பதும் முக்கியம்.
‘என் குழந்தை ஸ்பெஷல்’ என்கிற எண்ணத்தைக் கைவிடுங்கள். உங்கள் குழந்தைகளைச் சமுதாயத்தில் உள்ள குழந்தைகளில் ஒருவராகவே பாருங்கள், வளர்க்க முயலுங்கள். அதீத எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளாமல், இயல்பாக வளர்வதற்குக் குழந்தைகளை அனுமதியுங்கள். அப்போது குழந்தைகளைக் கையாள்வது சிரமமாக இருக்காது.
- கட்டுரையாளர்: மனநல ஆலோசகர், ‘நான் எனும் பேரதிசயம்’ நூலின் ஆசிரியர்.