கார் மெக்கானிக்: புதிருக்கு விடை தேடும் சுவாரசியமான வாழ்க்கை!

கார் மெக்கானிக்: புதிருக்கு விடை தேடும் சுவாரசியமான வாழ்க்கை!
Updated on
2 min read

புஷ்பாராணியின் பிஆர் மோட்டர்ஸ் வளசரவாக்கத்தில் இருக்கிறது. இவர் ஒரு கார் மெக்கானிக். இவரைப் புதிதாக அலைபேசியில் அழைப்பவர்கள், பெயரைச் சொன்னாலும் ‘சார்’ என்றே அழைக்கிறார்கள். ஒரு பெண்ணை மெக்கானிக்காக அவர்கள் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். நேரில் வரும்போதுதான் புஷ்பாராணியைக் கண்டு வாடிக்கையாளர்கள் வியக்கிறார்கள்.

“வண்டியைக் கொண்டு வருகிறவர்கள் எல்லாம், என்னிடம் ஒரு நேர்காணலை நடத்திட்டுதான் போறாங்க. சில நேரம் நான் ரொம்ப பரபரப்பா இருப்பேன். அப்போது மட்டுமே என்னால் பேச முடியாது. ஆனாலும் யாரும் தவறா எடுத்துக்க மாட்டாங்க. என் தொழில் நேர்த்தியைப் பார்க்கிறவங்க, அதற்குப் பிறகு வேறு எங்கும் போக மாட்டாங்க” என்கிறார் புஷ்பாராணி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் புஷ்பாராணி. விவசாயக் குடும்பம். நான்கு அக்காள்களுக்குப் பிறகு ஐந்தாவதாகப் பிறந்த பெண். அதுவே அவர் மீதான கவனிப்பு குறைந்ததற்குக் காரணமாகவும் அமைந்துவிட்டது.

ஒரு டாம்பாய் போல வளர்ந்தார். பட்டப் படிப்பு முடித்து சென்னையில் டேட்டா என்ட்ரி பணியில் சேர்ந்தார். நகரத்தில் ஆண்களைப் போல பேண்ட், சட்டை போட்டு முடியை வெட்டிக்கொண்டால், தொல்லை கொடுக்க ஆண்கள் அஞ்சுவார்கள் என எண்ணியவர், அப்படியே தன்னை மாற்றிக்கொண்டார்.

அக்கா மகனுக்காகத் தன் உழைப்பில் சேர்த்த பணத்தில் மெக்கானிக் தொழில் செய்ய கேரேஜ் அமைத்துக் கொடுத்தார். கோவிட் கால நஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல் அவர் விலகிவிட்டார். ஆனால், புஷ்பாராணிக்கு இந்தத் தொழிலை விட்டுவிட மனமில்லை.

அதனால் தானே இந்தத் தொழிலை நடத்த ஆரம்பித்தார். யாரும் செய்யாத ஒன்றை நாம் செய்கிறோம் என்கிற மனநிறைவு அவருக்குப் பிடித்துவிட்டது. ரிப்பேர் என்று ஒற்றை வார்த்தையில் வந்துசேரும் வண்டியில் என்ன சிக்கல் என்று ஆராய்வதும், அதைச் சரிசெய்வதும் ஒரு புதிருக்கு விடை காண்பதுபோல மிகவும் சுவாரசியமாக இருக்கிறது என்கிறார்.

மெக்கானிக் வேலையை யாரும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். பக்கத்தில் இருந்து கூர்ந்து கவனித்து நாமாகவே கற்றுக்கொண்டால்தான் உண்டு. அப்படிக் கற்றுத் தேர்ந்த பிறகு, புஷ்பாராணி தன்னிடம் வேலை செய்ய வருபவர்களுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறார்.

மற்ற துறைகளைப் போலவே இந்தத் துறைக்கும் பெண்கள் வரவேண்டும் என்று விரும்புகிறார். பெருந்தொற்றுக்குப் பிறகு இவரும் ஓர் உதவியாளரும் மட்டுமே வேலை செய்துவருகிறார்கள். வேலை அதிகமாக இருக்கும்போது தற்காலிகமாக வேலைக்கு ஆள்களைச் சேர்த்துக்கொள்கிறார்.

“கேரேஜ் முதலாளி என்பதால் மரியாதைக்கு ஒன்றும் குறைவில்லை. சிலர் பெண் என்பதால் பாகுபாட்டுடன் நடந்துகொள்வார்கள். இந்த வேலையில் இருக்கும் சவால் என்றால், அதிக எடையுள்ள பொருள்களைக் கையாள்வதுதான். வாடிக்கையாளர் திருப்தி இந்தத் துறையில் அவசியம் என்பதால் குறித்த நேரத்தில் வேலையை முடிக்க, சாப்பிடும் நேரத்தை கைவிட வேண்டியிருக்கும்.

எங்கோ தூரத்தில் இருந்து அழைக்கும் வாடிக்கையாளராக இருந்தாலும் அவசரம், உதவி என்று கேட்கும்போது மறுக்காமல் செல்ல வேண்டியிருக்கும். தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், குடும்பத்தோடு வெளியூர் போய்க் கொண்டிருந்தவர்கள் என நடுச் சாலையில் நின்ற பலருக்கு, பழுதைச் சரிசெய்து கொடுத்திருக்கிறேன்.

அவசியமான நேரத்தில் கிடைத்த உதவிக்கு நன்றி சொல்லி, செய்த வேலைக்கு அதிகமாகவே பணம் கொடுத்தவர்களும் உண்டு. ஒரு வீட்டுக்கு டெலிவரி கொடுக்கச் சென்றேன். அந்த வீட்டுப் பெண் அவ்வளவு மகிழ்ச்சியாக வரவேற்றார். போட்டோ எடுத்துக்கொண்டார். இப்போது அவர்களின் உறவினர்களும் என் வாடிக்கையாளர்கள். ஒவ்வொரு நாளும் விதவிதமான நெகிழ்வான, நிறைவான அனுபவங்களால் வாழ்க்கை இனிமையாக நகர்கிறது” என்கிறார் புஷ்பாராணி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in