திண்ணைப் பேச்சு 05: கைதட்டல் வேண்டாத, காலத்தை வென்ற கவிதைகள்!

திண்ணைப் பேச்சு 05: கைதட்டல் வேண்டாத, காலத்தை வென்ற கவிதைகள்!

Published on

பாரதி தமக்குப் பிடிக்காத, மனநிறைவு தராத கவிதைகளை அப்படியே கிழித்துப் போட்டுவிடுவார் என்று எழுத்தாளர் யதுகிரி அம்மாள் சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்தச் செய்தியை அவர் எங்கும் பதிவு செய்யவில்லை. ஆனால், பாரதி இதை நிச்சயம் செய்திருப்பார் என்பதற்கு அவர் எழுத்தே ஆதாரமாக இருக்கிறது.

‘நீ எழுதுவது முதலில் வாய்க்கு வழங்குகிறதா என்று பார். அப்புறம் தெருவோடு போகிறவனுக்கு வாசித்துக் காட்டு. அவனுக்குப் புரிபடவில்லை என்றால் அதை அப்படியே கிழித்துப் போட்டுவிடு’ என்பதாக ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பாரதி.

மணிக்கொடி எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி தம் கவிதைகளில் தாமே மூழ்கி மயங்குபவர். அவற்றை வேறு யாரும் படித்துப் பாராட்ட வேண்டாம். தமக்கு மாலை போட வேண்டாம்.

கவிதை என்பது தானே பூவாகி மலர்ந்து நிற்கும் அனுபவம் என்கிற கருத்து, அவரிடம் வலுப்பெற்று வந்தது. பிறர் தமது கவிதைகளைச் சிலாகிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவரிடமிருந்து அகன்றுவிட்டது.

படைப்பாளி என்கிற முறையில் இதுவரை யாரும் எட்ட முடியாத சிகரம் நோக்கி அவர் பயணப்பட்டுவிட்டார். மலர்ந்து நிற்கும் ஒரு பூவின் இதழ்களின் எண்ணிக்கையில் ஒன்றினையாவது பூவை ரசிப்பவரின் கைதட்டலால் கூட்ட முடியுமோ? பூவாகி நிற்பதே போதும். இது கவித்துவத்தின் உச்சம்.

புதியதோர் படைப்புச் சித்தாந்தம். இந்தச் சித்தாந்தம் பிடிபட்டுவிட்டால் எந்தப் படைப்பாளியும் அங்கீகாரமும் விருதுகளும் தேடி அலையும் தேவை ஏற்படாது.

தமது அந்திம காலத்தில் தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் கிராமத்தில் வந்து தங்கியிருந்தார் பிச்சமூர்த்தி. எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் உடன் நான்கைந்து பேர் சேர்ந்து அவரைக் காணச் சென்றோம். வீட்டின் கதவு திறந்தே இருந்தது. பெரிய முற்றம். அதை ஒட்டி இருந்த கூடத்தில் பிச்சமூர்த்தி உட்கார்ந்திருந்தார்.

நீண்ட வெண்ணிறத் தாடி, வெற்றுடம்பு, ஒட்டிய வயிறு, உக்கிரமான சிவந்த கொடுக்காப் புளி கண்கள், சிவந்த தோற்றம். சித்த புருஷர்போல் உட்கார்ந்து குனிந்தபடி சிலேட்டில் பலப்பத்தால் ஏதோ எழுதியபடி இருந்தார். எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவர் மனைவி வருத்தத்துடன், “இப்படித்தான் ப்ரகாஷ், தினமும் சிலேட்டில் ஏதாவது எழுத வேண்டியது. எடுத்துப் படித்துவிட்டு இடி இடியென்று சிரிக்க வேண்டியது. பிறகு எழுதியதை அழிக்க வேண்டியது. மறுபடி எழுதி அதைப் படித்துவிட்டு கண்கலங்க வேண்டியது. சில நேரம் மல்லாக்கப்படுத்துக் கொண்டு விட்டத்தை வெறிப்பது. மறுபடி எழுதுவது. பாருங்க, எப்பவோ வச்ச காபியைக் குடிக்காமல் அப்படியே வச்சிருக்கார்” என்று சொன்னார்.

பேச்சரவம் கேட்டு பிச்சமூர்த்தி நிமிர்ந்தார். “அடடே, ப்ரகாஷா? எல்லாரும் வாங்க.”

“சிலேட்டில் என்ன எழுதுகிறீர்கள் சார்?”

“கவிதை” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

நான் சிலேட்டை எட்டிப் பார்த்தேன். நான்கே வரியில் ஓர் அற்புதமான கவிதை. கவிதை வரிகளை மறந்துவிட்டேன்.

என் கையிலிருந்த சிலேட்டை வெடுக்கென்று பிடுங்கி, அதை அப்படியே ஈரத்துணியால் துடைத்து அழித்துவிட்டார்.

ப்ரகாஷ் கேட்டார்.

“ஏன் இப்படி எழுதணும், அழிக்கணும்? அதுவும் இத்தனை அபாரமான கவிதைகளை?”

“அதோ பாரும் ப்ரகாஷ்” என்று முற்றத்துக்கு மேல் தெரிந்த வானத்தைக் காண்பித்தார்.

“அதோ, அங்கே தெரியும் மேகங்களைப் பார்த்தீரா ஓய்? அழகான வடிவங்கள். பார்ப்பதற்குள் கரைஞ்சுபோய் மறுபடி புதுசான வடிவங்கள்! கோட்டை, கொஞ்ச நேரத்தில் குட்டி முயல். நானும் அப்படித்தான் எழுதறேன். அழிக்கிறேன். ஆனந்தமாக இருக்கிறேன்”.

“நாங்கள் படிக்க வேண்டாமா?”

“வேண்டாம், என் கவிதைக்கு நான் போதும்! எனக்கும் என் கவிதை போதும்!”

தாடியை நீவிவிட்டுச் சிரித்தார் ந.பி.

வினோபா பாவேயிடம் இப்படி ஒரு பழக்கம் இருந்தது.

கவிதை ஒன்றினைத் தனக்குத் திருப்தி ஏற்படும்வரை திருத்தி திருத்தி எழுதி, கசக்கிப் போட்டுக்கொண்டே இருப்பாராம்.

கடைசியில் கவிதை நிறைவு தரும்போது வாய்விட்டுச் சிரித்து ‘பலே! பேஷ்!’ என்பாராம். அடுத்த நொடி தன் முன்னால் எரியும் தீபத்தில் பொசுக்கி சாம்பலாக்கிவிடுவாராம்.

அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த தாய் கேட்டாராம், “ஏன் இப்படிக் கஷ்டப்பட்டு எழுதியதை எரிக்க வேண்டும்?”

“ம். அவ்வளவுதான் அம்மா. அது பிறந்த பயனை அடைந்துவிட்டது. அதைப் படித்து அனுபவித்துவிட்டேன். மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன். வேறு என்ன வேணும் அம்மா?”

“என்னைப் போல் நாலு பேர் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டாமா?”

வினோபா தாயைப் பரிவோடு பார்த்தார். தன் கவிதையை நீட்டினார். தாயார் படித்துவிட்டு, “ஆஹா, எவ்வளவு அழகாக எழுதி இருக்கிறாய்!”

அவர் கையிலிருந்த தாளினை வாங்கி அதையும் தழலுக்கு இரையாக்கினார் வினோபா.

தாய்க்குப் புரிந்தது.

எழுதியவனுக்குத் திருப்தி கிடைத்துவிட்டது. இனி கவிதை எதற்கு? இனி அந்தக் கவிதைக்கும் கவிஞனுக்கும் என்ன கிடைத்தாலும் கவிதைக்கு வேண்டாத ஒன்றாகவே இருக்கும்!

ந.பிச்சமூர்த்தியும் வினோபாவும் கைதட்டல் வேண்டாத கவிதைகளை எழுதினார்கள்! காலத்தை வென்றார்கள்!

- thanjavurkavirayar@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in